18 February 2014

மேற்படிப்புக்கு லாத்வியா நாட்டுக்குப் போகலாமா?

எஸ். சந்திர மௌலி

லாத்வியா - ஐரோப்பாவில் பால்டிக் கடலையொட்டி, ருஷ்யா, லிதுவேனியா, எஸ்தானியா ஆகிய நாடுகளால் சூழப்பட்ட சின்ன தேசம் லாத்வியா. சுமார் 65 ஆயிரம் ச.கி.மீ. பரப்பளவும், 23 லட்சம் மக்கள் தொகையும் கொண்ட இந்நாட்டின் தலைநகரம் ரிகா. லாத்வியா நாட்டில் உள்ள ஏழு பல்கலைக்கழகங்கள் ஒன்று சேர்ந்து சென்னையில், ‘லாத்வியா கல்வி மையம்’ ஒன்றைத் துவக்கியுள்ளன. லாத்வியா நாட்டில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு உதவுவதற்காக அந்நாட்டு அரசாங்கத்தின் ஆதரவோடு இந்தியாவில் துவக்கப்பட்டிருக்கும் முதல் மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மையத்தின் துவக்க விழாவுக்காக லாத்விய பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் குழு ஒன்று சென்னைக்கு வந்திருந்தது. அவர்களோடு ஒரு உரையாடல்:

லாத்வியா நாட்டைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?
பல நூற்றாண்டுப் பாரம்பரியமும், கலாசாரமும் கொண்ட லாத்வியா, ருஷ்யாவிடமிருந்து 1991-ல் சுதந்திரம் பெற்றது. மக்கள் தொகையில் 60% லாத்வியர்கள், 30% ருஷ்யர்கள். பாராளுமன்ற மக்களாட்சி நடக்கிறது. நாட்டின் பெரும்பகுதி காடுகளைக் கொண்டது. ஏராளமான வன விலங்குகளும் உண்டு. நாடெங்குமாக 12 ஆயிரம்  சிறு ஆறுகளும், 3,000 ஏரிகளும் உள்ளன. ஐரோப்பிய நாடுகளின் கட்டுமான மற்றும் காகிதத் தொழிலுக்குத் தேவையான மரம் இங்கிருந்துதான் ஏற்றுமதியாகிறது. நீண்ட, கடுமையான குளிர்காலமும், வெதுவெதுப்பான கோடையும் கொண்ட நாடு. மிகப் பழைமையான ஐரோப்பிய மொழிகளில் லாத்விய மொழியும் ஒன்று (ஒரு விஷயம்: லாத்விய மொழிக்கும், நம் நாட்டின் சம்ஸ்கிருதத்துக்கும் தொடர்பு உண்டு என்கிறது ஓர் இன்டர்னெட் தகவல்). ஐஸ் ஹாக்கி நாட்டின் மிகப் பிரபலமான விளையாட்டு. கால்பந்தும், கூடைப்பந்தும் மற்ற முக்கிய விளையாட்டுகள்.

உங்கள் ஊர் பல்கலைக்கழகங்களின் ஸ்பெஷாலிட்டி என்ன?
‘எங்கள் பல்கலைக்கழகங்கள் மிகச் சிறந்த கல்வியாளர்களையும், தொழில்நுட்ப வல்லுநர்களையும் கொண்டவை. நவீன வசதிகள், பெரிய நூல் நிலையங்கள், ஆராய்ச்சி வசதிகள், தரமான கல்வி ஆகியவை எங்கள் பலம். பட்டப் படிப்புக்கு லாத்வியா வந்தால், பட்ட மேற்படிப்பையும், அதன் பின் ஆராய்சிப் படிப்பையும் தொடர முடியும். மேலும், மற்ற ஐரோப்பிய பல்கலைக்கழகங்களோடு ஒப்பிடும் போது, லாத்வியாவில்தான் மிக அதிகபட்சமாக ஆங்கிலத்தில் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. மாணவர்கள், படிக்கும்போது வாரத்துக்கு 20 மணிநேரம் வரை பகுதி நேரமாக ஏதாவது பணி செய்து சம்பாதிக்கலாம். இதற்காக பிரத்யேகமாக ஒர்க் பர்மிட் பெற வேண்டிய அவசியமில்லை. மற்ற சில ஐரோப்பிய நாடுகளில் மாணவர்கள், படிப்பை முடித்தவுடன், அங்கேயே வேலை தேட வேண்டுமானாலும் கூட, மாணவர் விசா முடிந்து, தங்கள் ஊருக்குக் கட்டாயமாகச் சென்று, மீண்டும் விசா நீட்டிப்புக்கு விண்ணப்பித்து, அதன் பிறகு ஐரோப்பா திரும்பி, வேலை தேட வேண்டும். லாத்வியாவில் அதற்கு அவசியமில்லை. படிப்பை முடித்தவுடன், அங்கேயே தங்கி வேலை தேடிக்கொள்ளலாம். தற்போது ஐம்பதுக்கும் அதிகமான உலக நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் எங்கள் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். பன்னாட்டு மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்களும் உள்ளன.

இப்போது இந்திய மாணவர்கள் யாராவது லாத்வியாவில் படிக்கிறார்களா?
சுமார் 200 இந்திய மாணவர்கள் இப்போது லாத்வியாவில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். மற்ற எந்த ஐரோப்பிய நாடுகளையும் விட, லாத்வியா சென்று படிப்பதால் செலவு கொஞ்சம் குறைவாகவே இருக்கும்.’

தொடர்புக்கு:
Study in Latvia, 18, II Floor, Lokesh Towers, Kodambakkam High Road, Chennai - 600034