29 November 2013

பிஎஸ்சி, பிஇ மாணவர்களுக்கு உதவித் தொகையுடன் கோடைகாலப் பயிற்சி!

என்ஜினீயரிங் மற்றும் அறிவியல் பட்டப் படிப்பு மாணவர்கள் கோடை காலத்தில் ஆராய்ச்சிப் பயிற்சியை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது கர்நாடகத்தில் ஜக்கூரில் உள்ள ஜவஹர்லால் நேரு சென்டர் ஃபார் அட்வான்ஸ்ட் சயின்டிபிக் ரிசர்ச். இந்த இரண்டு மாத பயிற்சியில் சேர தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.

இன்றைய சூழ்நிலையில் வேலைவாய்ப்புக்கு கல்லூரியில் படிக்கும் பட்டப் படிப்புகளில் பெறும் மதிப்பெண்கள் முக்கியத்துவம் வாய்ந்தது என்றாலும்கூட, மாணவர்களின் திறமை, ஆய்வு, கருத்தரங்குகளில் கட்டுரைகள் சமர்ப்பித்தல், புராஜக்ட், சாஃப்ட் ஸ்கில்ஸ் போன்ற பல்வேறு அம்சங்களை மாணவர்களை வேலைக்குத் தேர்வு செய்யும் நிறுவனங்கள் கருத்தில் கொள்கின்றன. கல்லூரிப் படிப்பைத் தாண்டி மாணவர்கள் எந்தவிதமான பயிற்சி பெற்றிருக்கிறார்கள் அல்லது திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது முக்கியம். அதனால் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், கோடை கால விடுமுறையில் தொழில் நிறுவனங்களிலோ அல்லது ஆய்வு நிறுவனங்களிலோ இன்டர்ன்ஷிப் பெறுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில், என்ஜினீயரிங் மற்றும் அறிவியல் பட்டப் படிப்பு மாணவர்கள் ஆராய்ச்சியில் ஆர்வம் இருந்தால், கோடை காலத்தில் உதவித் தொகையுடன் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளலாம். கர்நாடகத்தில் பெங்களூரை அடுத்த ஜக்கூரில் உள்ள ஜவஹர்லால் நேரு சென்டர் ஃபார் அட்வான்ஸ்ட் சயின்டிபிக் ரிசர்ச் இதற்கான வாய்ப்பை வழங்குகிறது. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியுடன் இயங்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் இது.

பொறியியல் கல்லூரிகளிலும் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் படிக்கும் திறமையான, ஆராய்ச்சியில் ஆர்வமிக்க மாணவர்கள் இந்த கோடை காலப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை, ராஜீவ்காந்தி ஃபவுண்டேஷன் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து இந்தப் பயிற்சிக்கான ஃபெல்லோஷிப்களை ஜவஹர்லால் நேரு சென்டர் ஃபார் அட்வான்ஸ்ட் சயின்டிபிக் ரிசர்ச் வழங்குகிறது. கோடை காலத்தில் இரண்டு மாத காலம் நடைபெறும் இந்தப் பயிற்சியில் சேரத் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், இந்தியாவில் பல்வேறு அறிவியல் மையங்களில் உள்ள விஞ்ஞானிகளுடன் இணைந்து லைஃப் சயின்சஸ், மெட்டீரியல் சயன்சஸ், கெமிக்கல் சயின்சஸ், பிசிக்கல் சயின்சஸ், என்ஜினீயரிங் சயின்சஸ், கணிதம், அட்மாஸ்பெரிக் சயின்சஸ் ஆகிய துறைகளில் தங்களுக்கு விருப்பான துறையில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் உதவித் தொகையும் வழங்கப்படும். அத்துடன் போக்குவரத்து செலவுத் தொகையும் வழங்கப்படும். இந்தக் கோடை காலப் பயிற்சிக்கு 80 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். மாணவர்களின் திட்ட அறிக்கையின் அடிப்படையில் 15 மாணவர்களுக்கு ராஜீவ்காந்தி சயின்ஸ் டேலண்ட் ரிசர்ச் ஃபெல்லோஷிப் வழங்கப்படும்.


இந்த ஃபெல்லோஷிப் கோரி யார் விண்ணப்பிக்கலாம்?

பத்தாம் வகுப்பிலும் பிளஸ் டூ வகுப்பிலும் கணிதத்திலும் அறிவியலிலும் 80 சதவீதத்திற்குக் குறையாத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இளநிலைப் பட்டம் அல்லது முதுநிலைப் பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிஎஸ்சி முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுகளில் தற்போது படித்து வருபவர்களும் பிஎஸ் படிப்பில் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் ஆண்டுகளில் படித்து வருபவர்களும் பிஇ, பிடெக் படிப்புகளில் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு, நான்காம் ஆண்டு பிஇ, பிடெக் படித்து வருபவர்களும் முதல் ஆண்டு எம்எஸ்சி படித்து வருபவர்களும் ஒருங்கிணைந்த எம்எஸ்சி படிப்பில் இரண்டாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டு வரை படித்து வருபவர்களும் லைஃப் சயின்சஸ் மற்றும் கணிதப் பிரிவுகளின் கீழ் ஆய்வுப் பயிற்சியில் ஈடுபட விண்ணப்பிக்கலாம்.

பிசிக்கல் சயின்சஸ், என்ஜினீயரிங் சயின்சஸ், அட்மாஸ்பெரிக் சயின்சஸ் ஆகிய துறையில் ஆய்வுப் பயிற்சியில் ஈடுபட விரும்பும் மாணவர்கள், பிஎஸ்சி இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு படித்து வர வேண்டும். பிஎஸ் படிப்பில் இரண்டாம், மூன்றாம், நான்காம் ஆண்டுகளில் படிக்கும் மாணவர்களும் பிஇ, பிடெக் படிப்புகளில் முதல், இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளில் படித்து வரும் மாணவர்களும் எம்எஸ்சி படிப்பில் முதலாண்டில் படித்து வரும் மாணவர்களும் ஒருங்கிணைந்த எம்எஸ்சி படிப்பில் முதலாண்டிலிருந்து நான்காம் ஆண்டு வரை படித்து வரும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

மெட்டீரியல் சயின்சஸ், கெமிக்கல் சயின்சஸ் ஆகிய பாடப் பிரிவுகளில் சேர விரும்புபவர்கள் முதல் ஆண்டு எம்எஸ்சி படிப்பில் படித்து வர வேண்டும். ஏற்கெனவே, இந்தப் பயிற்சித் திட்டத்தின்கீழ் கோடை காலப் பயிற்சி பெற்ற மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது.

எந்தத் துறையில் ஆராய்ச்சி செய்ய விருப்பம் என்பதை விண்ணப்பத்தில் குறிப்பிடுவதுடன் கடிதத்தின் உறையின் மேற்புறத்திலும் குறிப்பிட வேண்டியது அவசியம். இந்த விண்ணப்பத்துடன் உங்களைப் பரிந்துரைக்கும் இரண்டு பேராசிரியர்களின் சீலிட்ட அறிக்கைகளை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். மதிப்பெண் சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களின் ஜெராக்ஸ் பிரதிகளையும் இணைத்து அனுப்ப வேண்டும். ஏற்கெனவே, இந்தப் பயிற்சித் திட்டத்தின் கீழ் சேர்ந்து பயிற்சியை முடித்த மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த கோடை காலப் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள், இதற்கான விண்ணப்பங்களைக் கேட்டு டிசம்பர் 9-ஆம் தேதிக்குள் பெற வேண்டும்.அதாவது, 10 ரூபாய் தபால் தலையுடன் சுயவிலாசம் எழுதிய 16து25 நீளமுள்ள உறையுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்:

The Coordinator
Summer Research Fellowships Programme
Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research
Jakkur P.O. Bangalore 560 064


இணையதளத்திலிருந்து  டிசம்பர் 12-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். இந்தக் கோடைகால ஆராய்ச்சிப் பயிற்சியில் சேருவதற்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் குறித்த விவரங்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் வெளியிடப்படும். இந்தக் கோடை கால ஆய்வுப் பயிற்சிக்கு 80 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எதிர்காலத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட விரும்பும் மாணவர்களுக்கு உதவித் தொகையுடன் கூடிய இந்தக் கோடை கால ஆராய்ச்சிப் பயிற்சி ஓர் அரிய வாய்ப்பு. நழுவவிடாதீர்கள்!

விவரங்களுக்கு: 
http://www.jncasr.ac.in/fe/srfp.php