8 April 2014

என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை!

மத்திய அரசுப் பணிகளில் சேர விரும்பும்  என்ஜினீயரிங் பட்டதாரிகள்,  மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் என்ஜினீயரிங் சர்வீசஸ்  தேர்வை எழுத வேண்டும்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கான பல்வேறு பணிகளில் என்ஜினீயரிங் படித்த மாணவர்களை சேர்ப்பதற்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) என்ஜினீயரிங் சர்வீசஸ் தேர்வை (IES) நடத்துகிறது. சிவில் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்ற மாணவர்கள் இந்தப் போட்டித் தேர்வை எழுதலாம்.

இந்தியன் ரயில்வே சர்வீஸ் ஆஃப் என்ஜினீயர்ஸ், இந்தியன் ரயில்வே ஸ்டோர்ஸ் சர்வீஸ், சென்ட்ரல் என்ஜினீயரிங் சர்வீஸ், இந்தியன் டிபன்ஸ் சர்வீஸ் ஆஃப் என்ஜினீயர்ஸ், இந்தியன் ஆர்டினன்ஸ் ஃபேக்டரிஸ் சர்வீஸ், சென்ட்ரல் என்ஜினீயரிங் சர்வீஸ் (சாலைகள்) குரூப் ஏ பணி, அசிஸ்டெண்ட் எக்ஸிகியூட்டிவ் என்ஜினீயர் (பார்டர் ரோட்ஸ் என்ஜினீயரிங் சர்வீஸ்) குரூப் ஏ பணி, அசிஸ்ட்டெண்ட் எக்ஸிகியூட்டிவ் என்ஜினீயர்  (பி அண்ட் டி பில்டிங் ஒர்க்ஸ்) குரூப் ஏ பணி, சர்வே ஆஃப் இந்தியா குரூப் ஏ சர்வீஸ், இந்தியன் இன்ஸ்பெக்ஷன் சர்வீஸ் (உதவி இயக்குநர் கிரேடு 1) ஆகிய பணிகள் சிவில் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கானவை.

இந்தியன் ரயில்வே சர்வீஸ் ஆஃப் மெக்கானிக்கல் என்ஜினீயர்ஸ், இந்தியன் ரயில்வே ஸ்டோர்ஸ் சர்வீஸ், சென்ட்ரல் பவர் என்ஜினீயரிங் சர்வீஸ் (கிரேடு ஏ), இந்தியன் ஆர்டினன்ஸ் ஃபேக்டரிஸ் சர்வீஸ், இந்தியன் நேவல் ஆர்மமெண்ட் சர்வீஸ், பாதுகாப்பு அமைச்சகத்தில் அசிஸ்ட்டெண்ட் எக்ஸிகியூட்டிவ் என்ஜினீயர் குரூப் ஏ, அசிஸ்ட்டெண்ட் நேவல் ஸ்டோர்ஸ் ஆபீசர் - கிரேடு 1 (இந்திய கடற்படை), சென்ட்ரல் எலெக்ட்ரிக்கல் அண்ட் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் சர்வீஸ், அசிஸ்டெண்ட் எக்ஸிகியூட்டிவ் என்ஜினீயர் (பார்டர் ரோட்ஸ் என்ஜினீயரிங் சர்வீஸ் - குரூப் ஏ), இந்தியன் டிபன்ஸ் சர்வீஸ் ஆஃப் என்ஜினீயர்ஸ், அசிஸ்டெண்ட் எக்ஸ்கியூட்டிவ் என்ஜினீயர் ஜிஎஸ்ஐ என்ஜினீயரிங் சர்வீஸ் கிரேடு ஏ, இந்தியன் சப்ளை சர்வீஸ் (ஜேடிஎஸ் குரூப் ஏ), இந்தியன் இன்ஸ்பெக்ஷன் சர்வீஸ் உதவி இயக்குநர் (கிரேடு-1) ஆகிய பணிகள் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கானவை.

இந்தியன் ரயில்வே சர்வீஸ் ஆஃப் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர்ஸ், இந்தியன் ரயில்வே ஸ்டோர்ஸ் சர்வீஸ், சென்ட்ரல் எலெக்ட்ரிக்கல் அண்ட் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் சர்வீஸ், இந்தியன் நேவல் ஆர்மமெண்ட் சர்வீஸ், இந்தியன் ஆர்டினன்ஸ் ஃபேக்டரிஸ் சர்வீஸ், சென்ட்ரல் பவர் என்ஜினீயரிங் சர்வீஸ் கிரேடு ஏ, இந்தியன் டிபன்ஸ் சர்வீஸ் ஆஃப் என்ஜினீயர்ஸ், அசிஸ்ட்டெண்ட் நேவல் ஸ்டோர்ஸ் ஆபீசர் (கிரேடு 1), பாதுகாப்பு அமைச்சகத்தில் அசிஸ்டெண்ட் எக்ஸிகியூட்டிவ் என்ஜினீயர் (கிரேடு ஏ), இந்தியன் சப்ளை சர்வீஸ் (ஜேடிஎஸ் குரூப் ஏ), இந்தியன் இன்ஸ்பெக்ஷன் சர்வீஸ் (அசிஸ்டெண்ட் டைரக்டர் கிரேடு 1)  ஆகிய பணிகள் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கானவை.

இந்தியன் ரயில்வே சர்வீஸ் ஆஃப் சிக்னல் என்ஜினீயர்ஸ், இந்தியன் ரயில்வே ஸ்டோர்ஸ் சர்வீஸ், இந்தியன் நேவல் ஆர்மமெண்ட் சர்வீஸ், பாதுகாப்பு அமைச்சகத்தில் அசிஸ்டெண்ட் எக்ஸிகியூட்டிவ் என்ஜினீயர் (குரூப் ஏ), சென்ட்ரல் பவர் என்ஜினீயரிங் சர்வீஸ் (குரூப் ஏ), இந்தியன் ரேடியோ ரெகுலேட்டரி சர்வீஸ் (குரூப் ஏ), அசிஸ்டெண்ட் நேவல் ஸ்டேர்ஸ் ஆபீசர் கிரேடு 1 (கடற்படை), இந்தியன் சப்ளை சர்வீஸ் குரூப் ஏ, இந்தியன் டிபன்ஸ் சர்வீஸ் ஆஃப் என்ஜினீயர்ஸ், இந்தியன் இன்ஸ்பெக்ஷன் சர்வீஸ் (அசிஸ்டெண்ட் டைரக்டர் கிரேடு 1), இந்தியன் டெலிகம்யூனிக்கேஷன் சர்வீஸ் குரூப் ஏ, ஜூனியர் டெலிகாம் ஆபீசர் (குரூப் பி), ஆகிய பணிகள் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கானவை.

என்ஜினீயரிங் பாடப்பிரிவுகளில் பட்டப் படிப்பை படித்திருக்க வேண்டும். இன்ஸ்ட்டியூஷன் ஆஃப் என்ஜினீயர்ஸ் அமைப்பு நடத்தும் ஏ மற்றும் பி பிரிவு தேர்வுகளை எழுதியிருக்க வேண்டும். இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயர்ஸ் அமைப்பு நடத்தும் கிராஜுவேட் மெம்பர்ஷிப் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் இத்தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். ஏரோ நாட்டிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா அமைப்பு நடத்தும் அசோசியேட் மெம்பர்ஷிப் தேர்வில் (பகுதி 1 மற்றும் 2 அல்லது ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவுகள்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். லண்டனில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் ரேடியோ என்ஜினீயர்ஸ்  அமைப்பு நடத்தும் கிராஜுவேட் மெம்பர்ஷிப் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தியன் நேவல் ஆர்மமெண்ட் சர்வீஸ் (எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் பணிகள்) மற்றும் என்ஜினீயர் (கிரேடு ஏ வயர்லஸ் பிளானிங் அண்ட் கோ ஆர்டினேஷன் விங், மானிட்டரிங் ஆர்கனைசேஷன்) பணிகளில் சேர விரும்புபவர்களுக்கு மேற்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும்  அல்லது வயர்லெஸ் கம்யூனிக்கேஷன், எலெக்ட்ரானிக்ஸ்,  ரேடியோ பிசிக்ஸ் அல்லது ரேடியோ என்ஜினீயரிங் பாடப்பிரிவுகளை சிறப்புப் பாடமாக எடுத்து எம்எஸ்சி படித்தவர்களும் இந்தப் பணியில் சேர விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி, 21 வயது ஆகி இருக்க வேண்டும்.  ஆனால்  30 வயதுக்கு மேல் ஆகி இருக்கக்கூடாது. அதாவது, 1984-ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதிக்கு முன்னதாகவோ அல்லது 1993-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதிக்குப் பிறகோ பிறந்திருக்கக் கூடாது. பணியில் இருப்பவர்கள், தாற்காலிக பணியில் இருப்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கான விதிமுறை விவரங்கள் இணையதளத்தில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. உடல் தகுதியும் அவசியம் தேவை.

சென்னை, மதுரை உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் இத்தேர்வை எழுதலாம். இந்தத் தேர்வு ஜூன் 20-ஆம் தேதி நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு இரண்டு பிரிவுகளாக இருக்கும். முதல் பிரிவில் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். அதில் ஜெனரல் இங்கிலீஷ், ஜெனரல் ஸ்டடீஸ் ஆகிய பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் இருக்கும். இது அனைவருக்கும் பொதுவானது. இரண்டாம் பிரிவில் மாணவர்கள் தேர்வு செய்த என்ஜினீயரிங் பாடப்பிரிவிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இரண்டு மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வுக்கு 200 மதிப்பெண்கள் வழங்கப்படும். சிவில் என்ஜினீயரிங் மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வில் சிவில் என்ஜினீயரிங் பாடத்தில் நான்கு தாள்கள் உண்டு. இதில் முதல் இரண்டு தாள்களுக்கு விடையளிக்க தலா 2 மணி நேரமும் அதையடுத்துள்ள இரண்டு தாள்களுக்கு விடையளிக்க தலா 3 மணி நேரமும் வழங்கப்படும். இந்த நான்கு தாள்களுக்கும் தலா 200 மதிப்பெண்கள் வீதம் வழங்கப்படும். இதேபோல், மெக்கானிக்கல், என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங் ஆகிய பாடங்களிலும் தேர்வு இருக்கும். எழுத்துத் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு பர்ஸனாலிட்டி டெஸ்ட் நடத்தப்படும். அதற்கும் 200 மதிப்பெண்கள். இந்தப் போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டங்களையும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் ரூ.200. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை. விண்ணப்பக் கட்டணத்தை பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் நேரடியாகச் செலுத்தலாம். பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் ஆகிய வங்கிகளில் நெட் பேங்கிங் வசதிகளைப் பயன்படுத்தி விண்ணப்பக் கட்டணம் செலுத்தலாம் அல்லது கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலமும் கட்டணத்தைச் செலுத்தலாம்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசுத் துறையிலோ அல்லது அரசுத் துறை நிறுவனங்களிலோ நிரந்தரமாகவோ அல்லது தாற்காலிகமாகவோ பணி செய்து வருபவர்கள், இத்தேர்வை எழுத விரும்பினால் அதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்கள், தாங்கள் தேர்வு எழுத விரும்பும் மையம், எந்த என்ஜினீயரிங் பாடத்தில் தேர்வு எழுத விரும்புகிறீர்கள் என்பதைக் குறிப்பிட வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த படிவத்தின் நகலை பிரிண்ட் அவுட் எடுத்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்ப வேண்டியதில்லை. என்ஜினீயரிங் சர்வீஸ் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் ஏப்ரல் 21-ஆம் தேதி இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விவரங்களுக்கு: www.upsc.gov.in