30 January 2014

ஐஐடியில் கோடைகாலப் பயிற்சி

என்ஜினீயரிங், அறிவியல், கலை மற்றும் சமூக அறிவியல் மற்றும் மேனேஜ்மெண்ட் படிப்பு  மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் கோடைகாலப் பயிற்சி வழங்குகிறது சென்னை ஐஐடி.

பொறியியல் பாடங்களில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளைப் படித்து வரும் மாணவர்களுக்கு சென்னை ஐஐடி கோடைகாலப் பயிற்சியை அளிக்க உள்ளது. பிஇ, பிடெக், பிஎஸ்சி (என்ஜினீயரிங்) படிப்புகளில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களும் ஒருங்கிணைந்த எம்இ, எம்டெக் படிக்கும் மாணவர்களும் இந்தக் கோடைகாலப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். எம்இ, எம்டெக், எம்எஸ்சி, எம்ஏ, எம்பிஏ ஆகிய படிப்புகளில் முதல் ஆண்டு படிக்கும், பல்கலைக்கழக அளவில் சிறந்து விளங்கும் மாணவர்களும் இந்தக் கோடைகாலப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். கருத்தரங்குகளில் கட்டுரைகள் சமர்ப்பித்திருந்தாலோ, புராஜக்ட் செய்திருந்தாலோ புதிய  சாதனங்களின் வடிவமைப்புப் போட்டியில் பங்கேற்றிருந்தாலோ, கணித ஒலிம்பியாட் போட்டியில் சிறப்பிடம் பெற்றிருந்தாலோ அல்லது விருது பெற்றிருந்தாலோ அதுகுறித்து மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். ஏற்கெனவே,  ஐஐடியில் படித்து வரும் மாணவர்கள் இந்தக் கோடை காலப் பயிற்சியில் சேர முடியாது.

ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங், அப்ளைடு மெக்கானிக்ஸ், பயோடெக்னாலஜி, கெமிக்கல் என்ஜினீயரிங், சிவில் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், என்ஜினீயரிங் டிசைன், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், மெட்டலர்ஜிக்கல் அண்ட் மெட்டீரியல் என்ஜினீயரிங், ஓசன் என்ஜினீயரிங் ஆகிய துறைகளின் மூலம் இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது. அத்துடன், இயற்பியல், வேதியியல், கணிதம், கலைப்புலம் மற்றும் சமூக அறிவியல் துறை, மேலாண்மைக் கல்வித் துறை போன்ற துறைகளும் இந்தப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்கின்றன. எனவே, இதுபோன்ற துறை மாணவர்கள் இந்தக் கோடைகாலப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.

இரண்டு மாத காலம் நடைபெறும் இந்தப் பயிற்சி வருகிற மே 16-ஆம் தேதியிலிருந்து ஜூலை 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாணவர்களுக்கு ஏற்ப இத்தேதியில் மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியில் சேர தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்கப்படும். இந்தக் கோடை காலப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்லூரி முதல்வரிடமிருந்து பரிந்துரைக் கடிதத்தையும் வாங்கி இ¬ணைத்து அனுப்ப வேண்டும். சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் கோடைகாலத்தில் பயிற்சி எடுக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

விவரங்களுக்குwww.iitm.ac.in

இ-மெயில்: sfp2014@wmail.iitm.ac.in