15 September 2014

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு வேலை!

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நிர்வாகப் பணிகளில் சேர விரும்பும் பொறியியல் பட்டதாரிகள் கேட் தேர்வை எழுதியிருக்க வேண்டும்.

மத்திய அரசின்கீழ் இயங்கும் நவரத்தினா நிறுவனங்களில் ஒன்றான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணிகளில் சேர விரும்புபவர்கள், மெக்கானிக்கல், கெமிக்கல், எலெக்ட்ரிக்கல், சிவில், இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பி.இ. அல்லது பி.டெக். அல்லது பி.எஸ்சி. (என்ஜினீயரிங்) பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்கள், மாற்றுத் திறனாளிகள் பட்டப் படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். விண்ணப்பிப்பவர்கள் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 28 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கேட் - 2015 தேர்வை எழுதுபவர்கள் மட்டுமே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். எனவே, இந்தப் பணியில் சேர விரும்புபவர்கள் அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் கேட் தேர்வை எழுத விண்ணப்பிக்க வேண்டும். ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால் தாங்கள் பணியாற்றும் நிறுவனத்திடமிருந்து ஆட்சேபணை இல்லை சான்றிதழைப் பெற வேண்டும்.

கல்வித் தகுதி மற்றும் கேட் தேர்வில் பெறும் சிறப்பிடம் போன்றவற்றின் போன்றவற்றின் அடிப்படையில் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்பட்டு, குழு விவாதத்திற்கு அழைக்கப்படுவர். பின்னர் நேர்முகத் தேர்வும் நடைபெறும். நேர்முகத் தேர்வுக்குப் பிறகு, விண்ணப்பதாரர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும். பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் நிர்வாகப் பணியில் சேரத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும். அதில் தகுதி பெறுபவர்கள் ‘எக்ஸிக்யூட்டிவ்’வாக பணியமர்த்தப்படுவார்கள்.

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு ஆன்லைன் மூலம் 17.12.2014 முதல் 30.01.2015 வரை விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு: www.bpclcareers.in