1 April 2014

பேலன்ஸ் எதுக்கு? ஃப்ரீ கால் இருக்கு!

செல்போனில்  பேலன்ஸ் இல்லாதவர்கள் இலவசமாகப் பேச ஒரு சேவை தொடங்கப்பட உள்ளது

இப்போதெல்லாம் மாதச் செலவில் பாலுக்கு, பேப்பருக்கு என்று எடுத்துவைப்பது போல் செல்போனுக்கு என்று தனியாக பணம் எடுத்து வைக்கும் அளவுக்கு வீட்டில் இருக்கும் அனைவரிடமும் செல்போன் இருக்கிறது. என்னதான் கால் பூஸ்டர், மெசேஜ் பூஸ்டர் என்று போட்டாலும் 500 ரூபாய்க்கு குறையாமல் செல்போன் விழுங்கி விடும். ‘கவலையை விடுங்க. இன்னும் கொஞ்ச நாட்களில் எல்லோருமே இலவசமாகப் பேசலாம்’ என்கிறார்கள் பெங்களூருவில் உள்ள எம்.எஸ். ராமையா இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள்.

யாஷ்வாஸ் சேகர், விஜயகுமார் உமலுட்டி மற்றும் சண்டேஷ் ஈஸ்வரப்பா  என்கிற மூன்று மாணவர்களும் இணைந்து ஃப்ரீகால்(Freekall) என்கிற இலவச அழைப்புச் சேவையைக் கண்டுபிடித்து ஒரு நிறுவனமாக்கியிருக்கிறார்கள்.  இதன்மூலம் பேசுவதற்கு நம் போனில் பேலன்ஸ் தேவையில்லை. ஏற்கெனவே ஸ்கைப், வைபர், ஃபேஸ்புக் போன்றவற்றை பயன்படுத்தி இலவசமாகப் பேசலாம் என்றாலும் அதற்கு எல்லாம் இணையம் தேவை. ஆனால் ஃப்ரீகாலுக்கு இணையம் கூடத் தேவையில்லை. நமது அலைபேசியில் இருந்து 080-67683693 என்கிற எண்ணுக்கு அழைத்தால் போதும், அந்த அழைப்பு தானாகவே துண்டிக்கப்பட்டு நமது அலைபேசிக்கு அழைப்பு வரும். அந்த அழைப்பை ஏற்றவுடன் நாம் பேச வேண்டிய எண்ணை பதிவு செய்யச் சொல்லி கணினியின் குரல் கேட்கும். நாம் எண்ணைப் பதிவு செய்தபின்பு பேச வேண்டிய நபருக்கு இணைப்பு கொடுக்கப்படும். இதன் செயல்முறை டிரங்க் கால் போல் இருந்தாலும் இது முழுக்க முழுக்க மேகக் கணிமை(Cloud computing) முறைப்படி இயங்குகிறது. ஜிமெயில், ஃபேஸ்புக் போல் இதற்கும் கணக்கை உருவாக்க வேண்டும். கணக்கு வைத்திருப்பவர்கள் பன்னிரண்டு நிமிடங்கள் பேசலாம். கணக்கு இல்லாதபட்சத்தில் மூன்று நிமிடங்கள் மட்டுமே பேசமுடியும்.

இதை முதற்கட்டமாக பெங்களூருவில் சோதனை செய்து பார்த்தபோது மிக அதிக அழைப்புகள் வந்ததால் ஃப்ரீகாலின் சர்வர் ஏழு முறை பழுதடைந்து விட்டது. இதனால் தற்போது அதிகத் திறன் உள்ள சர்வர் பொருத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ஆம் தேதியில் இருந்து இந்தியா முழுமைக்கும் இந்தச் சேவை செயல்படுத்தப்படும் என்றும், ஒரே நாளில் இந்தியா முழுக்க ஒரு கோடி அழைப்புகள் வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஃப்ரீகால் தெரிவித்துள்ளது.

இந்தச் சேவை வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வாங்கவில்லையே தவிர, வேறு வழிகளில் பணம் ஈட்டுகிறது. அதாவது நீங்கள் டயல் செய்யும் போது ரிங்கிற்கு பதிலாக விளம்பரங்கள் ஓடும். அதே போல் பேசும் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கு நடுவே விளம்பரம் ஒலிபரப்பப்படும். இதன் மூலம் வருடத்திற்கு நூற்றி எண்பது கோடி வரை வருமானம் பெறமுடியுமாம். இந்தியா மட்டுமில்லாமல் மூன்றாம் உலக நாடுகள் அனைத்திலும் ஃப்ரீகாலுக்கு வரவேற்பு அதிகம் இருக்கும் என்று ஃப்ரீகால் நினைக்கிறது. அதனால் ஆரம்பிக்கும் போதே உலகம் முழுக்க ஆரம்பிக்கலாமா என்று ஃப்ரீகால் யோசித்து வருகிறது.  ஃப்ரீகால் கணக்கை  http://www.freekall.in/ என்கிற இணையதளத்தில் சென்று பதிவுசெய்து கொள்ளலாம். https://www.facebook.com/freekall  என்கிற ஃபேஸ்புக் பக்கத்தில் அவர்களது செயல்பாடுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

மத்திய ஆயுத போலீஸ் படையில் 2,197 பேருக்கு சப்-இன்ஸ்பெக்டர் வேலை!

மத்திய ஆயுத போலீஸ் படையின் கீழ் இயங்கி வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்புப் படை, இந்தோ - திபெத்திய எல்லை போலீஸ் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, சஷாஸ்த்ரா சீமா பால் ஆகிய பிரிவுகளில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இதில் தாழ்த்தப்பட்டோருக்கு 167 இடங்களும், பழங்குடியினருக்கு 322 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 608 இடங்களும், பொதுப் பிரிவினருக்கு 1,100 இடங்களும் உள்ளன. இந்தப் பணிகளில் சேர விரும்புபவர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 20 வயதுக்குக் குறையாமலும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்கவேண்டும். ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். இதேபோல முன்னாள் ராணுவத்தினருக்கும் வயது வரம்பில் விலக்கு உண்டு. என்.சி.சி. யில் பி அல்லது சி பிரிவு சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

எழுத்துத் தேர்வு எப்படி இருக்கும்?:
எழுத்துத் தேர்வுக்கு மொத்தம் 400 மதிப்பெண்கள். அப்ஜெக்ட்டிவ் முறையிலும், விரிவாக எழுதும் முறையிலும் எழுத்துத் தேர்வு இருக்கும். அப்ஜெக்ட்டிவ் தேர்வுக்கு 200 மதிப்பெண்கள். ஜெனரல் அவேர்னெஸ், ரீசனிங், குவான்டிடேட்டிவ் ஆப்டிட்யூட், இங்கிலீஷ் காம்ப்ரிஹென்சன் ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவுக்கும் 50 மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்தத் தேர்வுக்கு விடையளிக்க மொத்தம் இரண்டு மணி நேரம் வழங்கப்படும்.
விரிவாக தேர்வு எழுதும் முறையில், இங்கிலீஷ் லாங்க்வேஜ் தேர்வுக்கு 200 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஆங்கில மொழியில் காம்ப்ரிஹென்சன், பிரிசிஸ், லெட்டர் ரைட்டிங் மற்றும் கட்டுரை எழுதுதல் ஆகியவை இருக்கும். இத்தேர்வுக்கு விடையளிக்க இரண்டு மணி நேரம் வழங்கப்படும்.

இந்த இரண்டு தேர்வுகளிலும் தகுதி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதிலிருந்து தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, பணிக்குத் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்தாள் ஜூன் 22-ஆம் தேதியும், இரண்டாம் தாள் செப்டம்பர் 21-ஆம் தேதியும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை,  திருச்சி ஆகிய நகரங்களிலும் புதுச்சேரியிலும் இத்தேர்வை எழுதலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?:
பொதுப் பிரிவினருக்கும் மற்றவர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.100. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். ஆஃப்லைன் முறையில் ‘central recruitment fee stamps (CRFS)’ மூலம் தபால் துறை அலுவலகத்தில் செலுத்தவும். ஆன்லைனில்  செலானை பிரிண்ட் அவுட் எடுத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் கட்டணத்தைச் செலுத்தலாம். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றின் மூலமாகவும் கட்டணத்தைச் செலுத்தலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு இ-மெயில் கணக்கு இருக்க வேண்டும். பின்னர் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.04.2014
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Regional Director (SR), Staff Selection Commission, EVK Sampath Building, 2nd Floor, College Road, Chennai  
விவரங்களுக்கு: http://ssconline.nic.in/