17 September 2015

பொறியாளர் தினத்தன்று நடந்த 'இன்ஜீனியம்': அண்ணா பல்கலை.யில் சிறப்பு நிகழ்ச்சி

கிண்டி பொறியியல் கல்லூரியில், 15-09-2015 அன்று, பொறியாளர் தினத்தை கொண்டாடும் நோக்கில், கல்லூரியின் தொழில்நுட்ப மன்றத்தினர் (CEG TECH FORUM) 'இன்ஜீனியம்' (INGENIUM) என்னும் நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் பொறியாளர்களின் பங்கு என்னும் தலைப்பில் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அதில், நாட்டின் முன்னணி தொழில்துறை பொறியாளர் தலைவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுடன் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் இளைய பொறியாளர்களின் பணிகளை எடுத்துரைத்தனர். கலந்துரையாடலின் நடுவரான திரு. மூர்த்தி சொக்கநாதன் (தலைவர், ஹெக்ஸவேர் டெக்னாலஜீஸ்) முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, இந்திய நாட்டின் பொறியாளர்கள் உலகமே வியத்தகு சாதனைகளை புரிய முடியும் என்று எடுத்துரைத்தார்.
மேலும் திரு. ரமேஷ் (பொது மேலாளர், அஷோக் லெய்லாண்ட்) உரையாடுகையில் நம் மக்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு ஸ்மார்ட் ஃபோன் மற்றும் கணினி உபயோகிக்க முறையான பயிற்சியளித்தால் நமது டிஜிட்டல் இந்தியா கொள்கையை எளிதில் அடைந்துவிடலாம் என்றார்.
கிண்டி பொறியியல் கல்லூரியின் மாணவ மாணவிகளும் தங்கள் டிஜிட்டல் இந்தியாவில் தங்கள் பங்கு பற்றி விளக்கினர். முன்னதாக கல்லூரியின் தலைவர் திரு.நாராயணசாமி நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரை வழங்கினார்.
கூட்ட அரங்குக்கு வெளியே, மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த பொறியியல் திட்டமாதிரிகள் கண்காட்சி பார்வையாளர்களை ஈர்த்தது.