30 November 2013

பொறியியலில் எந்த பாடத்தை தேர்வு செய்யப்போகிறீர்கள்?

கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி

    பொறியியல் படிக்க விரும்புவோர் பாடப் பிரிவைத் தேர்வு செய்வது சவாலான விஷயம். பொறியி யலில் மட்டும் 40 பாடப் பிரிவுகள் உள்ளன. அவை அனைத்துமே சிறப்பானவைதான். ஆனாலும், நாட்டின் வளர்ச்சியை தொலைநோக்கில் கணிக்கும்போது இ.இ.இ., சிவில், கம்ப்யூட்டர் சார்ந்த பாடப் பிரிவுகள் மாணவர்களின் எதிர்காலத்தை மேலும் பிரகாசிக்கச் செய்யும் என்றே தெரிகிறது.
     இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் எரிசக்தி வளர்ச்சி அபரிதமாக உள்ளது. எரிசக்தி மூலமே தொழில் வளம் பெருகும் என்பதால் காற்றாலை, சூரிய எரிசக்தி, அணுசக்தி என 500-க்கும் மேற்பட்ட திட்டங்களை அரசு வைத்துள்ளது. எனவே, இ.இ.இ. தேர்வு செய்யும் மாணவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்று உறுதியாகச் சொல்லலாம்.
     சிவில் தேர்வு செய்வோர் நான்கு ஆண்டு பட்டப்படிப்புடன் நிறுத்திக்கொள்ளாமல் பட்ட மேற்படிப்பும் படிக்க வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கட்டுமானத் தொழில் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. சீனாவில் 15 மாடிக் கட்டிடத்தை மூன்றே நாட்களில் கட்டி முடிக்கிறார்கள். இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்களை கற்றுத்தேர சிவில் பட்ட மேற்படிப்பு முக்கியம்.
பிரமாண்டமான அடுக்குமாடிகள், பாலங்களுக்கான அடித்தளம் அமைக்கும் தொழில்நுட்பம் தொடர்பான ஜியோ டெக்னாலஜி, கடலுக்குள் கட்டுமானம் அமைப்பது தொடர்பான ஓசோன் இன்ஜினியரிங், பூகம்பத்தை தாக்குப்பிடிக்கும் கட்டுமானம் தொடர்பான வைப்ரேஷன் அனாலிசிஸ் அண்டு எர்த்குவேக் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, நவீன கட்டுமான வடிவமைப்புகளை கற்றுத்தரும் அட்வான்ஸ் ஸ்டக்சரல் இன்ஜினியரிங், பழைய அடுக்குமாடிக் கட்டிடங்கள், பாலங்களின் அடித்தளத்தை உறுதிப்படுத்துவது மற்றும் இடம் பெயர்ப்பது தொடர்பான சஸ்டெய்னபிள் டெவலப்மென்ட் அண்டு கன்ஸ்டிரக்டிங் இன்ஜினியரிங் உள்ளிட்ட மேற்படிப்புகளுக்கு மிகச் சிறந்த எதிர்காலம் உள்ளது.
     தகவல் தொழில்நுட்பத் துறை தொய்வில் இருப்பதாக கூறப்படுவது தவறு. டி.எல்.எஸ்., சி.டி.எஸ். உள்ளிட்ட நிறுவனங்கள் 80% வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றன. வரும் பத்து ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத் துறை கட்டாயம் இன்னும் அதிக வளர்ச்சி காணும். கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பட்டப் படிப்புகளில் புதிய தொழிற்கல்வியை தெரிந்து வைத்துகொள்வதன் மூலம் தகவல் தொழில்நுட்பத் துறையில் சாதிக்கலாம்.
     பொதுவாகவே பொறியியல் பாடப் பிரிவை தேர்வு செய்வோர் அன்றைய நிலையை மட்டும் கணக்கில் கொள்ளாமல் அடுத்த பத்தாண்டுகளை சீர்நோக்க வேண்டும். குறிப்பிட்ட பாடப் பிரிவைத் தேர்வு செய்யும்போது, அத்துறை சார்ந்த வல்லுநர்கள், பேராசிரியர்களிடம் ஆலோசிக்க வேண்டும். சிறப்பாக படிப்பது எந்த அளவு முக்கியமோ, அதேபோல உங்களது பாடப் பிரிவை தேர்வு செய்வதும் முக்கியம்.