11 November 2013

வென்றவர்கள் வழிகாட்டுகிறார்கள்! மோ. கணேசன்

கேம்பஸ் இன்டர்வியூ மூலம் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்கள் கூறும் யோசனைகள் இதோ...

சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடியில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் படிப்பில் இறுதியாண்டு படித்து வரும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவி பானுப்பிரியாவுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. ஆண்டு ஊதியம் ரூ.3.24 லட்சம்.

வெற்றிகரமாக கேம்பஸ் இன்டர்வியூவை எதிர்கொள்வது குறித்து தனது அனுபவங்களைக் கூறுகிறார் பானுப்ரியா:

கேட்டர் பில்லர் நிறுவனம் நடத்திய இன்டர்வியூதான் நான் எதிர்கொண்டதில் முதலாவது. இதில் வெர்பல், ஆப்ஸ், டெக்னிக்கல், ஹெச்.ஆர். என நான்கு கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டது. இதில் எனக்கு செக்ஷனல் கட்ஆப் (ஒவ்வொரு பிரிவிலும் குறிப்பிட்ட மதிப்பெண்களை எடுத்திருக்க வேண்டும்) கிடைக்கவில்லை. அதனால் எனக்கு வேலை கிடைக்கவில்லை. அடுத்து, ரோட்டார்க் என்ற நிறுவனம் நடத்திய இன்டர்வியூவில் கலந்து கொண்டேன். எனது ரெஸ்யூமேவை அடிப்படையாக வைத்து என்னை நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருந்தனர். கம்யூனிக்கேஷன் ஸ்கில் குறைவாக இருந்ததால் நான் இந்த நிறுவனத்திலும் தேர்ச்சி பெறவில்லை. அடுத்து, ஆக்செஞ்சர் எனும் சாப்ட்வேர் நிறுவனத்தின் இன்டர்வியூவை எதிர்கொண்டேன். இதிலும் தேர்ச்சி பெறவில்லை. இதனையடுத்து, இன்போசிஸ் நிறுவனம் நடத்திய தேர்வில் தகுதி பெற்றேன்.

பொதுவாக முதலில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இதில் ஆங்கில அறிவு, ரீசனிங் திறன், கணிதம் உள்ளிட்டவை குறித்து கேள்விகள் இருந்தன. இதில் நிறையபேர் தேர்ச்சி அடைந்து விடுவார்கள். இதனையடுத்து, குரூப் டிஸ்கஷன் இருக்கும். இதுதான் ‘எலிமினேஷன் ரவுண்ட்’ என்பார்கள். திறமையாக, தைரியமாக, சரளமாக பேசத்தெரிந்திருக்க வேண்டும். ஆங்கில மொழி அறிவு மிகவும் அவசியம். இது நிறைய மாணவர்களிடம் இல்லாமல் போவதால்தான் இந்தக் கட்டத்தில் பலரும் தோல்வியை சந்தித்து விடுகின்றனர். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு டெக்னிக்கல் இன்டர்வியூ இருக்கும். இந்தக் கட்டத்திலும் ஆட்களை கழற்றிவிடப் பார்ப்பார்கள். தொழில்நுட்ப அறிவுத் திறன் எவ்வளவு இருக்கிறது, பிரச்சினைகளைச் சமாளிக்கும் திறன் இருக்கிறதா என்பதையெல்லாம் இங்கே பரிசோதிப்பார்கள். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் ஹெச்.ஆர். இன்டர்வியூவிற்கு அழைக்கப்படுவர். வெளிமாநிலம், வெளிநாடுகளில் பணியாற்ற முடியுமா? நிறுவனத்திற்கு ஏற்ப செயல்படுவீர்களா? சொந்த விருப்பங்கள் என்னென்ன? என்று கேட்பார்கள். கேம்பஸ் இண்டர்வியூவிற்கு வரும் நிறுவனங்கள், மாணவர்களிடம் புதிதாக கற்றுக் கொள்ளும் திறன் இருக்கிறதா? கம்யூனிக்கேஷன் ஸ்கில் இருக்கிறதா? கடினமான சூழல்களை திறம்பட எதிர்கொள்ளும் திறமை இருக்கிறதா? ஸ்டிரெஸ் மேனேஜ்மெண்ட் இருக்கிறதா என்று எதிர்பார்க்கிறார்கள். இவைகளை மாணவர்கள் பூர்த்தி செய்து விட்டால், கேம்பஸ் பிளேஸ்மெண்ட் உறுதி." என்கிறார் அவர்.

கோவையிலுள்ள சி.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் பாடப்பிரிவில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கிறார் ஸ்வேதா. முதல் தலைமுறைப் பட்டதாரியான இவர், தனது கல்லூரியில் இந்த ஆண்டு நடைபெற்ற கேம்பஸ் இன்டர்வியூ மூலம், சாலிட்டான் நிறுவனத்தினரால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவருக்கு ஆண்டு ஊதியம் ரூ.3.60 லட்சம்.

நான் 5 கம்பெனிகளின் கேம்பஸ் இண்டர்வியூவில் கலந்து கொண்டேன்.  அதில், 3 சாப்ட்வேர் கம்பெனிகள், 2 கோர் கம்பெனிகள். சாப்ட்வேர் கம்பெனிகளில் நான் தேர்வாகவில்லை. கோர் கம்பெனியான சாலிட்டான் கம்பெனியில் தேர்ச்சி பெற்றேன். டெக்னிக்கல் ரவுண்ட், குரூப் டிஸ்கஷன், கட்டுரை எழுதுதல், பிராப்ளம் சால்விங், ஜெனரல் ஹெச்.ஆர், டெக்னிக்கல் ஹெச்.ஆர், புரோகிராம் ரவுண்ட் என ஏழு கட்டங்களாக இந்த கம்பெனி இன்டர்வியூ நடத்தியது. மாணவர்கள் ஒபன் மைண்டுடன் இருக்கிறார்களா? டெக்னிக்கலாக ஸ்ட்ராங்காக இருக்கிறார்களா? லாஜிக் பிரச்சினைகளை எளிதாக எதிர்கொள்கிறார்களா? கம்யூனிக்கேஷன் ஸ்கில் இருக்கிறதா என்று தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

பாடப் புத்தகத்தில் உள்ளவை மட்டுமே உலகம் என மாணவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பணி இடங்களுக்கு, தொழில் நிறுவனங்களுக்கு தகுந்த திறமைகளை இப்போதுள்ள மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். புராஜக்ட்டிலும் தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பெறுவதிலும் மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் வேலைவாய்ப்புக்குத் தேவையான திறமைகளும் இருந்தால் வேலை கிடைப்பதில் பிரச்சினை இருக்காது" என்கிறார் ஸ்வேதா.