13 November 2013

Vacancies from ALL INDIA INSTITUTE OF MEDICAL SCIENCES For BE/B.Tech (Comp.Science./ Computer Engineering)

கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ: எதிர்கொள்வது எப்படி?

ஞா. சக்திவேல்

கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மாணவர்களை வேலைக்குத் தேர்வு செயும் நேரம் இது. கேம்பஸ் இன்டர்வியூவை வெற்றிகரமாக  எதிர்கொள்வது குறித்து நிபுணர்கள் தரும் ஆலோசனைகள் இதோ...

ன்றைக்கு உலகளாவிய அளவில் பொருளாதார தேக்கநிலை இருக்கிறது. இதனால் பன்னாட்டு நிறுவனங்கள் தாங்கள் வழங்கும் திட்டப்பணிகளை குறைந்த செலவில் சிறப்பாகச் செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். மேலும், இந்திய நிறுவனங்களுக்கு போட்டியாக அயர்லாந்து, சீனா போன்ற நாடுகளில் பல நிறுவனங்கள் உருவாகி  வருகின்றன. இந்தப் போட்டி நிறைந்த சூழ்நிலையில், கேம்பஸ் இன்டர்வியூவில் நிறுவனத்தின் எதிர்பார்ப்புக்கு தகுந்தாற்போல் மாணவர்கள் தங்களது தனித்தன்மையைக் காட்ட  வேண்டிய அவசியம் ஏற்படுகிறது” என்று குறிப்பிட்ட டெல் நிறுவனத்தின் மனிதவளப் பிரிவின் உயர் அதிகாரி ஜி.வி. சுரேஷ் அதனைப் பட்டியலிட்டார்.

“ஒன்று, இன்றைக்கு பொறியியல் மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 90 சதவீதத்துக்கு அதிகமான மதிப்பெண்களைப் பெறுகிறார்கள். ஆனால், இவர்கள் மேலோட்டமாகப் படித்து மதிப்பெண் பெறுபவர்களாக இருக்கிறார்கள். அடிப்படை விஷயங்களில் ஆழமான பார்வை இல்லை. இதனால், வளாகத் தேர்வுகளில் அடிப்படை விஷயங்கள் குறித்துக் கேட்கும்போது தடுமாறுகிறார்கள். ஆகையால், கல்லூரிப் பாடங்களில் அடிப்படை விஷயங்கள் குறித்து நன்கு படித்து அறிந்திருப்பது அவசியம்.

இரண்டு, கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூவுக்காக வரும் நிறுவனங்களைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்டு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, கிளவுட் கம்ப்யூட்டிங் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்வதாக ஒரு நிறுவனம் தெரிவித்திருந்தால், அந்த நிறுவனம் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவில் என்னென்ன பணிகளை செய்து வருகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும், கிளவுட் கம்ப்யூட்டிங் பணியில் கடந்த ஓரிரு ஆண்டுகளில் என்னென்ன நடந்திருக்கின்றன என்பதை ஏதேனும் ஒரு ஆய்வு இதழைப் படித்து தெரிந்துகொள்ள வேண்டும். இதற்குப் பல நாட்கள் செலவிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு நாள் போதும். தேவையான தகவல்களைத் திரட்டி விடலாம்.

மூன்று, எல்லோரும் கேம்பஸ் இன்டர்வியூ என்றவுடன் வலியுறுத்தும் விஷயம் கம்யூனிக்கேஷன் ஸ்கில் என்று சொல்லப்படுகின்ற தகவல் தொடர்புத்திறன். இன்றைக்கு தங்களுடைய கருத்துகளை சொந்தத் தாய் மொழியில் பல மாணவர்கள் தெரிவிக்கவே தடுமாறுகிறார்கள். இந்த நிலையை மாற்றி தங்களுடைய கருத்துகளை  சொந்த தாய்மொழியில் சரளமாகத் தெரிவிக்கும் நிலையைப் பெற்றால், ஆங்கிலத்தில் உரையாடுவதும், கருத்துகளை தெரிவிப்பதும் எளிதாகி விடும். ஆகையால் தொடர்பு திறனை மேம்படுத்துவதற்கு கருத்துகளை சொந்த மொழியில் தங்குதடையின்றி வெளிப்படுத்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அதன் பின்பு ஆங்கிலத்தில் உரையாட பழகிக்கொண்டால் போதுமானது.

நான்கு, கேம்பஸ் இன்டர்வியூவின்போது மாணவர்கள், ஒரு விஷயத்தை எவ்வளவு சீக்கிரம் கிரகித்துக் கொள்கிறார்கள் என்பதைப் பார்க்கிறார்கள். அதற்கு அடுத்து படைப்பாற்றல் திறனையும், குழுவில் இணைந்து பணியாற்றும் திறனையும் பார்க்கிறார்கள். புராஜக்ட் எப்படி செய்திருக்கிறீர்கள் என்பதையும் கவனிப்பார்கள். இன்டர்ன்ஷிப் மூலம் அனுபவம் பெற்றிருக்கிறீர்களா என்பதும் கவனிக்கப்படும். மொத்தத்தில் உங்களை தனியாக அடையாளப்படுத்திக் காண்பிக்கும்போது உங்களுக்கு வேலை வாய்ப்பு உறுதியாக கிடைக்கும்” என்கிறார் சுரேஷ்.

“இவ்வளவு நெருக்கடியான நிலையிலும் இன்றைக்கு கேம்பஸ் இன்டர்வியூ மற்றும் நிறுவனங்களில் நடத்தப்படும் நேரடி இன்டர்வியூ இரண்டிலும் கவனித்தால் சில குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டுமே ஆட்களை தேர்வு செய்வதை தெரிந்துகொள்ள முடியும். இதுவரை, ஜாவா, டாட் நெட் போன்ற புரோகிராமிங் படித்தவர்களுக்கு எளிதாக வேலை கிடைத்து வந்தது. ஆனால் இப்போது இத்தகைய புரோகிராமிங் பிரிவுகளில் வேலை வாய்ப்பு குறைய ஆரம்பித்திருக்கிறது. இப்போது மிக முக்கியமான மூன்று பிரிவு சார்ந்த பணிகளில் பன்னாட்டு நிறுவனங்கள் மிகுந்த கவனம் செலுத்தி தங்களுடைய முதலீடுகளையும், பணிகளையும் போட்டி போட்டுக்கொண்டு செய்ய முன்வருகின்றன. கிளவுட் கம்ப்யூட்டிங், மொபைல் டெவலப்மெண்ட் அப்ளிக்கேஷன் மற்றும் Big Data   பணி போன்ற முக்கியமான துறைகளில் ஆட்கள் அதிகம் தேர்வு செய்யப்படுகிறார்கள்” என்று கூறும் கம்ப்யூட்டர் சயின்ஸ் கார்ப்பரேஷனின் மூத்த பொது மேலாளர் மகேஷ் வெங்கட்ரமணி, வேலை வாய்ப்பு பெறுவது எப்படி என்பதை விளக்கினார்.

“மாணவர்களுக்கு பிஸினஸ் நாலெட்ஜ் எப்படி இருக்கிறது என்பதிலும் பன்னாட்டு நிறுவனங்கள் மிகுந்த கவனம் செலுத்துகின்றன. அதாவது பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பெரும்பாலான திட்டப்பணிகள் வங்கி, நிதி, தொலைத்தொடர்பு, உற்பத்தி மற்றும் உடல் நலம் மற்றும் மருத்துவ சேவை சார்ந்த துறைகள் சார்ந்தவைகளாக இருக்கின்றன. ஆகையால், மாணவர்கள் மேற்கண்ட பிரிவுகள் குறித்த அடிப்படை விஷயங்களைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆகையால், பொறியியல் படிப்புளைப் படிக்கும் மாணவர்கள், தங்களது புராஜக்ட் ஒர்க்கை மொபைல் டெவலப்மெண்ட் அப்ளிக்கேஷனை, வங்கி அல்லது ஹெல்த்கேர் பிரிவில் செயல்படுத்துவது குறித்து யோசித்து செய்தால் வேலை வாய்ப்பு பிரகாசமாகும். கேம்பஸ் இன்டர்வியூவின்போது கிளவுட் கம்ப்யூட்டிங், மொபைல் கம்ப்யூட்டிங், பிக் டேட்டா போன்ற பிரிவுகளில் அடிப்படை விஷயங்களை அறிந்து இருப்பதை வெளிப்படுத்தினால் நிச்சயம் உங்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

கடந்த காலங்களில் கேம்பஸ் இன்டர்வியூவில் எதேனும் ஒரு படிப்பு படித்தால் போதும். வேலைக்கு ஆட்களை தேர்வு செய்து பயிற்சி கொடுத்து பணியில் அமர்த்திவிடலாம் என்று நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இன்றைக்கு நிலைமை மாறி, கல்லூரியில் தேர்வு செய்யும் போது ஓரளவுக்கு மேற்சொன்ன பிரிவுகளில் விவரம் அறிந்தவர்களை தேர்ந்தெடுக்கின்றன. இதன் மூலம் அவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் காலமும், செலவும் மிச்சமாகின்றன. கூடவே, பன்னாட்டு நிறுவனங்களில் புரோகிராமிங் பிரிவைத் தவிர, இதர பிரிவினர் என்னென்ன மாதிரியான பணியினை வழங்குகிறார்கள் என்பதையும் பார்த்து அதற்குத் தகுந்தபடி தயாராக வேண்டும். உதாரணத்திற்கு டெஸ்டிங் போன்ற பணிகளிலும் கவனம் செலுத்தலாம். இத்தகைய பணியில் சேர்வதற்கும் வங்கி, நிதி, தொலைத்தொடர்பு, உற்பத்தி மற்றும் உடல் நலம் மற்றும் மருத்துவ  சேவை சார்ந்த துறைகளின் அடிப்படை அறிவைப் பெற்றிருந்து, இத்துறை சார்ந்த மென்பொருள்களின் இயக்கங்களை அறிந்திருந்தாலும்  சிரமம் இல்லாமல் வேலை வாய்ப்பைப் பெறலாம். பொதுவாக, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. அந்த வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ற தகுதிகளை வளர்த்துக் கொள்வதுடன், சரியான அணுகுமுறையும் இருந்தால், வெற்றி நிச்சயம்’ ’என்று முத்தாய்ப்பாய் முடித்தார் மகேஷ்.

“அதிகரித்து வரும் பொறியியல் கல்லூரிகள், ஒவ்வொரு ஆண்டும் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்கள் என்று பார்க்கும்போது வேலைவாய்ப்பு சந்தையில் குறைவான சம்பளத்தில் நல்ல திறமையான ஆட்களை தேர்வு செய்யமுடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. ஆகையால், முன்பு போல கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை கிடைக்கும் என்று காத்திருந்து ஏமாறாமல் முதலில் வேலை கிடைக்கும் நிறுவனத்தில்  சேர்ந்து விடுவது நல்லது” என்கிறார், சிம்பஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் மனிதவளப் பிரிவின் பொது மேலாளர் ஸ்ரீதர் ராஜேந்திரன்.

“இப்போது, நாஸ்காம் அமைப்பு பொறியியல் மற்றும் பட்டப்படிப்பு முடித்து வருபவர்களுக்கு தகுதி நிலைத் தேர்வை நடத்துகிறது. இதில் அதிகளவில் மதிப்பெண் பெறுபவர்களின் பட்டியலையும் வெளியிடுகிறது.இந்தப் பட்டியலில் இருந்து சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தேவையானவர்களை தேர்ந்தெடுக்க ஆரம்பித்து இருக்கின்றன. ஆகையால், பொறியியல் முடித்த கையுடன் நாஸ்காம் நடத்தும் தகுதிநிலைத் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற முயற்சி செய்ய வேண்டும். இதன் மூலம், மிகவும் பின் தங்கிய பகுதியில் இருந்து படிக்கும் மாணவருக்கும் வேலை கிடைக்கும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இத்தகைய வாய்ப்பை கிராமத்தில் இருந்து படிக்க வரும் மாணவர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இப்போது பெரிய நிறுவனங்கள் ஒன்றிரண்டு கல்லூரிகளில் மட்டும் ஆட்களை தேர்வு செய்ய வருவதால் படிக்க சேரும்போது நல்ல கல்லூரியை தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும், படிப்பில் முழு கவனம் செலுத்தி 90 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெறுவது முக்கியமல்ல. மொழி அறிவு உள்பட பல்வேறு திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். கேம்பஸ் இன்டர்வியூவில் மற்ற மாணவனைக் காட்டிலும் இந்த மாணவனிடம் கூடுதலாக என்ன திறமை இருக்கிறது என்பதை முதன்மையாகப் பார்க்கிறோம். அத்துடன், கேம்பஸ் இன்டர்வியூ என்ற சந்தையில் மூன்று நிமிட கால அவகாசத்தில் உங்களைப் பற்றிய விஷயங்களைச் சொல்லி,  அவர்களை ஈர்த்து வேலை வாய்ப்பை எட்டிப் பிடித்து விட வேண்டும்” என்று யோசனை கூறுகிறார் அவர்.

பி.இ. தமிழ் மீடியம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு எப்படி?

அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகளில் 2010-ஆம் ஆண்டில் தமிழில் பொறியியல் படிப்புகள் தொடங்கப்பட்டன. இப்படிப்பில் முதல் கட்டமாகச் சேர்ந்த மாணவர்கள் தற்போது இறுதியாண்டில் படித்து வருகிறார்கள். இதற்கிடையே, ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மாணவர்களை வேலைக்குத் தேர்வு செய்யும் பணியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில் 2 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட, தமிழ் வழியில் படித்து வரும் 120 மாணவர்களில் இரண்டு பேருக்கு மட்டுமே கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்புக் கிடைத்துள்ளது.

தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வேலைகளில் 20 சதவீத இட ஒதுக்கீடு இருப்பதால், இந்த மாணவர்களுக்கு தமிழக அரசுப் பணிகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Calculating for HCP Structure - Engineering Physics - Anna University Chennai