14 January 2015

சாதனையாளருக்குப் பின்னால்

 # இந்தியக் கிரிக்கெட்டின் ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ எனக் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர்,
# இந்திய மண்ணின் மைந்தர்களால் உருவாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வெற்றிகரமாக இயங்கிவரும் விப்ரோ நிறுவனத்தின் உரிமையாளர் அசிம் பிரேம்ஜி,
# பாலிவுட் திரைப்பட உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த நடிகர் மற்றும் சமூக ஆர்வலர் ஆமிர் கான்,
# பெண்களுக்கான சர்வதேச அளவிலான குத்துச்சண்டை போட்டிகளில் பலவற்றில் முதல் பரிசு வென்று, பத்மபூஷண், அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளுக்குச் சொந்தக்காரர் இந்தியக் குத்துச் சண்டை வீராங்கனை மேரி காம்,
# ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி

இவர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை என்ன என்பதைக் கண்டுபிடிக்க முடிகிறதா?
இவர்கள் அனைவரும் இந்தியர்கள், அவர்களுடைய துறைகளில் மாபெரும் சாதனைகள் படைத்தவர்கள். அதே நேரத்தில் இவர்கள் அனைவரும் பள்ளி அல்லது கல்லூரிப் படிப்பை பாதியிலேயே விட்டு நின்றவர்கள்.

கல்வி தேவையா?
வாழ்வில் வெற்றி பெறக் கல்வி அவசியமில்லை எனச் சொல்வதற்காக இவர்களைப் பட்டியல் போடவில்லை. அது மிகத் தவறான பார்வையும்கூட. கல்வி என்பது தனிமனித உரிமையாகும். 40 சதவீத இந்தியக் குழந்தைகள் எட்டாம் வகுப்பு படிப்பை முடிக்கும் முன்னரே படிக்கும் வாய்ப்பை இழக்கும் கொடுமையான சூழல் இந்தியாவில் நிலவுகிறது என்கிறது 2014-ல் யூனிசெப் நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவு.
அதற்குச் சமூக, பொருளாதார அமைப்பில் இருக்கும் பல சிக்கல்கள் காரணமாக இருக்கின்றன. ஆனால் அவை அல்லாமலும் ஒரு அச்சுறுத்தும் சிக்கல் நிலவுகிறது. அதுதான் வித்தியாசமான அறிவுடையவர்களை அணுகும்விதம்.

வித்தியாசம்தான் சிக்கலா?
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மாற்றுத்திறனாளியாக இருப்பவர்களுக்கும் உரிய மதிப்பும், அங்கீகாரமும் அளிக்கப்பட வேண்டும் எனச் சொல்லும் நாம் மாற்று அறிவு கொண்டவர்களையும் புரிந்து கொள்ள வேண்டும் இல்லையா!
ஆரம்பத்தில் பட்டியலிடப் பட்ட ஆளுமைகள் அப்படிப்பட்டவர்கள்தான். இவர்களுடைய கல்வியைத் துண்டித்தது எது? பொருளாதார நெருக்கடியோ, சமூகச் சூழலோ அல்ல. வழக்கமான கல்வித் திட்டம் என்ற சட்டகத்துக்குள் பொருந்தாதவர்களாகத் திகழ்ந்ததே காரணம்.
ஆனால் அதே சமயம் கல்விக் கூடங்களில் சராசரியான மதிப்பெண்கள் பெறவே தத்தளித்த இவர்கள் எப்படி அனைவரும் வியந்து பார்க்கும் ஆளுமைகளாகப் பரிணமித்தார்கள் என்ற கேள்வியும் உள்ளது. வாருங்கள்! கார்டனர், கில்ஃபோர்ட், டன் அண்ட் டன் போன்ற கல்வி மற்றும் உளவியல் நிபுணர்களின் துணையோடு இந்தக் கேள்விக்கான விடையைக் காண்போம்.

குவிந்தல்ல விரிந்து
கற்றுக் கொடுக்கப்படும் கருத்துகளைக் கோர்வையாக மனதில் பதித்துப் பின்னர் ஒப்பிப்பது, மற்றும் எழுதுவது இவற்றைத்தான் நம் கல்வி கூடங்கள் மாணவர்களிடம் எதிர்பார்க்கின்றன. இத்தகைய ஆற்றல் மொழி மற்றும் கணிதத்திறன் கொண்டவர்களிடம் இயல்பாக இருக்கும். அவர்களால் வகுப்பில் சொல்லித்தரப்படும் பாடங்களைப் பின் தொடர்ந்து, படித்துப் பின் படிப்படியாக எழுத முடியும். ஆனால் உடல் ரீதியான அறிவுத்திறன் மற்றும் காட்சி ரீதியான அறிவுத்திறன் கொண்டவர்களால் இப்படிப் படிக்க முடியாது.
அதிலும் காட்சி ரீதியான அறிவுத்திறன் கொண்டவர்களால் ஒரு கருத்தைக் காட்சியாகப் பார்த்துத்தான் புரிந்துகொள்ள முடியும். புவியியல், வடிவியல், மெக்கானிக்கல், கட்டுமான வேலைகள், வரைபடம் வரைதல் என இடம், வெளி தொடர்பான விஷயங்களில் பிச்சு உதறுவார்கள். ஆனால் இலக்கணம், கணினி சூத்திரம், கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களின் சூத்திரங்களில் தடுமாறுவார்கள். புத்தகப் பாடங்களில் இடறுவார்கள். ஆனால் செயல்முறை பாடத்தில் அசத்துவார்கள். இவர்களுடைய மூளை இயங்கும் போது ஒரே ஒரு விஷயத்தில் குவிந்து செயல்படாது. மாறாகப் பரந்து விரிந்து காட்சிப்படுத்திச் செயல்படும்.

தோல்வி ஆனால் வெற்றி
அறிவை அளவிடும் முறையான ஐ கியூ தேர்வில், விஐகியூ (Verba#Intelligent Quotient (VIQ) எனப்படும் மொழி மற்றும் கணித அறிவுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. இதில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்கள் வகுப்பில் முதலிடம் பெறுகிறார்கள். ஆனால் வெளி உலகில் வெற்றி பெற விஐ கியூ மட்டும் போதாது. அங்குத் தேவை செயல்திறன் அடிப்படையிலான ஐகியூதான். இதை ஆங்கிலத்தில் Performance Intelligence Quotient (PIQ) என்கிறார்கள். இந்தப் பிஐகியூ என்பது மொழி அறிவுத்திறன் மட்டுமே உடையவர்களைக் காட்டிலும் காட்சி ரீதியான அறிவுடையவர்களிடம் அதிக அளவில் காணப்படும். அதனால்தான் வழக்கமான படிப்பில் பின்தங்கியிருந்த பலர் நிஜ உலகில் ஜொலிக் கிறார்கள். அப்படிப்பட்ட பிஐ கியூவை வளர்த்தெடுக்கும் வகையில் நம் கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டுவந்தால் நம் கல்விக் கூடங்களுக்குள்ளேயே சச்சினும், ஆமிர் கானும், அசிம் பிரேம்ஜியும், மேரி காமும், முகேஷ் அம்பானியும் உருவெடுப்பார்கள்.