6 February 2014

இலவச எம்டெக் படிப்பு: படித்ததும் உடனடி வேலை

ஐஐடி, என்ஐடி கல்வி நிறுவனங்களில் எம்டெக் கன்ஸ்ட்ரக்ஷன் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மெண்ட் படிக்க என்ஜினீயரிங் பட்டதாரி மாணவர்களுக்கு  கல்வி உதவித் தொகையும் வழங்கி,  படித்து முடித்த தகுதியான மாணவர்களுக்கு  ஆண்டுக்கு ரூ.4 லட்சம் சம்பளத்தில் வேலையும் வழங்குகிறது எல் அண்ட் டி நிறுவனம்.

இந்தியாவில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் எல் அண்ட் டி என்று அழைக்கப்படும் லார்சன் அண்ட் டியூப்ரோ. சிறந்த திட்ட மேலாளர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், என்ஜினீயரிங் பட்டதாரி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்கீழ், சென்னை மற்றும் தில்லி ஐஐடிக்கள், திருச்சி, சூரத்கல் ஆகிய இடங்களில் உள்ள என்ஐடிகளில் எம்டெக் கன்ஸ்ட்ரக்ஷன் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மெண்ட் படிப்பை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி ஸ்பான்சர் செய்கிறது இந்த நிறுவனம்.

இந்த இரண்டு ஆண்டு படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பட்டப் படிப்பில் இந்த ஆண்டு தேர்ச்சி பெறுபவர்களாக இருக்க வேண்டும். அத்துடன் 10-ஆம் வகுப்பிலும் 12-ஆம் வகுப்பிலும் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வேண்டும். சிஜிபிஏ என்றால் 10-க்கு 6.50 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பாடப் பிரிவுகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் 60 சதவீத மதிப்பெண்கள் (சிஜிபிஏ என்றால் 10-க்கு 6.75 மதிப்பெண்கள்) எடுக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு 1-07-2014 நிலவரப்படி, 23 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது. உயரம் குறைந்தது 160 சென்டி மீட்டரும் குறைந்த பட்சமாக 50 கிலோ எடை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். பார்வைத் திறனும் கணக்கில் கொள்ளப்படும். அதாவது, மாணவர்கள் கண்ணாடி அணிந்திருந்தால் பார்வைத் திறன் குறைபாடு + அல்லது - 5 வரை இருக்கலாம்.


எல் அண்ட் டி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து ஐஐடிக்கள் மற்றும் என்ஐடிக்கள் எழுத்துத் தேர்வையும் தொடர்ந்து நேர்முகத் தேர்வையும் நடத்தும். அதன் அடிப்படையில் மாணவர்கள் இந்த 24 மாத கால முதுநிலை பட்டப் படிப்பிற்கு தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு இந்தப் படிப்புக்கான படிப்புக் கட்டணத்தை எல் அண்ட் டி நிறுவனமே செலுத்தி விடும். அத்துடன் மாணவர்களுக்கு, மாதம் ரூ.9 ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்கப்படும்.  இந்தப் படிப்பை வெற்றிகரமாக முடித்த மாணவர்கள் இந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் சம்பளத்தில் வேலையில் சேர அனுமதிக்கப்படுவர். இந்தத் திட்டத்தின்கீழ் படிக்கச் சேரும் மாணவர்கள், வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டால், குறைந்தது ஐந்து ஆண்டுகள் இந்த நிறுவனத்தில் பணி செய்ய உத்தரவாதம் அளித்து  ரூ.3 லட்சத்துக்கான உறுதிப் பத்திரம் எழுதித் தர வேண்டும்.
உதவித் தொகையுடன் கூடிய, இந்த எம்டெக் படிப்பில் சேர விரும்பும் என்ஜினீயரிங் பட்டப் படிப்பில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள், இந்தப் படிப்பில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விவரங்களுக்கு: www.lntecc.com