16 December 2013

வங்கி சிறப்பு அதிகாரிகள் பணித் தேர்வு

நாட்டில் உள்ள முக்கிய வங்கிகளில்  சிறப்பு அதிகாரிகள் பணிகளில் சேர விரும்புபவர்கள் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேங்கிங் பர்ஸனல் செலக்ஷன் நடத்தும் எழுத்துத் தேர்வை எழுத வேண்டும்.

லகாபாத் வங்கி, ஆந்திர வங்கி, பரோடா வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கனரா வங்கி,  சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, தேனா வங்கி, ஈசிஜிசி, ஐடிபிஐ வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்த் பேங்க், சிண்டிகேட் பேங்க், யூகோ பேங்க், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, யுனைட்டெட் பேங்க் ஆஃப் இந்தியா, விஜயா வங்கி உள்ளிட்ட வங்கிகளில் சிறப்பு அதிகாரிகளாகப் பணிபுரிய விரும்புபவர்களுக்கான தகுதித் தேர்வை இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேங்கிங் பர்ஸனல் செலக்ஷன் நடத்துகிறது.
இந்த வங்கிகளில் ஐ.டி. அதிகாரி, வேளாண்மை கள அதிகாரி, மொழி  அதிகாரி, சட்ட அதிகாரி, எச்ஆர் பர்சனல் அதிகாரி, மார்க்கெட்டிங் அதிகாரி ஆகிய துறைகளில் ஸ்கேல்-1 பிரிவுகளின் கீழும் ஐடி அதிகாரி, சட்ட அதிகாரி,  சார்ட்டர்ட் அக்கவுன்டண்ட், மேனேஜர் கிரெடிட், ஃபைனான்ஸ் எக்சஸிகியூட்டிவ் ஆகிய துறைகளில் ஸ்கேல்-2 பிரிவுகளின் கீழும் உள்ள காலி இடங்களை நிரப்ப இந்தத் தகுதித் தேர்வை எழுத வேண்டும்.
சட்ட அதிகாரி ஸ்கேல்-1 மற்றும் ஸ்கேல்-2, மொழி அதிகாரி  ஸ்கேல்-1 பிரிவுப் பணிகளுக்கான தேர்வில் ரீசனிங், ஆங்கில மொழி, வங்கித் தொழில் தொடர்பான பொது விழிப்புணர்வு, புரபஷனல் நாலெட்ஜ் ஆகிய பிரிவுகளின் கீழ் தலா 50 கேள்விகள் வீதம் 200 கேள்விகள் கேட்கப்படும். இதற்கு 200 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வுக்கு விடையளிக்க இரண்டு மணி நேரம் வழங்கப்படும்.
ஐடி அதிகாரிகள் ஸ்கேல்-1 மற்றும் ஸ்கேல்-2, வேளாண் கள அதிகாரி ஸ்கேல்-1, எச்ஆர், பர்சனல் அதிகாரி ஸ்கேல்-1, மார்க்கெட்டிங் அதிகாரி ஸ்கேல்-1, சார்ட்டர்ட் அக்கவுன்டண்ட் ஸ்கேல்-2, கிரெடிட், ஃபைனான்ஸ் எக்ஸ்கியூட்டிவ் ஸ்கேல்-2 ஆகிய பணிகளுக்கான தேர்வில் ரீசனிங், இங்கிலீஷ் லாங்வேஜ், குவான்டிட்டேட்டிவ் ஆப்டிட்யூட், புரபஷனல் நாலெட்ஜ் ஆகிய பிரிவுகளில் தலா 50 கேள்விகள் வீதம் கேட்கப்படும். இதற்கு இரண்டு மணி நேரத்தில் விடை அளிக்க வேண்டும். இதற்கு மொத்த மதிப்பெண்கள் 200. ஆங்கில மொழி அல்லாத மற்ற பிரிவுகளுக்கான வினாக்கள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இருக்கும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
இந்த எழுத்துத் தேர்வு வருகிற பிப்ரவரி 8, 9 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இத்தேர்வை எழுதலாம். தமிழகத்தில்  சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் இத்தேர்வை எழுத முடியும். இத்தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐடி அதிகாரி ஸ்கேல்-1 பிரிவின் கீழ் சேர விரும்புபவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிஸ் அண்ட் டெலி கம்யூனிக்கேஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன் ஆகிய பாடப்பிரிவுகளில் 4 ஆண்டு என்ஜினீயரிங் பட்டப் படிப்பைப் படித்திருக்க வேண்டும் அல்லது எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலி கம்யூனிக்கேஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் முதுநிலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். டிஓஇஏசிசி நடத்தும் பி லெவல் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் இப்பணியில் சேர விண்ணப்பிக்கலாம்.
20 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஐடி அதிகாரி ஸ்கேல்-2 பிரிவின் கீழ் சேர விரும்புபவர்களுக்கும் இதே தகுதிதான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் அதிகபட்ச வயது 35 வரை இருக்கலாம்.
சட்ட அதிகாரி ஸ்கேல்-1 பணிக்கும் இளநிலை  சட்டப் படிப்பைப் படித்திருக்க வேண்டும். அத்துடன் பார் கவுன்சலில் வழக்கறிஞராகப் பதிவு செய்திருக்க வேண்டும். வயது 30-க்கு மேல் இருக்கக் கூடாது. சட்ட அதிகாரி ஸ்கேல்-2 பணியில் சேர விரும்புபவர்கள் இளநிலை சட்டப் படிப்பைப் படித்திருக்க வேண்டும். அத்துடன், பார் கவுன்சலில் வழக்கறிஞராகப் பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது வங்கிகள், அரசுத் துறைகள், அரசுத் துறை நிறுவனங்களில் சட்ட அதிகாரிகளாக இரண்டு ஆண்டு காலம் பணிபுரிந்து இருக்க வேண்டும். அதிகபட்ச வயது 35-க்கு மேல் இருக்கக் கூடாது.
வேளாண் கள அதிகாரி ஸ்கேல்-1 பணியில் சேர விரும்புபவர்கள் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை  அறிவியல், டெரி சயின்ஸ், அக்ரிகல்ச்சுரல் என்ஜினீயரிங், ஃபிஷரி சயின்ஸ், பிசிகல்ச்சர், அக்ரி மார்க்கெட்டிங் அண்ட் கோ-ஆபரேஷன், கோ-ஆபரேஷன் அண்ட் பேங்கிங், அக்ரோ பாரஸ்ட்ரி ஆகிய பாடப்பிரிவுகளில் நான்கு ஆண்டு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 30.
எச்ஆர் பர்சனல் அதிகாரி ஸ்கேல்-1 பணியில் சேர விரும்புபவர்கள் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பர்ஸனல் மேனேஜ்மெண்ட், இன்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ், எச்ஆர், சோஷியல் ஒர்க், லேபர் லா போன்ற பாடப்பிரிவுகளில் முழு நேரமாக முதுநிலை பட்டமோ அல்லது முதுநிலை பட்ட டிப்ளமோ படிப்போ படித்திருக்க வேண்டும். இதற்கு அதிகபட்ச வயது வரம்பு 30.
மார்க்கெட்டிங் அதிகாரி ஸ்கேல்-1 பணியில் சேர விரும்புபவர்கள் ஏதாவது பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் மார்க்கெட்டிங்கில் எம்பிஏ அல்லது பிஜிடிபிஏ அல்லது பிஜிடிபிஎம் (மார்க்கெட்டிங் சிறப்புப் பாடமாகக் கொண்டு) படித்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 30. சார்ட்டர்ட் அக்கவுன்டண்ட் ஸ்கேல்-2 பணியில் சேர சிஏ இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதேபோல இந்தப் பணிகளுக்கான தகுதி மற்றும் விவரங்கள் இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 மற்றவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.600.இத்தேர்வை எழுத விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் இம்மாதம் 14-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் கட்டணங்களை இம்மாதம் 16-ஆம் தேதி வரை செலுத்தலாம்.
விவரங்களுக்கு: www.ibps.in