25 September 2014

தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்!

மருத்துவம், பொறியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் இளநிலைப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் மேனேஜ்மெண்ட், ஜியாலஜி, ஜியோ பிசிக்ஸ் பாடங்களில் முதுநிலைப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் மத்தியஅரசு நிறுவனமான ஓஎன்ஜிசி நிறுவனம் கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
 
மருத்துவம், பொறியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் இளநிலைப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் மேனேஜ்மெண்ட், ஜியாலஜி, ஜியோ பிசிக்ஸ் பாடங்களில் முதுநிலைப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி) மாதம் ரூ. 4 ஆயிரம் வீதம் உதவித்தொகை வழங்குகிறது.
 
அதாவது, மொத்தம் 500 மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.48 ஆயிரம் வீதம் இந்த உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகை பெற தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் 50 சதவீதம் பேர் மாணவிகள். தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த 100 மாணவ, மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பி.இ., பி.டெக்., எம்.பி.பி.எஸ்., எம்.பி.ஏ., எம்.எஸ்சி. - ஜியாலஜி, ஜியோ பிசிக்ஸ் ஆகிய படிப்புகளில் முதலாம் ஆண்டு படிக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் அனைவரும் இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். தொலைநிலைக் கல்வி மூலம் பயிலும் மாணவர்கள் இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க முடியாது.
 
பி.இ., பி.டெக்., எம்.பி.பி.எஸ். ஆகிய பட்டப் படிப்புகளில் முதலாமாண்டு பயிலும் மாணவர்கள், தங்களது பிளஸ் டூ தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீதம் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
 
எம்.எஸ்சி. - ஜியாலஜி, ஜியோபிசிக்ஸ், எம்.பி.ஏ., ஆகிய முதுநிலை படிப்புகளில் முதலாமாண்டு பயிலும் மாணவர்கள் தங்களது இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 
இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் வருமானம் ஆண்டிற்கு ரூ. 4.50 லட்சத்திற்கு மேல் இருக்கக்கூடாது. 1 அக்டோபர்  2014 நிலவரப்படி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் மாணவர்களின் வயது 30-க்குள் இருக்கவேண்டும். வேறு உதவித்தொகை பெறும் மாணவர்கள், இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க முடியாது.
 
மாணவர்களுடைய மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான மாணவர்கள் இந்தக் கல்வி உதவித்தொகை பெற தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மாணவர்களின் கல்வித் தரத்தைக் கருத்தில்கொண்டு, அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படும்.
 
இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பத்தை டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும்.
 
பூர்த்தி செய்த விண்ணப்பத்தில், அந்த மாணவர் படிக்கும் கல்வி நிறுவனத்தின் முதல்வரிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும். வருமான வரிச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள் உள்பட தேவையான சான்றிதழ் நகல்களையும் விண்ணப்பத்துடன் இணைத்து இம்மாதம் 30-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
 
விவரங்களுக்கு: www.ongcindindia.com