6 January 2014

பட்டதாரி இளைஞர்களுக்கு விமானப்படை வேலை!

ஞா. சக்திவேல்

இந்திய விமானப்படையில் பல்வேறு பிரிவுகளில் சேர விரும்பும் பட்டதாரி இளைஞர்களுக்காக விமானப்படை பொது அட்மிஷன் தேர்வு நடத்தப்படுகிறது.


ந்திய விமானப்படையில் பல்வேறு பிரிவுகளில் சேர விரும்பும் பட்டதாரி இளைஞர்களுக்கு விமானப்படை பொது அட்மிஷன் தேர்வு  (Air Force Common Admission Test - AFCAT) நடத்தப்படுகிறது. இதன் மூலம் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பிளையிங் பிரிவிலும் தொழில்நுட்பப் பிரிவிலும், தரைத்தளக் கட்டுப்பாட்டு அறையிலும் வேலை கிடைக்கும். பிளையிங் பிரிவில் இருப்பவர்களுக்கு அனைத்துப் படிகளும்  சேர்த்து ஆரம்பச் சம்பளமாக 69,130 ரூபாய் கிடைக்கும். தொழில்நுட்பப் பிரிவில் இருப்பவர்களுக்கு 60,380 ரூபாயும், தரைத்தளப்பிரிவில் இருப்பவர்களுக்கு 57,880 ரூபாயும் சம்பளமாகக் கிடைக்கும். அத்துடன் இன்சூரன்ஸ் உள்பட இதர சலுகைகளும் கிடைக்கும்.

பறக்கும் (Flying) பிரிவுக்கு குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பள்ளிப்படிப்பில் இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களைப் படித்திருக்க வேண்டும். 1992-ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம்  தேதியில் இருந்து 1996-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். அதாவது 19 வயதிலிருந்து 23 வயதுக்குள் இருக்க வேண்டும். பொறியியல் பட்டதாரிகளும் குறைந்தது 60 சதவீதத்துக்கு குறையாத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். உடல் நிலைத் தகுதியும் அவசியம், நல்ல பார்வைத் திறனும் இருக்க வேண்டும்.

தொழில்நுட்பப் பிரிவில் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயர் (எலெக்ட்ரானிக்ஸ்) மற்றும் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயர் (மெக்கானிக்கல்) என்ற இரண்டு பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பொறியியல் பட்டப் படிப்பில் குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 1987-ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதியில் இருந்து 1997-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். ஏரோநாட்டிக்கல் என்ஜினீயர் பிரிவிற்கு பிஸிக்ஸ் / என்ஜினீயரிங் பிசிக்ஸ், மேத்தமேட்டிக்ஸ் / என்ஜினீயரிங் மேத்தமேட்டிக்ஸ், என்ஜினீயரிங் கிராபிக்ஸ் / என்ஜினீயரிங் டிராயிங், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் / எலெக்ட்ரிக்கல் டெக்னாலஜி, கண்ட்ரோல் என்ஜினீயரிங், மைக்ரோ பிராசசர்ஸ், டிஜிட்டல் எலெக்ட்ரானிக்ஸ் / பேசிக் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் நெட்வொர்க்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, நெட்வொர்க் தியரி டிசைன், டெலிகம்யூனிக்கேஷன் சிஸ்டம்ஸ்,  எலெக்ட்ரானிக் சர்க்கியூட் டிசைன், ரேடார் தியரி, ஸ்விட்சிங் தியரி, இன்ஸ்ட்ருமெண்டேஷன், மைக்ரோவேவ் என்ஜினீயரிங், ஆன்டனா அண்ட் வேவ் டிரொப்பகேஷன், எலெக்ட்ரானிக்  டிவைசஸ் ஆகிய பதினெட்டு பாடங்களில் குறைந்தது எட்டுப் பாடங்களையாவது எடுத்துப் படித்திருக்க வேண்டும்.

இதைப்போலவே, ஏரோநாட்டிக்கல் என்ஜினீயர் (மெக்கானிக்கல்) பிரிவிற்கு பிஸிக்ஸ் / என்ஜினீயரிங்  பிசிக்ஸ், மேத்தமேட்டிக்ஸ் / என்ஜினீயரிங் மேத்தமேட்டிக்ஸ், என்ஜினீயரிங் கிராபிக்ஸ் / என்ஜினீயரிங் டிராயிங், ஆட்டோமோட்டிவ் என்ஜினீயரிங் / பிளாண்ட் என்ஜினீயரிங் / இன்டஸ்டிரியல் என்ஜினீயரிங், என்ஜினீயரிங் மெக்கானிக்ஸ் / ஸ்ட்ரெங்த் ஆஃப் மெட்டீரியல், ஏரோடைனமிக்ஸ், தெர்மோ டைனமிக்ஸ் அண்ட் அப்ளிக்கேஷன்ஸ், ஹீட் பவர் என்ஜினீயரிங், ஹீட் அண்ட் மாஸ் டிரான்ஸ்பர், தியரி ஆஃப் மெக்கானிஸ், ப்ளூயூட் மெக்கானிக்ஸ் / டர்போ மெக்கானிக்ஸ், பிளைட் மெக்கானிக்ஸ், மெக்கானிக்கல் டிராயிங் / மெசின் டிசைன், மெகட்ரானிக்ஸ், மெட்டீரியல் சயின்ஸ் / மெட்டர்லஜி, வைபரேஷன்ஸ், ஒர்க்‌ஷாப் டெக்னாலஜி/ மேனுபேக்கரிங் டெக்னாலஜி / புரடக்‌ஷன் என்ஜினீயரிங், ஹைட்ராலிக்ஸ் அண்ட் நிமாட்டிக்ஸ், ஏர்கிராப்ட் ஸ்ட்ரக்ச்சர்ஸ் ஆகிய பதினெட்டு பாடங்களில் குறைந்தது எட்டு பாடங்களைப் படித்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 157.5 செ.மீ. உயரமும், நல்ல பார்வைத்திறனும் உடையவர்களாக  இருக்க வேண்டும்.

தரைத்தளப் பிரிவிற்குப் பட்டதாரி இளைஞர்களாக இருந்தால் 20-இல் 
இருந்து 23 வயதிற்குள் இருப்பவர்களும், ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களாக இருந்தால் 20 முதல் 25 வயது நிரம்பியவர்களும், பட்டப்படிப்பிற்குப் பின்பு சட்டம் பயின்றவர்களாக இருந்தால்  20 முதல் 26 வயது நிரம்பியவர்களும், முதுநிலை ஆசிரியர் படிப்பு (எம்எட்), ஆராய்ச்சிப் படிப்பு (பிஎச்.டி), கணக்குத் தணிக்கையாளர் படிப்பு (சிஏ) அல்லது ஐசிடபிள்யூஏ படித்தவர்களாக இருந்தால் 20 முதல் 27 வயது நிரம்பியவர்களாக இருக்கலாம். நிர்வாகம் மற்றும் தளவாடப் பணிகளுக்கு, 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதேனும் ஓர் இளநிலை பட்டப்படிப்பு அல்லது 50 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது இதற்கு இணையான பட்டயப் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணக்குப் பிரிவிற்கு 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.காம்.,  50 சதவீத மதிப்பெண்களுடன் எம்.காம்., படித்தவர்கள், சி.ஏ, ஐ.சி.டபிள்யூ.ஏ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்விப் பிரிவிற்கு 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 157.5 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். அத்துடன், அவர்களுக்குத் திருமணமாகி இருக்கக்கூடாது. தகுதி குறித்த விவரங்கள் இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன.

இந்தப் பணிகளில் சேர விண்ணப்பித்துள்ளவர்களுக்கு விமானப்படை பொது அட்மிஷன் தேர்வு பிப்ரவரி 23 -ஆம் தேதி நடத்தப்படும். தமிழ்நாட்டில் சென்னை, சூலூர் (கோவை) உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் இத்தேர்வை எழுதலாம். அப்ஜெக்ட்டிவ் முறையில் நடைபெறும் இத்தேர்வில் மொழித் திறன், எண்ணியல் திறன், பொது அறிவு மற்றும் ராணுவம் குறித்த விஷயங்கள் கேட்கப்படும். விடையளிக்க இரண்டு மணி நேரம் வழங்கப்படும். விமானப்படை இணையதளத்திலிருந்து மாதிரி வினாத்தாள்களையும் தேர்வுக்கான பாடத்திட்டத்தையும் டவுன்லோடு செய்துகொள்ளலாம். முதல்கட்ட நுழைவுத் தேர்வுக்குப் பின்னர், குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களுக்கு 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து பயிற்சி ஆரம்பிக்கப்படும். பிளையிங் பிரிவிற்கும், தொழில்நுட்பப் பிரிவிற்கும் 72 வாரப் பயிற்சியும், தரைத்தளக் கட்டுப்பாட்டு பிரிவிற்கு 52 வாரப் பயிற்சியும் வழங்கப்படும். இப்பணிகளில் சேர விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 12, 2014.
 

விவரங்களுக்கு:  www.careerairforce.nic.in/