4 March 2014

ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் படிக்க வேண்டுமா?

ஜெர்மனியில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்கிற லட்சியம் பொறியியல் படிக்கும் மாணவர்களிடம் பரவலாக உள்ளது. ஜெர்மனி பல்கலைக்கழகங்களில் ஆங்கில வழி கல்வி இருந்தாலும், ஜெர்மன் மொழி கற்றவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு உள்ளது. ஜெர்மனியில் படிக்க TOEFL தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும். GRE நுழைவுத் தேர்வு கட்டாயம் இல்லை என்றாலும் எழுதுவது நல்லது. அதில் கிடைக்கும் மதிப்பெண்கள் சேர்க்கைக்கான வாய்ப்பை அதிகரிக்கும். பொறியியல் பட்டப் படிப்பு படிக்கும்போதே, ஜெர்மன் மொழியை கற்றுக்கொள்வது அவசியம். சென்னையில் மேக்ஸ் முல்லர் பவன் கல்வி நிறுவனத்தில் ஜெர்மன் மொழி கற்பிக்கப்படுகிறது. இங்கு வழங்கப்படும் சான்றிதழை, ஜெர்மனி கல்வி நிறுவனங்கள் அங்கீகரிக்கின்றன.

இங்கிலாந்தில் பட்டம் படிக்க விரும்புவோர் IELTS ஆங்கில மொழித் திறன் தகுதித் தேர்வு எழுத வேண்டும். இத்தேர்வில் ஒன்பது கிரேடுக்கு ஏழு கிரேடுகளில் நல்ல மதிப்பெண் வாங்கும்பட்சத்தில் அங்குள்ள சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைக்கும். இங்கு படிக்க GRE தேர்வு அவசியமில்லை. இங்கிலாந்தில் ஏராளமான ஓராண்டு படிப்புகள் உள்ளன. அதற்கு தகுந்த வேலைவாய்ப்புகளும் அங்கு ஏராளம். ஆனால், எந்தக் கல்வி நிறுவனத்தில் படித்தீர்கள் என்பதை வைத்தே வேலைவாய்ப்பு அங்கு கிடைக்கும். எனவே, நன்றாக விசாரித்து சிறந்த கல்வி நிறுவனங்களில் சேர வேண்டும். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் படிக்க IELTS தேர்வு எழுத வேண்டும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்காவின் சிறந்த கல்லூரிகளில் எம்.பி.ஏ. படிக்க பட்டப் படிப்பு மட்டும் அல்ல, இரண்டு அல்லது மூன்றாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

இவை தவிர, GMAT தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதன் மூலம் உலகில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் படிக்கலாம். இத்தேர்வு மொத்தம் 800 மதிப்பெண்களுக்கு மூன்றரை மணி நேரம் நடக்கும். நான்கு பகுதிகளை கொண்ட இதில், முதல் பகுதியில் ஒரு கட்டுரை எழுத வேண்டும். இரண்டாம் பகுதியான ரீசனிங் எபிலிட்டி தேர்வில் 12 கேள்விகள்.

மூன்றாம் பகுதியான குவான்டிடேட்டிவ் தேர்வில் 37 கேள்விகள். நான்காம் பகுதியான வெர்பல் தேர்வில் 46 கேள்விகள். இதில் 700 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்கள் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் இடம் பிடிக்கலாம்.