2 May 2014

50 ரூபாயில் ஹிந்தி படிக்கலாம்!

ஹிந்தி பேசாத மாநிலங்களில் பிறந்தவர்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் ஹிந்தியில் சான்றிதழ் படிப்பை கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கிறது மத்திய ஹிந்தி இயக்ககம்

ஹிந்தி பேசாத மாநிலங்களில் பிறந்தவர்களும், வெளிநாட்டில் செட்டிலாகிவிட்ட இந்தியர்களும், ஹிந்தி கற்றுக்கொள்ள விரும்பும் வெளிநாட்டினரும், ஹிந்தி மொழியை கற்றுக்கொள்வதற்கு வசதியாக புதுதில்லியிலுள்ள மத்திய ஹிந்தி இயக்ககம், தொலைநிலைக் கல்வி மூலம் ஹிந்தி மொழியைக் கற்றுத் தருகிறது.

ஹிந்தி மொழியில் சான்றிதழ் படிப்பு, டிப்ளமோ படிப்பு போன்ற படிப்புகளை ஆங்கிலம், தமிழ், மலையாளம் போன்ற மொழிகள் வாயிலாக கற்றுக் கொள்ளலாம். ஓராண்டு காலப் படிப்பு இது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதல் இப்படிப்பு துவங்கும்.

கல்வித் தகுதி: இந்தியர்கள் மற்றும் இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள், ஹிந்தி மொழியில் சான்றிதழ் படிப்பை படிக்க முடியும். 15 வயதுக்கு மேற்பட்ட, ஹிந்தி மொழி தாய்மொழியாக இல்லாதவர்கள் இப்படிப்பில் சேரலாம். இந்தியர்களின் குழந்தைகள் அல்லது இந்தியாவில் நிரந்தரமாகத் தங்கியிருப்பவர்களின் குழந்தைகள் குறைந்தபட்சம் 10 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தால், அவர்களும் இந்த சான்றிதழ் படிப்பில் சேரலாம்.

ஹிந்தியில் டிப்ளமோ படிக்க விரும்புபவர்கள், மேற்கூறிய தகுதிகளுடன், மத்திய ஹிந்தி இயக்ககத்தில் ஹிந்தி மொழியில் சான்றிதழ் படிப்பு படித்தவர்களாக இருக்கவேண்டும்.    

இந்தியாவில் வசிப்பவர்கள், சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புக்கான கட்டணமாக தலா ரூ.50 செலுத்தவேண்டும். கட்டணத்தை வங்கி வரைவோலை அல்லது இந்தியன் போஸ்டல் ஆர்டராக Director, Central Hindi Directorate, Ramakrishna Puram, New Delhi – 110066 என்கிற முகவரிக்கு புதுதில்லியில் செலுத்தத்தக்க வகையில் எடுத்து அனுப்பவேண்டும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கான கட்டணம் 50 அமெரிக்க டாலர்கள்.

சான்றிதழ், டிப்ளமோ படிப்புகளுக்குப் பிறகு, இந்தியில் அட்வான்ஸ்ட் டிப்ளமோ படிக்க விரும்புபவர்கள், 17 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கவேண்டும். இப்படிப்பை படிக்க விரும்பும் இந்தியாவில் வசிப்பவர்களுக்கான கட்டணம் ரூ.200. வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கான கட்டணம் 200 டாலர்கள் அல்லது அதற்குச் சமமான தொகை.

மாதிரி விண்ணப்பப் படிவம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் சேர விரும்பும் படிப்பு, எந்த மீடியத்தில் படிக்க விரும்புகிறார்கள் போன்ற விவரங்களுடன், தங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி, பெற்றோரின் பெயர், எந்த நாடு, தாய்மொழி, கல்வித் தகுதி, பாலினம், ஹிந்தி பற்றிய அறிவு, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய முறை போன்ற விவரங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரியக் கட்டணத்துடன் வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

விவரங்களுக்கு: www.hindinideshalaya.nic.in