4 February 2014

மெக்கானிக்கல் மேற்படிப்புக்கு சிறப்பான எதிர்காலம்

கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி

கம்ப்யூட்டர் இன்ஜினீயர்களுக்கு இணையாக சம்பளம் பெறமுடிவதில்லை’ என்பது மெக்கானிக்கல் இன்ஜினீயர்களின் பொதுவான புகார். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர்கள் திட்டமிட்டு மேற்படிப்பு படித்தால் கம்ப்யூட்டர் இன்ஜினீயர்களைவிட அதிகம் சம்பாதிக்கலாம்.

மெக்கானிக்கல் பொறியியல் பட்டப் படிப்பு படிக்கும்போதே, கேட்-காம் (CAD-CAM), பி.ஆர்.ஓ.இ.(PROE) மற்றும் CMC மிஷினிங் உள்ளிட்ட 6 மாத, ஓராண்டு படிப்புகளை படித்து வைத்துக் கொள்வதன் மூலம் கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும். பட்ட மேற்படிப்பு படிக்க விரும்புவோர் எம்.இ. பவர் எனர்ஜி அல்லது தெர்மல் எனர்ஜி தேர்வு செய்யலாம். தவிர, அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமே இருக்கும் எம்.இ. ஹை வோல்டேஜ் இன்ஜினீயரிங் படிக்கலாம்.
திருச்சி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் வெல்டிங் இன்ஜினீயரிங், டிசைன் அண்ட் ப்ரொடக் ஷன் ஆஃப் தெர்மல் பவர் எக்யூப்மென்ட் படிப்புகள் உள்ளன. எம்.டெக். பட்ட மேற்படிப்பில் இண்டஸ்ட்ரியல் அண்ட் சேஃப்டி இன்ஜினீயரிங், ப்ரொடக் ஷன் , மேனுஃபேக்
சரிங் உள்ளிட்ட படிப்புகள் உள்ளன. தவிர, எம்.டெக். ரோபாடிக்ஸ், மெக்கட்ரானிக்ஸ் படிப்புகள் அநேக கல்லூரிகளில் உள்ளன. மும்பை ஐ.ஐ.டி.யில் 6 மாதம் மற்றும் ஓராண்டு படிப்பான பைப்பிங் இன்ஜினீயரிங் உள்ளது. சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டூல் டிசைன் கல்வி நிறுவனத்தில் எந்திர உபகரணங்கள் வடிவமைப்பு குறித்து குறைந்த கால வகுப்புகள் நடத்துகின்றனர்.
திருச்சி பெல் நிறுவனத்தினர் திறமை மிக்க பொறியாளர்களை நுழைவுத் தேர்வு மூலம் பணிக்கு எடுத்து, தங்களுக்கு தேவையான 6 மாத படிப்புகளையும் வழங்குகின்றனர். இதுகுறித்து பத்திரிக்கைகளில் பெல் நிறுவன விளம்பரம் வரும்போது, பொறியியல் மாணவர்கள் விண்ணப்பித்து,வேலைவாய்ப்புடன் படிப்பும் பெறலாம்.
பி.இ. முடித்ததும் எம்.பி.ஏ. படிக்க விரும்புவோர் எம்.பி.ஏ. இன் எனர்ஜி மேனேஜ்மென்ட், எம்.பி.ஏ. இன் பவர் பிளான்ட் மேனேஜ்மென்ட் படிக்கலாம். இவை நேஷனல் பவர் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட்டில் உள்ளன. தமிழகத்தில் நெய்வேலி உள்பட இந்தியாவில் 9 இடங்களில் இக்கல்வி நிறுவனம் உள்ளது. ஓராண்டு படிப்பான பி.ஜி. இன் தெர்மல் பவர் பிளான்ட் இன்ஜினீயரிங் படிப்பதன் மூலமும் எளிதில் வேலைவாய்ப்பு பெறலாம்.
இந்திய அளவில் உள்ள கல்லூரிகளில் சேர GATE தேர்வும், தமிழக அளவில் உள்ள அரசு, தனியார் கல்லூரிகளில் சேர TANCET தேர்வும் எழுத வேண்டும். இந்த தேர்வுக்கு மார்ச் மாதம் விண்ணப்பம் அளிக்கப்படும். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்வு நடக்கும். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கில் உயர்கல்வி வரை படித்தவர்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது. எனவே, மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டப் படிப்புடன் மேற்கண்ட மேற்படிப்புகளையும் படிப்பவர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிக சம்பளத்தில் உடனடியாக வேலை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.