11 November 2013

ஐ.டி. நிறுவனங்களில் வேலை பெற Nasscom நடத்தும் தகுதித் தேர்வு பொன். தனசேகரன், சக்திவேல்

ஐ.டி. நிறுவனங்களில் வேலை பெற Nasscom நடத்தும் தகுதித் தேர்வு
பொன். தனசேகரன்,  சக்திவேல்

தகவல் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் துறை நிறுவனங்களில் சேர விரும்பும் என்ஜினீயரிங் மாணவர்களுக்காக நாஸ்காம் அமைப்பு தகுதித் தேர்வை நடத்துகிறது. இத்தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறும் மாணவர்களை ஐ.டி. நிறுவனங்கள் வேலைக்கு எடுத்துக் கொள்கின்றன.

கவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஏராளமான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. என்ஜினீயரிங் கல்லூரிகளுக்குச் சென்று ‘கேம்பஸ் இன்டர்வியூ’ மூலம் தகுதி வாய்ந்த மாணவர்களை பல தொழில் நிறுவனங்கள் தேர்வு செய்கின்றன. இதுதவிர, தகுதி வாய்ந்த மாணவர்களை நேரடியாக தேர்வு செய்யும் நிறுவனங்களும் இருக்கின்றன. தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட நாஸ்காம் அமைப்பு, தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களில் தகுதி வாய்ந்த மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக ஆன்லைன் மூலம் நாக்டெக் (NAC - Tech) என்ற தகுதித் தேர்வை கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தி வருகிறது. டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ், அக்சஞ்சர், காக்னிசன்ட், எச்சிஎல் போன்ற நிறுவனங்கள் இத்தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்க உதவியுள்ளன. நாஸ்காமில் (NASSCOM)  உறுப்பினர்களாக உள்ள பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், இத்தேர்வில் நல் மதிப்பெண்களைப் பெறும் மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி வேலைவாய்ப்பை வழங்குகின்றன.

இத்தேர்வை யார் எழுதலாம்?

2013 -ஆம் ஆண்டில் பொறியியல் பட்டப் படிப்பை முடித்த மாணவர்களும் 2014-ஆம் ஆண்டில் பொறியியல் படிப்பை முடிக்க இருக்கும் மாணவர்களும் இத்தேர்வை எழுதலாம். இத்தேர்வை எழுதும் மாணவர்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ மற்றும் பட்டப் படிப்புகளில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

இத்தேர்வு எப்படி இருக்கும்?

இந்தத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. முதல் தாளுக்கு (பிரிவு-ஏ) விடையளிக்க 60 நிமிடங்களும், இரண்டாவது தாளுக்கு (பிரிவு-பி) விடையளிக்க 30 நிமிடங்களும் வழங்கப்படும். முதல் தாளை அனைத்து மாணவர்களும் எழுத வேண்டும். முதல் தாளில் Verbal Ability, Reading Comprehension, Analytical Reasoning, Attention to Details   ஆகிய பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும். இரண்டாவது தாளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் எந்தப் பாடத்தை எடுத்துப் படிக்கிறார்களோ அதில் கேள்விகள் இருக்கும். இந்த இரண்டாவது தாள், மாணவர்களின் விருப்பத்தைப் பொருத்தது. ஐடி, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், சிவில், கெமிக்கல், டெக்ஸ்டைல், பயோ-டெக்னாலஜி, டெலிகம்யூனிக்கேஷன் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் தேர்வை எழுதலாம். Edutech, Aptech Assessment and Testing Solutions  ஆகிய அமைப்புகளிடம் இத்தேர்வை நடத்தும் பொறுப்பை நாஸ்காம் ஒப்படைத்துள்ளது. தமிழ்நாட்டில் ஆப்டெக் நிறுவனம் இத்தேர்வை நடத்துகிறது. இத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

இத்தேர்வில் முதல் தாளை (பிரிவு-ஏ) மட்டும் எழுதுபவர்களுக்குக் கட்டணம் ரூ.158. பிரிவு ஏ மற்றும் பிரிவு பி ஆகிய இரண்டு தாள்களையும் எழுதும் மாணவர்களுக்குக் கட்டணம் ரூ.237. இதுதவிர, தேர்வு மையத்தை பயன்படுத்துவதற்கான கட்டணமும் தனியே  செலுத்த வேண்டும். சில கல்லூரிகளே முனைந்து, தங்களது மாணவர்கள் இத்தேர்வை எழுதுவதற்காக உதவுகின்றன. மாணவர்கள் தனிப்பட்ட முறையிலும் இத்தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். இத்தேர்வு மதிப்பெண்கள் நாஸ்காம் உறுப்பினர் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும். தகுதியுடைய மாணவர்களை, அந்த நிறுவனங்கள் அழைத்து, நேர்முகத் தேர்வு நடத்தி வேலைக்குத் தேர்வு செய்யும். இத்தேர்வு குறித்த தகவல்களை இ-மெயில் வாயிலாகவும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

“பன்னாட்டு நிறுவனங்களும் தாங்கள் வேலைக்குத் தேர்வு செய்பவர்களுக்கான பயிற்சிக்குச் செலவு செய்வதைக் குறைக்க விரும்புகின்றன. தேர்வு செய்யப்படும் மாணவர்களை நேரடியாக வேலையில் களம் இறக்க வே விரும்புகின்றன. நாக்டெக் தேர்வானது வேலைக்கு தயார்நிலையில் மாணவர்கள் இருப்பதை உத்தரவாதப்படுத்துவதற்கான தேர்வுதான். இந்தத் தேர்வை எழுதிய உடன் வேலை கிடைத்துவிடும் என்று  எதிர்பார்க்கக்கூடாது. இத்தேர்வை எழுதிய மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை எளிதாகக் கிடைக்கும் சாத்தியங்களும் உண்டு. முதல் தாளில் சாப்ட் ஸ்கில் என்றழைக்கப்படும் மென் திறன் சோதிக்கப்படுகிறது. இரண்டாவது தாளில் பொறியியல் மாணவர்களின் பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. அறிவியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்தவர்கள் முதல் தாளை மட்டும் எழுதினால் போதுமானது. இந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறவர்களை நாங்கள், வெற்றி பெற்றிருக்கிறார் என்றோ அல்லது தோல்வி அடைந்திருக்கிறார் என்றோ சொல்வதில்லை. தரவரிசைப் படுத்துகிறோம். இதில் இருந்து மாணவர்களை தேர்ந்தெடுத்து நேர்முகத் தேர்வு நடத்தி, நிறுவனங்கள் வேலை வழங்குகின்றன. கடந்த ஆண்டு நாக்டெக் தேர்வு எழுதியவர்களில் 25-லிருந்து 35 சதவீதம் பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்” என்கிறார் நாஸ்காம் மண்டல இயக்குநர் கே. புருசோத்தமன்.

‘கடந்த ஆண்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியா முழுவதும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேரை தேர்வு செய்து இருக்கின்றன. இந்த ஆண்டு ஒரு லட்சத்து அறுபதாயிரம் பேரை தேர்வு செய்ய இருக்கிறார்கள். மாணவர்கள் படிக்கும்போதே எந்தப் பிரிவில் என்ன மாதிரியான வேலை இருக்கிறது என்பதையும், அதற்கு என்னென்ன திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்துகொண்டு அதற்குத் தகுந்தாற்போல் தங்களை தகுதிப்படுத்திக் கொண்டால் நிச்சயம் வேலை கிடைக்கும்’ என்பது அவரது ஆலோசனை.

விவரங்களுக்கு: www.nactech.nasscom.in