6 February 2014

ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் தேர்வு பட்டதாரி மாணவர்களுக்கு மத்திய அரசு வேலை!

பொன்.தனசேகரன்

மத்திய அரசுப் பணிகளில் சேர விரும்பும் பட்டதாரி மாணவர்கள் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் நடத்தும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வை எழுத வேண்டும்.


மத்திய அரசுப் பணிகளில் சேர விரும்புபவர்களுக்காக ‘ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்’ ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வை (Combined Graduate)  நடத்துகிறது. சென்ட்ரல் செக்ரட்டேரியேட் சர்வீஸ், சென்ட்ரல் விஜிலன்ஸ் கமிஷன், இன்டலிஜென்ஸ் பீரோ, ரயில்வே அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம், ஏஎஃப் தலைமையகம், மற்ற அமைச்சகங்கள், துறைகள், மற்றம் அரசு அமைப்புகளில் உதவியாளர் பணிகளில் சேர விரும்புபவர்கள் இத்தேர்வை எழுத வேண்டும். அத்துடன், வருமானவரித் துறை இன்ஸ்பெக்டர், சுங்க வரித்துறை இன்ஸ்பெக்டர், தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் (எக்ஸாமினர்), அசிஸ்டெண்ட் என்போர்ஸ்மெண்ட் அதிகாரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் (சிபிஐ), இன்ஸ்பெக்டர் ஆஃப் போஸ்ட்ஸ் (தபால் துறை) டிவிஷனல் அக்கவுன்டண்ட் (சிஏஜி அலுவலகங்களில்), ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்வெஸ்டிகேட்டர் கிரேடு-2, போதை மருந்து தடுப்பு இன்ஸ்பெக்டர் (சென்ட்ரல் பீரோ ஆஃப் நார்காட்டிக்ஸ்) ஆகிய பணிகளில் சேர விரும்புகிறவர்களும் இத்தேர்வை எழுத வேண்டும். ஆடிட்டர், அக்கவுன்டண்ட், ஜூனியர் அக்கவுன்டண்ட், கிளார்க் (அப்பர் டிவிஷன் கிளார்க்), வரி உதவியாளர், கம்பைலர் போன்ற பணிகளில் சேர விரும்புபவர்களும் இத்தேர்வை எழுத வேண்டும்.

இந்தப் பணிகளில் சேர பட்டப் படிப்புப் படித்திருக்க வேண்டும். கம்பைலர் பணியில் சேர விரும்புபவர்கள், பொருளாதாரம், புள்ளியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளை பட்டப் படிப்பில் கட்டாயப் பாடமாகவோ அல்லது விருப்பப் பாடமாகவோ எடுத்துப் படித்திருக்க வேண்டும். ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்வெஸ்டிகேட்டர் கிரேடு-2 பணியில் சேர விரும்புபவர்கள் பட்டப் படிப்பில் புள்ளியியல் பாடத்தை முக்கியப் பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும் அல்லது பட்டப் படிப்பில் கணிதத்தை முக்கியப் பாடமாக எடுத்து, புள்ளியியலையும் ஒரு பாடமாக எடுத்துப் படித்தவர்களும் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் அல்லது பட்டப் படிப்பில் பொருளாதாரத்தை முக்கியப் பாடமாக எடுத்து, அத்துடன் புள்ளியியலையும் ஒரு பாடமாக எடுத்துப் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் அல்லது பட்டப் படிப்பில் வணிகவியல் பாடத்துடன், புள்ளியியலை ஒரு பாடமாக எடுத்துப் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். தொலைநிலைக் கல்வி அல்லது திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களில் பெறும் பட்டங்கள், இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்விக் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டியது அவசியம். உதவியாளர் பணியில் சேர விரும்புபவர்களுக்கு கம்ப்யூட்டர் திறன் இருக்க வேண்டியது அவசியம்.

வருமான வரித்துறை இன்ஸ்பெக்டர், மத்திய சுங்க வரித் துறை இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் (தடுப்பு அதிகாரி), இன்ஸ்பெக்டர் (எக்ஸாமினர்), இன்ஸ்பெக்டர் ஆஃப் போஸ்ட்ஸ், அசிஸ்டெண்ட் என்ஃபோர்ஸ்மெண்ட் ஆபீசர், இன்ஸ்பெக்டர் (சிபிஎன்) கம்பைலர், டிவிஷனல் அக்கவுன்டண்ட், ஆடிட்டர்ஸ், அப்பர் டிவிஷன் கிளார்க், டாக்ஸ் அசிஸ்டெண்ட்ஸ், ஜுனியர் அக்கவுண்டன்ட் அண்ட் அக்கவுண்டன்ட், சப் இன்ஸ்பெக்டர் (சிபிஎன்) ஆகிய பணிகளில் சேர விரும்புபவர்கள் 18 வயதிலிருந்து 27 வயதுக்குள் இருக்க வேண்டும் அதாவது 2-01-1987க்கு முன்னதாகவோ அல்லது 1-01-1996க்குப் பிறகு பிறந்தவர்களாகவோ இருக்கக் கூடாது.


ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்வெஸ்டிக்கேட்டர் கிரேடு-2 பணியில் சேர விரும்புவர்களுக்கு 26 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது. அதாவது, 2-01-1988க்கு முன்னதாகப் பிறந்திருக்கக்கூடாது. சிபிஐ பிரிவில் அசிஸ்டெண்ட், சப் இன்ஸ்பெக்டர் பணியில் சேர விரும்புபவர்கள், 20 வயதிலிருந்து 27 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது, 2-01-1987க்கு முன்னதாகவோ அல்லது 1-01-1994க்குப் பிறகு பிறந்தவர்களாகவோ இருக்கக் கூடாது.
தாழ்த்தப்பட்டோருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். ஓபிசி பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் 15 ஆண்டுகளும் விலக்கு அளிக்கப்படும். இதேபோல மற்ற சில பிரிவினருக்கும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படுகிறது. இந்தப் பணிகளில் சேருவதற்காக தகுதி மற்றும் விதிமுறைகள் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த எழுத்துத் தேர்வு இரண்டு நிலைகளைக் கொண்டது. முதலில் அப்ஜெக்ட்டிவ் முறையில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதையடுத்து குறிப்பிட்ட பணிகளுக்காக தேவையைக் கருத்தில் கொண்டு கம்ப்யூட்டர் புரபிசியன்சி டெஸ்ட், இன்டர்வியூ, ஸ்கில் டெஸ்ட் போன்ற தேர்வுகள் நடத்தப்படும். கோவை, சென்னை, மதுரை, புதுச்சேரி, திருநெல்வேலி, திருச்சி உள்பட நாட்டின் பல்வேறு  முக்கிய நகரங்களில் இந்தத் தேர்வை எழுதலாம். இந்த TIER-1  எழுத்துத் தேர்வு ஏப்ரல் 27, மே 4 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தேவைப்பட்டால் அதைத் தொடர்ந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தேர்வு நடைபெறும். TIER-2 எழுத்துத் தேர்வு (மூன்றாம் தாள்) ஆகஸ்ட் 30-ஆம் தேதியும், முதல் மற்றும் இரண்டாம் தாள்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதியும் நடைபெறும்.


ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்வெஸ்டிகேட்டர் தவிர, நேர்காணலுடன் கூடிய பணிகளில் சேருவதற்கு டயர்-1 தேர்வில் ஜெனரல் இன்டலிஜன்ஸ், ரீசனிங், பொது விழிப்புணர்வு, குவான்டிட்டேட்டிவ் ஆப்டிட்யூட், இங்கிலீஷ் காம்ப்ரிஹென்சன் ஆகியவற்றில் வினாக்கள் கேட்கப்படும். 2 மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வுக்கு மொத்த மதிப்பெண்கள் 200. டயர்-2 தேர்வில் குவான்டிட்டேட்டிவ் எபிலிட்டீஸ் பிரிவில் 100 கேள்விகள் கேட்கப்படும். இந்த இரண்டு மணி நேரத் தேர்வுக்கு மொத்தம் 200 மதிப்பெண்கள் வழங்கப்படும். இங்கிலீஷ் லாங்வேஜ் அண்ட் காம்ப்ரிஹென்சன் பிரிவுக்கு  200 மதிப்பெண்கள். இதற்கும் விடையளிக்க 2 மணி நேரம் வழங்கப்படும். இதையடுத்து நேர்காணலுக்கு 100 மதிப்பெண்கள். உதவியாளர் (சிஎஸ்எஸ்) பணியில் சேருவதற்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு மட்டும் கம்ப்யூட்டர் புரபிசியன்சி டெஸ்ட் நடத்தப்படும்.

நேர்காணல் இல்லாத கம்பைலர் அல்லாத வேறு பணிகளுக்கு டயர்-1, டயர்-2 தேர்வுகள் இதேபோல இருக்கும். வரி உதவியாளர் பணிக்காக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு டேட்டா என்ட்ரி ஸ்கில் டெஸ்ட் நடத்தப்படும்.
ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்வெஸ்டிகேட்டர் (கிரேடு-2) பணியில் சேர விரும்புபவர்களுக்கு டயர்-1 தேர்வு ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளது போல இருக்கும். டயர்-2 தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் தாளுக்கு 400 மதிப்பெண்களும் மூன்றாவது தாளுக்கு (புள்ளியியல்) 200 மதிப்பெண்களும் வழங்கப்படும். அத்துடன் நேர்முகத் தேர்வுக்கு 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதேபோல கம்பைலர் பணிக்கு டயர்-1, டயர்-2 தேர்வு இருக்கும். ஆனால் நேர்காணல் இருக்காது. இத்தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்து ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


இத்தேர்வு எழுத விரும்புபவர்களுக்கான கட்டணம் ரூ.100. பெண் விண்ணப்பதாரர்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் போன்றவர்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் அனுப்பலாம் அல்லது விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம். எந்தப் பணிக்கு விண்ணப்பிக்கிறோம் என்பதைக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பத்தை ஒரு முறைக்கு மேல் அனுப்பக்கூடாது. விண்ணப்பிக்கும் முன்னதாக தகுதிகள், தேர்வு குறித்த அனைத்து விவரங்களையும் தெரிந்துகொண்டு விண்ணப்பிப்பது நல்லது. பணி நியமனத்தில் மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கப்படும். இடஒதுக்கீட்டுக்கான பயன்களைப் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.


இந்தப் போட்டித் தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். அசாம், மேகாலயா, அருணாசலப் பிரதேசம், மிசோராம், மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், காஷ்மீர், இமாசலப் பிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகள் போன்ற தொலை தூரப் பகுதிகளைச் சேர்ந்த மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் பிப்ரவரி 21-ஆம் தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படும். முதலாவது பிரிவின் கீழ் உள்ள பணிகளுக்கு ஆன்லைன் மூலம் பிப்ரவரி 12-ஆம் தேதி வரையும் இரண்டாவது பிரிவுப் பணிகளுக்கு பிப்ரவரி 14-ஆம் தேதி வரையிலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர்களுக்கு வழங்கப்படும் பதிவு எண்ணை மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ளவும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்கள், பிரிண்ட் அவுட்டுகளை தனியே அனுப்ப வேண்டியதில்லை. இத்தேர்வு குறித்த விரிவான தகவல்கள், ‘எம்ப்ளாய்மெண்ட் நியூஸ்’ இதழிலும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் போட்டித் தேர்வை எழுத பெண்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். மத்திய அரசுப் பணிகளில் சேர விரும்பும் பட்டதாரி மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
விவரங்களுக்கு: http://ssconline.nic.in