4 August 2014

அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் வேலை!

அரசு பொறியியல் கல்லூரிகளில் 139 உதவிப்பேராசிரியர் பணியிடங்களில் சேர விரும்புபவர்களுக்கான எழுத்துத் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது.

மிழ்நாட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் சிவில் என்ஜினீயரிங்கில் 12, மெக்கானிக்கல் என்ஜினீயரிங்கில் 10, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங்கில் 7, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங்கில்  10, எலெக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ருமென்டேஷன் என்ஜினீயரிங்கில் 2, கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங்கில் 7, புரடக்‌ஷன் என்ஜினீயரிங்கில் 7, மெட்டலர்ஜி என்ஜினீயரிங்கில் 1, கணிதத்தில் 25, ஆங்கிலத்தில் 19, இயற்பியலில் 21, வேதியியலில் 18 என மொத்தம் 139 காலிப்பணி இடங்கள் உள்ளன. இதில், தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு 20 சதவீதப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணியில் சேர விரும்புபவர்கள், சம்பந்தப்பட்ட பொறியியல், தொழில்நுட்பப் பாடப்பிரிவுகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். என்ஜினீயரிங் அல்லாத பாடப்பிரிவுகளில் உதவிப் பேராசிரியராக சேர விரும்புபவர்கள் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் நெட் தேர்வு அல்லது சிஎஸ்ஐஆர் நடத்தும் நெட் தேர்விலோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிஎச்டி முடித்தவர்கள் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. விண்ணப்பதாரர்கள், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் விதிமுறைகளின்படி ஜூலை 1-ஆம் தேதி நிலவரப்படி 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்களை தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களிலும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நூறு ரூபாயை ரொக்கமாகக் கொடுத்து நேரில் பெற்றுக் கொள்ளலாம். தேர்வுக்கட்டணம் ரூ.600. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வுக்கட்டணம் ரூ.300. விண்ணப்பத்துடன் கொடுக்கப்பட்டுள்ள வங்கி செலானைப் பயன்படுத்தி, பாரத ஸ்ட்டேட் வங்கி அல்லது இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைகளில் தேர்வுக்கட்டணத்தைச் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்திய செலானை தனியே ஒரு கவரில் வைத்து அதைப் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்திலுள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்திலேயே சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை எக்காரணம் கொண்டும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பி வைக்கக்கூடாது. தேர்வு குறித்த விளக்கங்கள், பாடத்திட்டங்கள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் விண்ணப்பப்படிவத்துடன் வழங்கப்படும் விளக்கக் குறிப்பேட்டைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி: 05.09.2014

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 26.10.2014

விவரங்களுக்குwww.trb.tn.nic.in