23 June 2014

சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு

சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு எழுதுவதற்கும் இந்தியன் ஃபாரஸ்ட் சர்வீஸ் மெயின் தேர்வு எழுதுவதற்கும் தகுதி பெறுவதற்கு இந்த சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வை எழுத வேண்டும்.

ந்திய ஆட்சிப் பணிகளில் உயர் பொறுப்புகளை ஏற்று முக்கியத்துவம் வாய்ந்த நிர்வாகப் பணிகளில் சேர விரும்புபவர்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுத வேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வுகள் மூன்று கட்டமாக நடைபெறுகின்றன. முதலில் பிரிலிமினரி எனப்படும் முதல்நிலைத் தேர்வுகளை எழுத வேண்டும். இத்தேர்வை எழுதியவர்களிலிருந்து தேர்வு பெற்றவர்கள் மெயின் என்ற முதன்மைத் தேர்வை எழுத வேண்டும். இதில் தகுதி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். முதன்மைத்  தேர்வு மற்றும் நேர்காணல்  தேர்வுகளில் பெற்ற  மதிப்பெண்களைப் பொருத்து சிவில் சர்வீஸ் பணிகளில் சேர்க்கப்படுகிறார்கள்.

இத்தேர்வில் ஒரு முறை தேர்வு பெற முடியாமல் போனால் மீண்டும் முதலிலிருந்தே தொடங்க வேண்டும் என்பதுதான் இத்தேர்வின் மிக முக்கியமான அம்சம். ஒரு மாணவர் முதல்நிலைத் தேர்விலும் மெயின் தேர்விலும் தேர்ச்சி பெற்று, நேர்காணல் தேர்வின் முடிவில் தேர்ச்சி பெறாமல் போனால் மீண்டும் முதல் நிலைத் தேர்விலிருந்தே எழுத வேண்டியதிருக்கும். இத்தகைய கடுமையான முறை இருந்தாலும்கூட முதல் முறையிலேயே சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, இந்திய ஆட்சிப் பணிகளில் சேருபவர்களும் இருக்கிறார்கள்.

இத்தேர்வை எழுத விரும்புபவர்கள் ஏதேனும் பட்டப் படிப்பைப் படித்திருக்க வேண்டும். பட்டப் படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். அதேசமயம், மெயின் தேர்வுகளை எழுதுவதற்கு முன்னதாக பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்று, அதற்கான சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும். எம்பிபிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளை முடித்த மாணவர்கள் இன்டர்ன்ஷிப்பை முடிக்காத நிலையில் இருந்தாலும் மெயின் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர். ஆனால், நேர்முகத் தேர்வு நேரத்தில் இன்டர்ன்ஷிப் முடித்து பட்டச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

இத்தேர்வை எழுதும் மாணவர்களுக்கு 21 வயது ஆகி இருக்க வேண்டும். வருகிற ஆகஸ்ட் 1-ஆம் தேதியன்று அவர்களுக்கு 32 வயதுக்கு மேல் ஆகி இருக்கக் கூடாது. அதாவது 1982-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு முன்னதாகவோ 1993-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குப் பிறகோ பிறந்திருக்கக்கூடாது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு ஐந்து ஆண்டுகளும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு  மூன்று ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு உண்டு.

இதேபோல, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு. பொதுப் பிரிவு மாணவர்கள் ஆறு முறை இத்தேர்வை எழுதலாம். ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சம் ஒன்பது முறை இத்தேர்வை எழுதலாம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு எத்தனை முறை இத்தேர்வை எழுதலாம் என்கிற வரம்பு எதுவும் கிடையாது. பொதுப் பிரிவைச் சேர்ந்த ஊனமுற்ற மாணவர்கள் ஒன்பது முறை வரை இத்தேர்வை எழுதலாம்.

தற்போது சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வு வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதி  நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களிலும் புதுச்சேரியிலும் முதல் நிலைத் தேர்வு எழுதலாம். முதல்நிலைத் தேர்வில் ஏற்கெனவே மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அது நடைமுறையில் இருந்து வருகிறது. அதன்படி, முதல்நிலைத் தேர்வில் இரண்டு தாள்கள் உண்டு. அதில் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு தாளுக்கும் 200 மதிப்பெண்கள். முதல் தாள் பொது அறிவு தொடர்பானது. இரண்டாம் தாள் ஆங்கில மொழி தொடர்பானது.

ஒவ்வொன்றுக்கும் விடையளிக்க இரண்டு மணி நேரம் வழங்கப்படும். தேசிய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நடப்பு நிகழ்வுகள், இந்தியா மற்றும் இந்திய தேசிய இயக்க வரலாறு, இந்திய, உலகப்புவியியல், இந்திய அரசியல் மற்றும் ஆட்சி ஆளுமை, பொருளாதாரம், சமூக மேம்பாடு, சுற்றுச்சூழல், பல்லுயிர்ப் பெருக்கம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பொதுப் பிரச்சினைகள், பொது அறிவியல் ஆகியவை குறித்து முதல் தாளில் அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். காம்ப்ரிஹென்சன், இன்டர்பெர்சனல் ஸ்கில்ஸ், லாஜிக்கல் ரீசனிங் அண்ட் அனலிட்டிக்கல் எபிலிட்டி, டெசிஷன் மேக்கிங் அண்ட் புராபுளம் சால்விங், ஜெனரல் மென்டல் எபிலிட்டி, பேசிக்நியூமரசி, இங்கிலீஷ் லாங்க்வேஜ் காம்ப்ரிஹென்சன் ஸ்கில்ஸ் ஆகியவை குறித்து, அப்ஜெக்ட்டிவ் முறையிலான கேள்விகள் இரண்டாம் தாளில் இருக்கும்.

கேள்வித்தாள்கள் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் இருக்கும். இங்கிலீஷ் லாங்க்வேஜ் காம்ப்ரிஹென்சன் ஸ்கில்ஸ் தொடர்பான கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு எழுதுவதற்கும் இந்தியன் ஃபாரஸ்ட் சர்வீஸ் மெயின் தேர்வு எழுதுவதற்கும் முன்னதாக இந்தப் பொது முதல் நிலைத் தேர்வை எழுதி அதில் தகுதி பெற வேண்டும். இந்த முதல் நிலைத் தேர்வை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களுடன் ஃபாரஸ்ட் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களும் எழுதுவார்கள்.

கால்நடை மருத்துவ அறிவியல், தாவரவியல், வேதியியல், ஜியாலஜி, கணிதம், இயற்பியல், புள்ளியியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் இளநிலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் இந்தியன் ஃபாரஸ்ட் சர்வீஸ் தேர்வை எழுதலாம். வேளாண்மை, வனவியல் அல்லது பொறியியல் படிப்புகளில் இளநிலைப் பட்டம் பெற்றவர்களும் இத்தேர்வை எழுதலாம். அத்துடன் உடற்தகுதியும் அவசியம். இதற்கான விதிமுறைகளும் முதல் நிலைத் தேர்வுக்கான பாடத் திட்டங்களும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தப் பொது முதல்நிலைத் தேர்வை எழுத விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.100. பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகளுக்குக் கட்டணம் எதுவும் கிடையாது. சிவில் சர்வீஸ் முதல்நிலைப் பொதுத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் தாங்கள் சிவில் சர்வீஸ் பணிகளுக்கு மட்டும் விண்ணப்பிக்கிறோமா அல்லது இந்தியன் ஃபாரஸ்ட் சர்வீஸ் பணிகளுக்கு மட்டும் விண்ணப்பிக்கிறோமா என்பதைக் குறிப்பிட வேண்டும் அல்லது இந்த இரண்டு பணிகளுக்கும் சேர்த்து இத்தேர்வை எழுதுகிறோமா என்பதையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை ஜூன் 30-ஆம் தேதி இரவு 11.59 மணிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும்.

விவரங்களுக்கு: www.upscoline.nic.in