24 November 2013

கல்வி உதவித் தொகையுடன் வெளிநாடுகளில் படிப்பது எப்படி?

பொன்.தனசேகரன்

ஐரோப்பாவில் செக் குடியரசில் ஜப்லோட்ரான் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரியும் விஜய ராகவன், தமிழ்நாட்டில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த முதல் தலைமுறை பட்டதாரி. ஐரோப்பாவில் முதுநிலைப் படிப்பையும் பிஎச்டி படிப்பையும் முழுக் கல்வி உதவித் தொகை பெற்றுப் படித்தவர். வெளிநாடுகளில் கல்வி உதவித் தொகையுடன் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு  அவரது அனுபவ ஆலோசனைகள்...

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். பிளஸ் டூ தேர்வில் 87 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதும், அமிர்தா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்து படித்தேன். நான் பட்டப் படிப்பில் ரேங்க் ஹோல்டர் இல்லை. ஆனால், கல்லூரியில் படிக்கும்போது, ஒரு நாள் கூட விடுமுறை எடுத்தது கிடையாது. ஜெர்மனியில் உயர்கல்வி படிக்கும் மாணவர் ஒருவர், எங்கள் கல்லூரியில் உரை நிகழ்த்தினார். அவரது உரையைக் கேட்டதிலிருந்து வெளிநாட்டில் சென்று படிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன். இறுதியாண்டில், கேம்பஸ் இன்டர்வியூ மூலம் எல் அண்ட் டி நிறுவனத்தில் ரூ.2.75 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை கிடைத்தது. ஆனாலும்கூட, அந்த வேலையில் சேர வில்லை. அந்த வேலையில் சேராமல், வெளிநாட்டில் மேற்படிப்புப் படிக்கச் செல்கிறேன் என்றதும், அப்போது எனது குடும்பத்தில் சிரமமான சூழ்நிலை இருந்தபோதும் அதற்கு தனது முழு சம்மத்தையும் தெரிவித்து எனது முயற்சிக்கு ஆதரவாக இருந்தவர் எனது அப்பா விஸ்வநாதன். எனது மாமா உள்பட குடும்பத்தினர் அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்தனர்.

பிரிட்டனில் உள்ள ஏழு பல்கலைக்கழகங்களில் முதலில் அட்மிஷன் கிடைத்தது. ஆனால் படிப்புச் செலவுக்கு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சம் வரை தேவைப்பட்டது. அந்த அளவுக்கு பணம் திரட்டவோ, வங்கிக் கடன் பெறவோ இயலவில்லை. டீச்சிங் அசிஸ்டெண்ட்ஷிப், கல்வி உதவித் தொகை போன்றவற்றுக்கு அங்கு சென்ற பிறகுதான் விண்ணப்பிக்க வேண்டும் என்றார்கள். அப்புறம் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கு விண்ணப்பித்தேன். இந்தியாவிலிருந்து 3 பேருக்கு அந்த ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அதில் நானும் ஒருவன். எனது மாமா, விமான டிக்கெட் வாங்கவும் கம்ப்யூட்டர் வாங்கவும் பணம் கொடுத்தார். ஒரு வழியாக, இத்தாலியில் உள்ள பாலிடெக்னிக்கோ டொரினோ கல்வி நிலையத்தில் மைக்ரோ அண்ட்நேனோ எலெக்ட்ரானிக்ஸ் முதுநிலைப் படிப்பில் சேர்ந்தேன். இந்த முதுநிலைப் படிப்புக்காக ஸ்விட்சர்லாந்து இபிஎஃப்எல், பிரான்சில் உள்ள ஐஎன்பிஜி ஆகிய கல்வி நிலையங்களிலும் படித்து முதுநிலப் பட்டப் படிப்பை முடித்தேன். முதுநிலைப் பட்டப் படிப்பைப் படிக்கும் போதே, எனது புராஜக்ட் பிரசன்டேஷனை பார்த்த பேராசிரியர் ஒருவர் பிரான்சில் லியோன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நேனோ டெக்னாலஜி கல்வி நிலையத்தில் கல்வி உதவித் தொகையுடன் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார். அங்கு பிஎச்டி முடித்துவிட்டு தற்போது செக் குடியரசில் ஜப்லோட்ரான் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்து வருகிறேன்.

வெளிநாட்டில் உயர்கல்வி படிப்பைப் படிக்க கல்வி உதவித் தொகை கிடைத்ததற்கு முக்கியக் காரணம், படிப்பைத் தவிர கூடுதலான திறமைகளை வளர்த்துக் கொண்டதுதான். அதனால்தான் பல்கலைக்கழக ரேங்க் ஹோல்டர் இல்லை என்றாலும்கூட எனக்கு உயர்கல்வி படிக்க உதவித் தொகை கிடைத்தது. நான் தனியே C,C++ போன்றவற்றையும் படித்திருந்தேன். எனது புராஜக்டையும் கவனத்துடன் செய்தேன். எனது CV, ஸ்டேட்மெண்ட் ஆஃப் பர்ப்பஸ் ஆகியவற்றையும் கவனத்துடன் தயாரித்தேன். பணம் இல்லாததால் பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் சேர முடியாவிட்டாலும்கூட, எனது தொடர் முயற்சியால் இத்தாலியில் கல்வி உதவித் தொகையுடன் படிக்க வாய்ப்பு கிடைத்தது.

வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்கள், படித்து முடித்ததும் அங்கேயே வேலை கிடைக்குமா என்பதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டியதில்லை. திறமை இருந்தால், எங்கு வேண்டுமானாலும் நல்ல வேலை கிடைக்கும். படிப்பில் சேரும்போது, படிப்பிலேயே முழு கவனத்தைச் செலுத்திப் படிக்க வேண்டும் என்பதிலேயே ஆர்வமாக இருங்கள். அதுதான் முக்கியம்.

பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்பில் மூன்றாம் ஆண்டிலேயே எந்த நாட்டில் படிப்பது என்பதைத் தீர்மானித்து விட வேண்டும். எந்த நாட்டில் படிப்பது என்பதைத் தீர்மானித்து விட்டால், அந்த நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களை அறிந்துகொண்டு பத்துக்கும் குறையாத கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து  விண்ணப்பிக்க வேண்டும். அந்தக் கல்வி நிறுவனங்களில் நாம் சேரும் துறையில் நடத்தப்படும் ஆராய்ச்சி குறித்து கவனத்தில் கொண்டு அந்தக் கல்வி நிறுவனத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அந்தக் கல்வி நிறுவனத்தின் தர அடிப்படையிலான ரேங்க்கை மட்டும் வைத்து விண்ணப்பிக்க வேண்டியதில்லை. அந்தக் கல்வி நிறுவனத்தில் நாம் சேர இருக்கும் படிப்பில், உதவித் தொகை கிடைப்பதற்கு சாத்தியம் இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும். நாம் விண்ணப்பிக்கும் துறையில் உள்ள பேராசிரியர்கள் எந்தத் துறைகளில் ஆய்வு செய்கிறார்கள், என்பதை அறிந்துகொண்டு அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்களின் ஆர்வத்தையும் திறமையும் புரிந்து கொண்டால், அவர்கள் அட்மிஷன் பெறவும் கல்வி உதவித் தொகை பெறவும் உதவியாக இருப்பார்கள்.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான டோபல், ஐஇஎல்டிஎஸ் போன்ற மொழித் தேர்வுகளையும் ஜிஆர்இ போன்ற தேர்வுகளையும் முன்னதாக எழுதி, அதற்கான சான்றிதழ்களை கையில் வைத்திருப்பது நல்லது. ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் பாடம் கற்றுத் தருவது ஆங்கிலத்தில் இருந்தாலும்கூட, அங்கு பேசப்படும் மொழியில் அடிப்படை அறிவு பெற்றிருப்பது நமக்கு உபயோகமாக இருக்கும்.

மாணவர்கள் இளநிலைப் பட்டப் படிப்பில் பெறும் மதிப்பெண்கள் முக்கியம்தான் என்றாலும்கூட, பாடத்தைத் தாண்டி மாணவர்கள் என்ன படித்திருக்கிறார்கள், கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்திருக்கிறார்களா என்பதையெல்லாம் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில்  பார்ப்பார்கள். அத்துடன், நாம் செய்யும் புராஜக்ட் முக்கியமானது. உங்களது சுயவிவரக் குறிப்பை தெளிவாகவும் சுருக்கமாகவும் தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அத்துடன், விண்ணப்பிக்கும்போது நாம் அனுப்ப வேண்டிய முக்கியமான ஆவணம் ஸ்டேட்மெண்ட் ஆஃப் பர்ப்பஸ். இதில் நமது திறமைகள், நமது ஆர்வம், நமது நோக்கம், இந்தக் கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கான காரணம், உயர்கல்வி படிப்பதன் மூலம் சாதிக்க விரும்புவது என்ன என்பது போன்ற விவரங்களை நமது சொந்த மொழியில் இரண்டு பக்கங்களுக்குக் குறையாமல் எழுத வேண்டும். இதனை ஒரே நாளில் எழுதி விட முடியாது. இதற்கு ஒரு மாதத்திற்கு மேல் கூட ஆகலாம். வேறு ஒருவர் எழுதியதைக் காப்பி அடித்து எழுத முயற்சிக்கக் கூடாது. அதனை பேராசிரியர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். நாமே நமது வார்த்தைகளில் எழுத வேண்டியது அவசியம்.

கல்வி நிலையங்களில் அட்மிஷன் பெறுவதற்கும் கல்வி உதவித் தொகை பெறுவதற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டியதிருக்கும். எந்த ஒரு கல்வி நிறுவனம் குறித்தும் அந்தந்தக் கல்வி நிறுவனங்களின் இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இ-மெயில் மூலம் தேவையான சந்தேகங்களுக்கும் விளக்கம் பெறலாம். அந்தந்தப் பல்கலைக்கழக இணைய தளங்கள் மூலம் கல்வி உதவித் தொகை விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

கல்வி உதவித் தொகை விவரங்களை அளித்து வழிகாட்ட அரசு அமைப்புகளும் உள்ளன. எடுத்துக் காட்டாக, ஜெர்மனியில் உள்ள படிப்புகளைப் படிக்க, DAAD அமைப்பும், பிரிட்டனில் படிக்க பிரிட்டிஷ் கவுன்சில் அமைப்பும் மாணவர்களுக்கு உதவுகின்றன. இதேபோல மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் கல்வி உதவித் தொகை வழங்குகின்றன. இந்திய அரசு மூலம் வெளிநாடுகளில் படிக்கவும் கல்வி உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளன.

முதுநிலைப் படிப்பு மற்றும் ஆய்வுப் படிப்புகளுக்கு மாற்றாக, பணி அனுபவத்தையோ, குறுகிய காலப் பயிற்சியையோ கருத முடியாது. வெளிநாடுகளில் இளநிலை, முதுநிலை, ஆய்வுப் படிப்புகளைப் படித்தவர்களுக்கிடையே ஊதிய வித்தியாசம் குறைவுதான். முதுநிலைப் படிப்பையும் ஆய்வுப் படிப்பையும் படித்து தங்களது தகுதியை உயர்த்திக் கொள்வது எதிர்காலத்தை ஒளிமயமாக்க உதவும்.

கல்வித் திறனை வளர்த்துக் கொள்வதில் ஆர்வமிக்கவர்கள் தொடர்ந்து படியுங்கள். படித்து முடித்த பிறகு, சொந்த நாட்டில் படித்த கல்வி நிறுவனத்தை மறக்காதீர்கள். உங்கள் அனுபவத்தை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொள்வதன் மூலம், உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை மற்றவர்களுக்கும் கிடைக்கச் செய்ய முடியும். விவசாயக் குடும்பத்தில் பிறந்த நானே எனது குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரியாகி, வெளிநாட்டில் படித்து வேலை பார்க்க முடியும் என்றால் உங்களால் முடியாதா என்ன? முயற்சி திருவினையாக்கும்.”

Junior Research Fellow vacancy at MNNIT, Allahabad

Post
Junior Research Fellow – 01 Post
Qualification
M.E./ M.Tech. in Mechanical/ Chemical/ Aeronautical/ Aerospace/ Civil/ Power Engineering /Energy/ Applied Mechanics/ Fluids or Thermal Engineering/ Electronics Engineering with minimum of 60% aggregate marks or CPI 6.5 at qualifying examination and GATE qualified..
Last Date
24-12-2013.
Recruitment Board
MNNIT, Allahabad
Consolidated Fellowship
16,000/- per month



CMAT பொது நுழைவுத் தேர்வு

கில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் சேர்ந்து எம்.பி.ஏ. அல்லது மேலாண்மைப் பாடத்தில் முதுநிலை டிப்ளமோ படிக்க விரும்புபவர்கள், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (AICTE) நடத்தும் பொது நுழைவுத் தேர்வை (CMAT)  எழுத வேண்டும். ஆண்டுக்கு இருமுறை இத்தேர்வு நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதியிலிருந்து 24-ஆம் தேதி வரை நடைபெறும் இத்தேர்வை எழுத ஆன்லைன் மூலம் வருகிற பிப்ரவரி 2-ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம்.

தேர்வு எப்படி இருக்கும்?: மூன்று மணி நேரம் நடைபெறும் இந்த ஆன்லைன் தேர்வில் குவாண்டிடேட்டிவ் டெக்னிக்ஸ் அண்ட் டேட்டா இன்டர்பிரட்டேஷன் பிரிவில் 25 கேள்விகளும், லாஜிக்கல் ரீசனிங் பிரிவில் 25 கேள்விகளும், லாங்க்வேஜ் காம்ப்ரிஹென்சன் பிரிவில் 25 கேள்விகளும், பொது அறிவில் 25 கேள்விகளும் கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 100 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 400 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, ஓசூர் உள்பட நாடு முழுவதிலும் உள்ள 23 முக்கிய நகரங்களில் இத்தேர்வு நடைபெறும்.

யார் விண்ணப்பிக்கலாம்?: பட்டப் படிப்பில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பட்டப் படிப்பில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினர், விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,200 (வங்கிக் கட்டணம் தனி) செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள், விண்ணப்பக் கட்டணமாக ரூ.600 (வங்கிக் கட்டணம் தனி) செலுத்தவேண்டும். நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். ஆன்லைன் மூலம் பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளிலும் செலுத்தலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.01.2014
தேர்வு நடைபெறும் தேதி20.02.2014 முதல் 24.02.2014 வரை
விவரங்களுக்குwww.aicte-cmat.in

Junior Research Fellow vacancy at IIT Gandhinagar

Post
Junior Research Fellow
Qualification
Candidates should possess B.Tech. in Electrical/ Electronics/ Biomedical Engineering with valid GATE score and knowledge in Signal Processing and Embedded Systems.
Last Date
09/12/2013
Last Date for Submission of Online Application
09-12-2013
Recruitment Board
IIT, Gandhinagar



IIT-NIT பொது நுழைவுத் தேர்வு



ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்திய அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச்  சேர்ப்பதற்கான பொது நுழைவுத் தேர்வு குறித்த அறிவிப்பை இத்தேர்வை நடத்தும் மத்திய செகண்டரி கல்வி போர்டு (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ளது. இந்த நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் பிளஸ் டூ  தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பிளஸ் டூ படித்து வரும் மாணவர்களும் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

ஐடிக்களில் சேருவதற்காக நடத்தப்பட்டு வந்த ஐஐடி நுழைவுத் தேர்வுக்கும் என்ஐடி, ஐஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக நடத்தப்பட்டு வந்த அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வுக்கும் (AIEEE)பதிலாக பொது நுழைவுத் தேர்வு இந்தக் கல்வியாண்டில் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்தப் பொது நுழைவுத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும்.

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் தேர்வை குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே எழுத முடியும். என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பிஇ, பிடெக் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் மெயின் தேர்வின் முதல் தாளை (ஏஐஇஇஇ தேர்வில் முதல் தாளாக முன்பு இருந்தது) எழுத்துத் தேர்வாக எழுதலாம். கம்ப்யூட்டர் மூலமும் எழுதலாம். ஏப்ரல் 6-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை முதல் தாள் எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் தேர்வு ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பி.ஆர்க்., பி.பிளானிங் படிப்புகளில் சேருவதற்கான மெயின் தேர்வு இரண்டாம் தாளை (ஏஐஇஇஇ தேர்வில் இரண்டாம் தாளாக இருந்தது) காகிதத்தில் விடை எழுதும் எழுத்துத் தேர்வாக (Offline Mode)  மட்டும் எழுதலாம்.  இந்தத் தேர்வு ஏப்ரல் 6-ஆம் தேதி பிற்பகல் 2 மணியிலிருந்து 5 மணி வரை நடைபெறுகிறது.

மெயின் தேர்வின் முதல் தாளில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களிலிருந்து அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வுக்கு விடையளிக்க மூன்று மணி நேரம் அளிக்கப்படும். வினாத்தாள்கள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இருக்கும். இரண்டாம் தாளில் ஏற்கெனவே ஏஐஇஇஇ தேர்வில் இருந்தது போலவே கணிதம், ஆப்டிட்யூட் டெஸ்ட், டிராயிங் டெஸ்ட் ஆகியவற்றில் கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வுக்கும் விடையளிக்க மூன்று மணி நேரம் வழங்கப்படும். இந்த நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டமும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பிஇ, பிடெக் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இயற்பியல், கணிதம்  ஆகிய பாடங்களுடன் வேதியியல், பயோ டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரியல் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒரு பாடத்தை எடுத்துப் படித்திருக்க வேண்டும். இந்தப் பாடங்களில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பிஆர்க் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும். கணிதத்தில் 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். நுழைவுத் தேர்வு மதிப்பெண்களுடன் பிளஸ் டூ மதிப்பெண்களும் என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ரேங்க் பட்டியல் தயாரிப்பதில் கணக்கில் கொள்ளப்படும். அதாவது, மெயின் நுழைவுத் தேர்வுக்கு 60 மதிப்பெண்கள், பிளஸ் டூ தேர்வுக்கு 40 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படும். இதன் அடிப்படையில் மாணவர்கள் கவுன்சலிங்கிற்கு அழைக்கப்பட்டு என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் வழங்கப்படும். இந்தத் தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு மாணவர் சேர்க்கையை நடத்தும் கல்வி நிறுவனங்களும் பல உள்ளன.

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், 1989-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதியோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் 1984-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதியோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்திருக்க வேண்டும். செகண்டரி பள்ளிச் சான்றிதழில் உள்ளபடி பிறந்த தேதி கணக்கில் கொள்ளப்படும்.

2012-ஆம் ஆண்டிலோ அல்லது 2013-ஆம் ஆண்டிலோ பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். 2014-இல் பிளஸ் டூ தேர்வை எழுத இருக்கும் மாணவர்களும் இந்த நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். 2011-ஆம் ஆண்டிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்களும் 2015-ஆம் ஆண்டில் பிளஸ் டூ தேர்வு எழுத இருக்கும் மாணவர்களும் இத்தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். 2011-ஆம் ஆண்டில் பிளஸ் டூ தேர்வு எழுதி தேர்ச்சி பெறாமல், 2012-ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களும் இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்க முடியாது.

ஜேஇஇ மெயின் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். நவம்பர் 15-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

மெயின் தேர்வில் முதல் தேர்வை மட்டும் எழுதுகிறோமா அல்லது இரண்டாவது தேர்வை எழுதுகிறோமா அல்லது இரண்டு தேர்வுகளையும் எழுதுகிறோமா என்பதை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். அத்துடன், காகிதத்தில் எழுத்துத் தேர்வு எழுதுகிறோமா அல்லது கம்ப்யூட்டர் மூலம் தேர்வு எழுதுகிறோமா என்பதையும் குறிப்பிட வேண்டும். அதைப் பொருத்து கட்டணம் வேறுபடும்.

முதல் தாள் அல்லது இரண்டாம் தாளை மட்டும் எழுத்துத் தேர்வாக எழுத விரும்பும் பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவு மாணவர் களுக்குக் கட்டணம் ரூ.1,000. மாணவிகளுக்குக் கட்டணம் ரூ.500. தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் கட்டணம் ரூ.500. முதல் தாளை கம்ப்யூட்டர் மூலம் எழுத விரும்பும் பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்குக் கட்டணம் ரூ.600. மாணவிகளுக்குக் கட்டணம் ரூ.300. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் கட்டணம் ரூ.300.

முதல் தாளையும் இரண்டாவது தாளையும் சேர்த்து எழுத்துத் தேர்வாக எழுத விரும்பும் பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்குக் கட்டணம் ரூ.1,800. இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவிகளுக்குக் கட்டணம் ரூ.900. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் கட்டணம் ரூ.900. அதேபோல முதல் தாளை கம்ப்யூட்டர் தேர்வாகவும் இரண்டாவது தாளை எழுத்துத் தேர்வாகவும் எழுத விரும்பும் பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்குக் கட்டணம் ரூ.1,400. இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவிகளுக்குக் கட்டணம் ரூ.700. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் கட்டணம் ரூ.700.

 இந்தக் கட்டணத்தை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் செலுத்தலாம் அல்லது ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த பிறகு, சிண்டிகேட் வங்கி, கனரா வங்கி, ஐசிஐசிஐ வங்கிகளில் இ- செலான் மூலமும் கட்டணம் செலுத்தலாம்.

இந்த ஆண்டில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதனால், தபால் மூலம் எதையும் அனுப்ப வேண்டியிருக்காது. எனவே, இந்தத் தேர்வுக்கான தகவல் விவரக் குறிப்புகளை கவனமாகப் படித்து, தகுதி குறித்த விவரங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான விவரங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். புகைப்படம், கையெழுத்து, இடதுகை கட்டை விரல் ரேகை ஆகியவற்றை ஸ்கேன் செய்து (JPG)பார்மெட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர், ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். அத்துடன், ஸ்கேன் செயப்பட்டவற்றையும் அப்லோட் செய்ய வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் (அல்லது இ-செலான் மூலமும் கட்டணத்தைச் செலுத்தலாம்). விண்ணப்பத்தை அனுப்பியதற்கான ரசீதை
டவுன்லோடு செய்து பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். விண்ணப்பத்தில் தனது அல்லது பெற்றோரின் இ-மெயில் முகவரியையும் மொபைல் எண்ணையும் கொடுக்க வேண்டும். ஏனெனில், அவற்றின் மூலம்தான் தகவல்கள் அனுப்பப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 26-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இத்தேர்வு குறித்தும், விண்ணப்பிக்கும் முறைகள் குறித்தும் இணையதளத்தில் உள்ள விளக்கக் குறிப்பேட்டில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

விவரங்களுக்கு:  www.jeemain.nic.in