2 March 2014

தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மாணவர்கள் பிஎச்டி படிக்க ஸ்காலர்ஷிப்!

முழு நேரமாக பிஎச்டி படிக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த 700 மாணவர்களுக்குத் தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்குகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் முழு நேரமாக பிஎச்டி ஆய்வுப் பட்டப் படிப்பைப் படிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ், 700 மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். தேவை ஏற்பட்டால், விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கலைப்பிரிவு, அறிவியல் பிரிவு, பொறியியல் பிரிவு மற்றும் பிற பிரிவுகளுக்கு ஏற்ற விகிதாசார அடிப்படையில் இந்த உதவித் தொகை பெற தகுதியுடைய மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.பகுதி நேரமாக பிஎச்டி ஆய்வை மேற்கொள்ளும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மாணவர்கள் இந்த உதவித் தொகையைப் பெற விண்ணப்பிக்க முடியாது.

இந்த உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள், முதுநிலைப் பட்டப் படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலைப் பட்டப் படிப்பில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் இந்த உதவித் தொகை பெற தகுதியுடைய மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். வேறு எந்தவிதமான கல்வி உதவித் தொகை அல்லது நிதியுதவித் திட்டத்தின் கீழ் பயன்பெறுபவராக இருக்கக் கூடாது. இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் நிதியுதவி அல்லது வேறு திட்டங்களில் பெறும் நிதியுதவி, இவற்றில் அதிகப் பயன் தரும் திட்டத்தைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கலாம். குறைவான பயன் தரும் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட நிதியுதவியைத் திரும்பச் செலுத்த வேண்டும்.  மாணவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட படிப்புக் கால அளவுக்கு மட்டுமே இந்த உதவித் தொகை கிடைக்கும்.

முதல் ஆண்டு மாணவர் சேர்க்கையின் அடிப்படையில் இத்திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை வழங்கலாம். இரண்டாம், மூன்றாம், நான்காம் ஆண்டுகளில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு, அவர்களது ஆராய்ச்சி எந்த அளவுக்குத் திருப்திகரமாக உள்ளது என்பது குறித்து மாணவர்கள் படிக்கக் கூடிய பாடப்பிரிவின் தலைவர் மற்றும் ஆராய்ச்சி வழிகாட்டுநரால் அளிக்கப்படும் சான்றிதழைப் பொருத்து உதவித் தொகை வழங்கப்படும்.

பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளதுபோல், மாதிரி விண்ணப்பப் படிவத்தைத் தட்டச்சு செய்து, விவரங்களைப் பூர்த்தி செய்து வருகிற 28-ஆம் தேதிக்குள் இயக்குநர், ஆதி திராவிடர் நலத் துறை, சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்துடன், மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனத் தலைவரின் பரிந்துரையும் அவசியம்.