25 March 2014

NATA பி.ஆர்க். படிப்பில் சேர நுழைவுத் தேர்வு

கலை ரசனை, டிராயிங் திறமை, தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றில் திறமையுள்ள மாணவர்களுக்கு ஏற்ற படிப்பு பி.ஆர்க். இந்தப் படிப்பில் சேர விரும்பும்  பிளஸ் டூ படித்த மாணவர்கள் கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்ச்சர் அமைப்பு அகில இந்திய அளவில் நடத்தும் நேட்டா (NATA) திறனறித் தேர்வை எழுத வேண்டும். மற்ற பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு இல்லாத தமிழகத்திலும்  பி.ஆர்க். படிப்பில் சேர வேண்டுமானால் இந்த நுழைவுத் தேர்வை எழுதியாக வேண்டும்.

கட்டடங்களையும் இதரக் கட்டுமானங்களையும் வடிவமைப்பது பற்றிய படிப்புதான் ஆர்க்கிடெக்ச்சர். கட்டடவியல் வடிவமைப்பாளர் கட்டுமான இடத்தில் என்னென்ன புதுமைகளைப் புகுத்த முடியும், அதற்கு எவ்வளவு செலவாகும், எவ்வளவு இடம் தேவைப்படும், எவ்வளவு பொருள்கள் தேவைப்படும், கட்டடத்துக்கு எவ்வளவு காற்றோட்டமும் வெளிச்சமும் கிடைக்கும் என்று பல்வேறு விஷயங்களையும் உள்வாங்கி கட்டுமானத்தைத் திட்டமிட வேண்டியது ஆர்க்கிடெக்ச்சர் படித்தவர்களின் பொறுப்பு. புராதனக் கட்டடங்களைக் பாதுகாப்பது, கிரீன் பில்டிங் என்கிற சுற்றுச்சூழலுக்கு ஏற்ற  கட்டட வடிவமைப்பு, நகரங்களைத் திட்டமிடுதல், திறந்தவெளி வடிவமைப்பு போன்ற பல்வேறு அம்சங்களும் ஆர்க்கிடெக்ச்சர் படித்தவர்களின் பணிகளில் அடங்கும். கட்டுமானத்துறையின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக ஆர்க்கிடெக்ச்சர் எனப்படும் கட்டடக்கலைத் துறையில் பி.ஆர்க். படித்த மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன.

கலை ரசனை, டிராயிங் திறமை, தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றில் திறமையுள்ள மாணவர்களுக்கு ஏற்ற படிப்பு பி.ஆர்க். இந்தப் படிப்புக் காலம் ஐந்து ஆண்டுகள்.  இப்படிப்பை முடித்தவர்கள் கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்ச்சர் அமைப்பில் பதிவு செய்த பிறகு ஆர்க்கிடெக்டுகளாகப் பணிபுரியலாம். கட்டட நிர்மாண நிறுவனங்களிலும் பொதுப்பணித்துறை போன்ற அரசுத் துறை நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும். சில ஆண்டு அனுபவத்திற்குப் பிறகு இத்துறையின் நெளிவு சுழிவுகளைத் தெரிந்துகொண்டு சொந்தமாக கட்டடக்கலை நிறுவனங்களைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தும் மாணவர்களும் இருக்கிறார்கள்.

இப்படிப்பில் சேருவதற்கு கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்ச்சர் அமைப்பு அகில இந்திய அளவில் நடத்தும் நேட்டா திறனறித் தேர்வை (NATA எழுதி இருக்க வேண்டும். இதற்கு தமிழக மாணவர்களும் விலக்கு அல்ல. தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேருவதற்கு நுழைவுத் தேர்வு எதுவும் நடத்தப்படுவதில்லை. ஆனால், பி.ஆர்க். படிப்பில் சேருவதற்கு நேட்டா நுழைவுத் தேர்வு எழுதியிருக்க வேண்டும்.

இந்தத் தேர்வை யார் எழுதலாம்?
பி.ஆர்க். படிக்க விரும்பும் மாணவர்கள் இத்தேர்வை எழுத வேண்டும். பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற யாரும் இத்தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள். பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பிளஸ் டூ தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கும் மாணவர்களும் இந்த நுழைவுத் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். பிளஸ் டூ தேர்வில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்து, அந்தப் பாடத்தில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.  லேட்டரல் என்ட்ரி மூலம் பிஆர்க் படிக்க முடியாது என்பதையும் மாணவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.

தேர்வு எப்படி இருக்கும்?
இத்தேர்வு இரண்டு பிரிவுகளைக் கொண்டது. டிராயிங் டெஸ்ட், இந்தத் தேர்வு காகிதத்தில் விடையளிக்கும் வகையில் இருக்கும். கொடுக்கப்பட்ட பொருளை வரையும் திறன், ஒளி, நிழலின்  தாக்கத்துடன் வரைதல், முப்பரிமாணம், இரு பரிமாணப் படங்கள் வரைதல், வண்ணங்களைப் பயன்படுத்துதல், அளவுகளைப் புரிந்துகொள்ளல், அன்றாட அனுபவங்களில் உள்ள கருத்துகளை ஞாபகத்திலிருந்து பென்சில் மூலம் வரைதல்...இப்படி மாணவர்களின் ஓவியத் திறனை அறிந்துகொள்ளும் வகையில் இத்தேர்வு இருக்கும். அதையடுத்து நடத்தப்படும் கலை உணர்வு சோதனைத் தேர்வில் (ஏஸ்தெட்டிக் சென்ஸிடிவிட்டி டெஸ்ட்) அப்ஜெக்ட்டிவ் முறையில் 40 கேள்விகள் கேட்கப்படும். அனலிட்டிக்கல் ரீசனிங், மென்டல் எபிலிட்டி, ஆர்க்கிடெக்ச்சுரல் அவேர்னஸ், இமாஜினேட்டிவ் காம்ப்ரிஹென்சன் போன்ற பல்வேறு பிரிவுகளில் மாணவர்களின் கலையுணர்வை சோதனை செய்யும் வகையில் கேள்விகள் இருக்கும். இத்தேர்வு கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படுகிறது. டிராயிங் தேர்வில் ஒவ்வொரு மாணவரின் விடைத்தாளை மூன்று பேர் தனித்தனியே மதிப்பிட்டு மதிப்பெண்கள் வழங்குவார்கள். அதன் சராசரி மதிப்பெண்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

நேட்டா தேர்வில் 40 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். அதாவது 200-க்கு 80 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மாணவர்கள் விரும்பினால், நேட்டா தேர்வை மீண்டும் எழுதலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். கடைசியாக எழுதிய தேர்வு மற்றும் அதற்கு முந்தைய தேர்வின் சராசரி மதிப்பெண்களுடன் மதிப்பெண் சான்றிதழ் கொடுக்கப்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, மீண்டும் தேர்வு எழுதுவதை முடிவு செய்ய வேண்டும்.. இத்தேர்வு மதிப்பெண்கள் இரண்டு ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். மாணவர்களின் ஸ்கோர் கார்டை இணையதளத்தின் மூலம் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

நேட்டா தேர்வு எப்போது நடைபெறுகிறது?
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நேட்டா தேர்வை எழுதலாம். தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நுழைவுத் தேர்வின் முதல் கட்டத் தேர்வுகள் மார்ச் 14-ஆம் தேதி முதல் மே 25-ஆம் தேதி வரை நடைபெறும். இரண்டாவது கட்டத் தேர்வுகள் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நடைபெறும். தேசிய விடுமுறை நாட்கள் நீங்கலாக மற்ற வார நாட்களில் இத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31-ஆம் தேதிதான் நேட்டா தேர்வின் கடைசி தேதியாக இருக்கும்.

விண்ணப்பிப்பது எப்படி?
இத்தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ஆயிரம் ரூபாய். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங்மூலம் கட்டணத்தைச் செலுத்தலாம் அல்லது ஐசிஐசிஐ வங்கியின் கிளைகளில் செலான் மூலமும் செலுத்தலாம். வங்கிகளுக்கான புராசசிங் கட்டணத்தையும் மாணவர்களே செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் சமர்ப்பித்த விண்ணப்பித்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொண்டு, நேட்டா தேர்வு எழுத விரும்பும் மையத்தை அணுக வேண்டும். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில், மாணவர்கள் விரும்பும் தேர்வுக்கான தேதியை பெறலாம். பத்தாம் வகுப்பு மதிப்பெண்.

சான்றிதழின் சான்றொப்பம் பெறப்பட்ட நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒட்டிய  விண்ணப்பப் படிவ பிரிண்ட் அவுட், சான்றொப்பம் பெறப்பட்ட அடையாள சான்றிதழ், நேட்டா கட்டணம் செலுத்தியதற்கான ரசீது, இ-மெயில் முகவரி ஆகியவற்றுடன் தேர்வு மையத்தை மாணவர்கள் அணுக வேண்டும். தேர்வு மையத்தில் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான அப்பாயிண்ட்மெண்ட் வவுச்சர் வழங்குவார்கள். அதில் விண்ணப்பதாரரின் ஐடி, அப்பாயிண்ட்மெண்ட் எண், எக்ஸாம் கீ ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். அத்துடன் இரண்டு கவுண்டர் பாயில்களும் இருக்கும். அதில் மாணவர்கள் முன்னதாகவே கையெழுத்திட்டு விடக்கூடாது. தேர்வு அறையில் மேற்பார்வையாளர் முன்னிலையில்தான் அதைக் கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டும். அத்துடன் தேர்வு மைய பதிவேட்டில் தேர்வுக்கு முன்னதாகவும் தேர்வு அறையிலிருந்து வெளியேறும் போதும் கையெழுத்திட வேண்டும். இதுகுறித்த விரிவான தகவல்கள் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.

இந்தத் தேர்வுக்குத் தயாராவது எப்படி?
முன்பயிற்சி தேவையில்லாத அளவுக்குத்தான் நேட்டா தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு கட்டடக்கலை குறித்து குறைந்தபட்ச அறிவோ அல்லது அதுகுறித்து அறியாமலோ இருப்பார்கள் என்பதை உணர்ந்தே இத்தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்களின் கலை ரசனை, டிராயிங் திறமை ஆகியவற்றை சோதனை செய்யும் வகையிலேயே நேட்டா தேர்வு இருக்கும். ஆர்க்கிடெக்ச்சுரல் அவேர்னஸ் மாணவர்களிடம் இருக்கிறதா என்பது குறித்தும் சில கேள்விகள் இருக்கும். படிப்பதன் மூலமாகவும் இன்டர்நெட் மூலமாகவும் ஆர்க்கிடெக்கசர் படிக்கும் மாணவர்களிடமும், ஆர்க்கிடெக்டுகளிடமும் இதுகுறித்துக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். ஆங்கிலத்தில் கேள்விகள் இருக்கும். கம்ப்யூட்டர் மூலம் தேர்வை எழுதுவதற்கு கம்ப்யூட்டர் குறித்த அடிப்படைப் பயிற்சி தேவைப்படும். இத்தேர்வுக்கும் பயிற்சி அளித்து மாணவர்களைத் தயார் படுத்த நிறுவனங்களும் இருக்கின்றன. எந்தப் பயிற்சியும் இல்லாமலேயே நேட்டா இணையதளத்தைப் பார்த்து, தாங்களே தயாராகி இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களும் இருக்கிறார்கள். அதேசமயம், தேர்வு மையங்களில் எந்தப் பயிற்சியும் அளிக்க அனுமதிக்கப்படமாட்டாது. ஏனெனில் ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொருவிதமாக வினாத்தாள் இருக்கும். எனவே, நேட்டா தேர்வின் முந்தைய கேள்வித்தாள்களும் மாணவர்களுக்கு வழங்கப்படாது.

பி.ஆர்க் படிப்பில் சேர தனியே விண்ணப்பிக்க வேண்டுமா?
நேட்டா தேர்வை எழுதிய மாணவர்கள், அந்தத் தேர்வு மதிப்பெண்களை வைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட பி.ஆர்க். படிப்பில் அட்மிஷன் பெற முடியும். தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கு பி.ஆர்க். மாணவர்களைச் சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் தனியே கவுன்சலிங் நடத்துகிறது. நேட்டா நுழைவுத் தேர்வில் மாணவர்கள் 200-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதுடன், பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மொத்த மதிப்பெண்களில் 200-க்கு எவ்வளவு எடுத்துள்ளார்கள் என்பதும் கணக்கிடப்பட்டு பி.ஆர்க். ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு கவுன்சலிங்கிற்கு மாணவர்கள் அழைக்கப்படுவார்கள். எனவே, தமிழ்நாட்டில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களில் பி.ஆர்க். படிப்பில் சேர விரும்பும் மாணவர்களும் நேட்டா நுழைவுத் தேர்வை எழுத மறக்காமல் விண்ணப்பிக்க வேண்டும்.

விவரங்களுக்கு: www.nata.in