26 March 2014




படித்தால் மட்டும் போதாது

சுந்தருக்கு வயது 22. புத்திசாலியான இளைஞன். பி.எஸ்.சி பட்டப்படிப்பு முடித்திருக்கிறான் (தாவரவியல், விலங்கியல், வேதியியல்) அவன். தற்போது மேற்கொண்டு படிக்க விரும்பாததால், வேலைக்கு விண்ணப்பித்தான்.
சாந்தியும் பி.எஸ்ஸி. படித்தாள். அடிப்படையான சில மென்பொருள்களைக் கற்றுக்கொண்டாள். கார் ஓட்டக் கற்றுக்கொண்டாள். மக்கள் தொடர்பிலும் குறுகிய காலப் பயிற்சியை முடித்தாள். வேலைக்கு விண்ணப்பித்தாள்.
யாருக்கு விரைவில் வேலை கிடைத்திருக்கும்?
சாந்திக்கும், சுந்தருக்கும் என்ன வித்தியாசம்?
சாந்தி தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு, வேலை என்னும் உலகத்திற்குள் அந்த உலகத்திற்குத் தேவையான திறன்களுடன் நுழைந்தாள். சுந்தரோ, அனுபவமற்ற பட்டதாரியாக வேலை தேடத் தொடங்கிவிட்டான்.
வேலைக்கான நேர்காணலில், சாந்தியின் மக்கள் தொடர்புத் திறன் போன்றவை, அத்தகைய திறமைகள் அற்ற இன்னொரு பட்டதாரியைவிட அவளை முன்னணியில் நிறுத்தின.
இவர்கள் இருவரது தொழில் வாழ்க்கையைத் தொடர்ந்து கவனித்துவந்தால் ஒரு விஷயம் புரியும். அடுத்த ஐந்து வருடங்களில் சாந்தியின் தொழில் வாழ்க்கை ஏறுமுகமாகவே இருக்கும். சுந்தரோ, குறைந்த தகுதியுடைய வேலையிலேயே இருப்பான். முன்னேற்றமும் பெரிதாக இருக்காது.

கூடுதல் திறன்கள் தேவை

நமது நாட்டில் வேலையற்ற, தகுதிக்குக் குறைவான வேலையில் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இதுதான் நடக்கிறது. படிப்பில் கவனம் செலுத்தும் பலர், இதர திறன்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. பட்டப்படிப்புப் படித்த நூறு பேர் ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருந்தால் அவர்களில் கூடுதல் திறன்கள் உள்ளவர்களுக்குத்தான் முன்னுரிமை கிடைக்கும். அது மட்டுமல்ல. அவர்கள் வேலை தேடுவதற்கான களம் விரிவாக இருக்கும்.
திறமையை வளர்த்துக்கொள்வது என்பது, அறிவை வளர்த்துக்கொள்வது என்பதன் எல்லையைத் தாண்டிய ஓர் அம்சம். ஒரு செயலை உங்களால் செய்ய முடியும் என்றால் அந்த விஷயத்தில் உங்களுக்குத் திறமை இருக்கிறது என்று அர்த்தம். சுந்தர் வேலை என்ற உலகத்தில் நுழைந்தபோது, அந்த உலகம் சார்ந்த சில திறன்களுக்கு முன்னால், அவன் படிப்பு ஒன்றுமில்லை என்று ஆகிவிட்டது. அவனது திறமைகள் மிகவும் குறைவு. அவனைப்
போன்ற ஏராளமானோர், வேலை உலகத்தில் போட்டியிடத் தேவையான, பிற சிறப்புத் தகுதிகள் இல்லாமலேயே வேலை என்னும் உலகத்தில் நுழைய நினைக்கிறார்கள்.
இந்தியாவில், இன்று மாணவர்களுக்குப் பல்வேறு வகையான பட்டப்படிப்புகள் உள்ளன. கல்லூரிகளில் பாடத்தை மட்டும்தான் சொல்லித்தருகிறார்கள். வேலை உலகத்திற்கான பிற திறன்களைக் கற்றுக் கொடுப்பதில்லை.
திறமைகள் குறைவாக இருந்தால் என்ன ஆகும்? வேலை கிடைப்பது சிரமமாகும். அல்லது போதிய சம்பளமோ வசதிகளோ அற்ற வேலைதான் கிடைக்கும்.
நீங்கள் எந்தப் பாடத்தை எடுத்துப் படித்தாலும் வெறும் கோட்பாட்டை மட்டும் படிப்பது போதாது. உங்கள் துறை சார்ந்த திறமைகளை வளர்த்துக்கொள்வதென்பது மிகவும் முக்கியம். அதற்குக் கூடுதலாகப் படிப்பது, கூடுதல் பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம்.

பிற விஷயங்கள்

வேலை கொடுப்பவர்கள், விண்ணப்பதாரர் வெறும் கல்லூரிப் படிப்புச் சான்றிதழை மட்டும் வைத்திருக்காமல், அது தவிர வேறு என்ன செய்திருக்கிறார் என்பதையும் குறிப்பாகப் பார்க்கிறார்கள்.
பிற விஷயங்கள் என்பது என்ன? இலக்கியச் செயல்பாடுகளில் கலந்துகொள்வது, சமூக சேவை சார்ந்த செயல்பாடுகள், என்.சி.சி., சாரணர் இயக்கம், இசை முதலான திறமைகள், வாசிப்பு, கைத்தொழில், விளையாட்டுத் திறன் எனப் பல விஷயங்களைக் குறிப்பிடலாம். விளையாட்டில் தீவிரமான திறமைகள் கொண்டவர் வெறுமனே படிப்பை மட்டும் முடித்தவரைவிட வேலை உலகத்தில் முன்னணியில் இருப்பார்.
வரைவது, ட்ரில் செய்வது, வெல்டிங் முதலான கருவிகளைக் கையாள்வது போன்ற திறன்கள், தொழில்நுட்ப வேலைகளோடு சம்பந்தப்பட்டவை. கேபிள்கள் சம்பந்தப்பட்ட வேலை, மின்சாரம் தொடர்பான வேலைகள் ஆகியவறையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.
தட்டச்சுத் திறன், வாடிக்கையாளர் தொடர்பு, மக்கள் தொடர்பு, அலுவலகப் பராமரிப்பு, கோப்புகளைச் சரியாக வைப்பது, கணக்கு தொடர்பான திறன்கள், பேச்சுத் திறன், பிரசண்டேஷன்களை உருவாக்கும் திறன் போன்றவை தொழில்நுட்பம் சாராத வேலைகளோடு தொடர்புடையது. விண்ணப்பதாரர்கள் இந்தத் திறன்களைக் கொண்டிருந்தால், அவர்களுக்குத் வேலை கிடைப்பது எளிதாகும்.
திறமைகளை எப்போது வளர்த்துக்கொள்ளலாம்? நீங்கள் வேலைக்கு விண்ணப்பிப்பதற்குச் சற்று முன்பு அல்ல. இதை வளர்த்தெடுக்கக் கொஞ்ச காலம் ஆகத்தான் செய்யும். திறனை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை நீங்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

என்ன செய்யலாம்?

#பொழுதுபோக்கு ஒன்றைப் பழக்கிக்கொள்ளுங்கள். படிப்பு, படிப்பு என 24 மணிநேரமும் படித்துக்கொண்டிருப்பது ஆரோக்கியமானது அல்ல. உங்கள் விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டு, பொழுதுபோக்கு ஒன்றைப் பழகிக்கொள்ளுங்கள். அது உங்களை ஆசுவாசப் படுத்திக்கொள்ள உதவும்.
உங்கள் திறன்களை வளர்க்கவும் உதவும்.
#கருவிகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்: ஸ்க்ரூ டிரைவர், ஸ்பேனர், சுத்தியல், இவை நமது அன்றாட வாழ்க்கையின் பகுதிகள். ஆண்கள் மட்டுமே கருவிகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆண்கள், பெண்கள் அனைவருமே உபகரணங்கள், இயந்திரங்கள், மற்றும் கருவிகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும், அது நமது வாழ்க்கையை எளிதாக்கும்.
#வேலை அனுபவத்தை உருவாக்கும் வாய்ப்புகளைத் தேடுங்கள்: ஒரு நிறுவனத்தில் வாலன்டியராக வேலை பார்த்தால் அது வேலைக்கான அடிப்படைத் திறன்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தும். தொலைபேசியைக் கையாள்வது, அலுவலக விஷயங்கள், மற்றும் அலுவலகத்தின் அன்றாடச் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளுதல் போன்றவை திறமைகளைக் கற்பதற்கான அம்சங்கள். நேர்காணலின்போது, ஏற்கனவே ஒரு நிறுவனத்தில் வாலன்டியராக வேலை செய்திருக்கிறேன் என்று சொன்னால் அது நீங்கள் வேலை தொடர்பான திறனை அறிந்திருக்கிறீர்கள் என்ற செய்தியை வேலை தருபவர்களுக்குத் தெரிவிக்கும்.
இன்று, நிறுவனங்கள் பட்டப்படிப்புப் படித்தவர்களை மட்டும் தேடுவதில்லை. படிப்பைத் தாண்டி உங்களிடம் என்ன இருக்கிறது என்று பார்க்கின்றன. திறமைகளை அதிகரிக்கும் முயற்சியை இன்றே தொடங்குங்கள். அதிகத் திறமைகள் உங்களுக்கு இருந்தால் அது வேலை என்னும் உலகில் உள்ள தடைகளைத் தகர்த்தெறியலாம். மிகச் சிறந்த வேலையும் உங்களைத் தேடி வரும்.

Innovation