4 March 2014

ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் படிக்க வேண்டுமா?

ஜெர்மனியில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்கிற லட்சியம் பொறியியல் படிக்கும் மாணவர்களிடம் பரவலாக உள்ளது. ஜெர்மனி பல்கலைக்கழகங்களில் ஆங்கில வழி கல்வி இருந்தாலும், ஜெர்மன் மொழி கற்றவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு உள்ளது. ஜெர்மனியில் படிக்க TOEFL தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும். GRE நுழைவுத் தேர்வு கட்டாயம் இல்லை என்றாலும் எழுதுவது நல்லது. அதில் கிடைக்கும் மதிப்பெண்கள் சேர்க்கைக்கான வாய்ப்பை அதிகரிக்கும். பொறியியல் பட்டப் படிப்பு படிக்கும்போதே, ஜெர்மன் மொழியை கற்றுக்கொள்வது அவசியம். சென்னையில் மேக்ஸ் முல்லர் பவன் கல்வி நிறுவனத்தில் ஜெர்மன் மொழி கற்பிக்கப்படுகிறது. இங்கு வழங்கப்படும் சான்றிதழை, ஜெர்மனி கல்வி நிறுவனங்கள் அங்கீகரிக்கின்றன.

இங்கிலாந்தில் பட்டம் படிக்க விரும்புவோர் IELTS ஆங்கில மொழித் திறன் தகுதித் தேர்வு எழுத வேண்டும். இத்தேர்வில் ஒன்பது கிரேடுக்கு ஏழு கிரேடுகளில் நல்ல மதிப்பெண் வாங்கும்பட்சத்தில் அங்குள்ள சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைக்கும். இங்கு படிக்க GRE தேர்வு அவசியமில்லை. இங்கிலாந்தில் ஏராளமான ஓராண்டு படிப்புகள் உள்ளன. அதற்கு தகுந்த வேலைவாய்ப்புகளும் அங்கு ஏராளம். ஆனால், எந்தக் கல்வி நிறுவனத்தில் படித்தீர்கள் என்பதை வைத்தே வேலைவாய்ப்பு அங்கு கிடைக்கும். எனவே, நன்றாக விசாரித்து சிறந்த கல்வி நிறுவனங்களில் சேர வேண்டும். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் படிக்க IELTS தேர்வு எழுத வேண்டும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்காவின் சிறந்த கல்லூரிகளில் எம்.பி.ஏ. படிக்க பட்டப் படிப்பு மட்டும் அல்ல, இரண்டு அல்லது மூன்றாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

இவை தவிர, GMAT தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதன் மூலம் உலகில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் படிக்கலாம். இத்தேர்வு மொத்தம் 800 மதிப்பெண்களுக்கு மூன்றரை மணி நேரம் நடக்கும். நான்கு பகுதிகளை கொண்ட இதில், முதல் பகுதியில் ஒரு கட்டுரை எழுத வேண்டும். இரண்டாம் பகுதியான ரீசனிங் எபிலிட்டி தேர்வில் 12 கேள்விகள்.

மூன்றாம் பகுதியான குவான்டிடேட்டிவ் தேர்வில் 37 கேள்விகள். நான்காம் பகுதியான வெர்பல் தேர்வில் 46 கேள்விகள். இதில் 700 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்கள் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் இடம் பிடிக்கலாம்.

வேலைக்கு விண்ணப்பிப்பது, இன்டர்வியூவுக்கு போவது எப்படி?

பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படித்து முடித்ததும், அடுத்தகட்டமாக நல்ல நிறுவனத்தில் பணியில் சேர எடுக்கும் முயற்சி நமது வாழ்க்கைப் பயணத்தில் முக்கிய திருப்புமுனை. பணியில் சேர விண்ணப்பிப்பது சாதாரண விஷயமல்ல. அதில் முக்கியமான நடைமுறைகளை பலரும் கடைப்பிடிப்பதில்லை.

தற்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இ-மெயில் மூலமாகவே ரெஸ்யூம் அனுப்ப முடிகிறது. இக்கால இளைஞர்கள் ஜேம்ஸ்பாண்ட் ரவி, ஸ்மார்ட் கார்த்தி என விளையாட்டுத்தனமாக இ-மெயில் முகவரி வைத்திருக்கின்றனர். இதுபோன்ற இ-மெயில் முகவரியில் இருந்து விண்ணப்பிக்கும்போது, நிறுவனத்தின் பார்வையில், நம் மீதான நன்மதிப்பு குறையும்.

இ-மெயில் முகவரியில் நம்பர், குறியீடுகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், பல நிறுவனங்களில் கணினியில் வைரஸ் பரவாமல் தடுக்க ஸ்பேன் ஃபில்டர் பயன்படுத்துகின்றனர். இதனால் எண், குறியீடுகளுடனான இ-மெயில் முகவரியில் இருந்து அனுப்பும் மெயில்கள் சென்று சேராமல் இருக்க வாய்ப்புள்ளது. நம் மீதான முதல் பார்வையே நல்ல எண்ணத்தை உருவாக்க வேண்டியது அவசியம் என்பதால், தொழில் ரீதியாக இ-மெயில் முகவரியை வடிவமைத்து வைத்துக்கொள்வது நல்லது.

பணிக்கு செல்லும் நிறுவனத்தைப் பற்றி நன்கு ஆய்வு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். நிறுவனத்தின் தொழில் நடவடிக்கை, பணி சார்ந்த தகவல்கள் என்பது போன்ற முக்கிய தகவல்களை நேர்முகத் தேர்வுக்கு செல்லும் முன்பு, அந்நிறுவன இணையதளத்துக்கு சென்று தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். படித்த கல்வி நிறுவனம் பற்றிய தகவல்களையும் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வுக்கு செல்லும்போது, உடன் கொண்டு செல்லும் ரெஸ்யூம் முக்கிய அம்சம். படிப்பு சார்ந்த அனைத்து தகவல்களும் அதில் இருக்க வேண்டும். சுய அறிமுகம், படித்த படிப்புகள், தெரிந்துவைத்திருக்கும் அம்சங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். இந்த ரெஸ்யூம் 2 பக்க அளவிலும், வேலைக்கு விண்ணப்பிக்கக் கூடியவரின் சுய திறமை குறித்த தகவல்கள் 20 பக்கம் வரையும் இருக்கலாம். அதில் முழுமையான விவரங்களுடன் கூடிய சுய அறிமுகம், தனித்திறமைகள், படிக்கும்போது செய்த சாதனைகள் என சகலவிதமான தகவல்களையும் அளிப்பதன் மூலம், பணிக்கு கூடுதல் வாய்ப்புண்டு.

ஆடை விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். பென்சில்பிட், லோ-ஹிப் பேன்ட், ஷார்ட் சுடிதார், ஜிகினா, கண்ணாடி, பூ வேலைப்பாடு ஆடைகளை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற ஆடைகள் விஷயத்துக்காக ஒரு ஐ.டி. நிறுவன நேர்முகத் தேர்வில் 50 பேரை திருப்பி அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது. ஃபார்மல் சுடிதார், பிளெய்ன், ஸ்டிரெய்ப்டு என பெண்கள் ஆடை விஷயத்தில் ஒழுங்குமுறை கடைப்பிடிக்க வேண்டும். ஆண்கள் முழுக்கை சட்டை அணிந்து மடித்துவிடுவது கூடாது. பலருக்கு டை கட்டத் தெரிவதில்லை. பேன்ட் பக்கிள்ஸ் வரை டையின் நுனிப்பகுதி இருக்க வேண்டும். ஃபார்மல் பேன்ட், சர்ட் அணிந்து நேர்முகத் தேர்வுக்கு செல்ல வேண்டும். ஆடையில் அலங்காரத்தை காட்டுவதைவிட நேர்த்தியை, தூய்மையைக் காட்டுவது அவசியம். மற்ற நடைமுறைகளைப் பற்றி நாளை தெரிந்துகொள்ளலாம்

சிங்கப்பூரில் பட்டப் படிப்பு!

நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூரில் சேர்ந்து இளநிலை பட்டப் படிப்பு படிக்க விரும்பும் பிளஸ் டூ மாணவர்கள்  விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

ஆர்க்கிடெக்ச்சர், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், பிஸினஸ் அனலிட்டிக்ஸ், மருத்துவம், என்ஜினீயரிங், நிதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 50-க்கும் மேற்பட்ட இளநிலை பட்டப் படிப்புகள் நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூரில் உள்ளன. பிளஸ் டூ படிப்பை முடித்தவர்களும், இந்த மார்ச் மாதம் பிளஸ் டூ தேர்வு எழுதவிருப்பவர்களும் இப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்த பிறகு தேவையான ஆவணங்களை (நகல்கள்) இணைத்து தபால் மூலம் அனுப்பிவைக்க வேண்டும்.

பிளஸ் டூ தேர்வில் பெற்ற மதிப்பெண் சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ், IELTS, TOEFL, SAT போன்ற தேர்வுகளில் பெற்றிருக்கும் பாயிண்டுகள் (இருந்தால் மட்டும்), பாஸ் போர்ட் விவரங்கள் (இருந்தால் மட்டும்), படிப்பு நீங்கலாக மற்ற திறமைகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

மிகச் சிறப்பாகப் படிக்கும் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்பும் வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.03.2014
விவரங்களுக்குwww.askadmissions.nus.edu.sg

என்.ஐ.டி.க்களில் எம்.சி.ஏ. படிப்பு!

திருச்சி, அகர்தலா, அலகாபாத், போபால், கோழிக்கோடு, துர்காபூர், ஜாம்ஷெட்பூர், குருஷேத்ரா, ராய்ப்பூர், வாரங்கல் போன்ற இடங்களில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் (என்.ஐ.டி.) எம்.சி.ஏ. படிக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

இப்படிப்பில் சேர அகில இந்திய அளவில் நடத்தப்படும் ‡NIMCET  2014 நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இந்த ஆண்டுக்கான நுழைவுத் தேர்வை  அகர்தலாவில் உள்ள என்.ஐ.டி.  நடத்துகிறது.  

விண்ணப்பிப்பது எப்படி?:  பொதுப் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1,800. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு கட்டணம் ரூ.900. பாரத ஸ்டேட் வங்கி கவுண்டரில் செலுத்தி இ-ரசீது பெற வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, பிரிண்ட் அவுட் எடுத்து இ-ரசீதுடன், தேவையான இதர ஆவணங்களையும் இணைத்து பதிவுத்  தபாலில் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவேண்டும்.

The Secretary,
NIMCET  2014,
National Institute of Technology Agartala,
Barjala, Jirania  799046, Tripura (W).
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 03.04.2014
நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: 25.05.2014
விவரங்களுக்கு: www.nimcet2014.nita.ac.in