8 April 2014

ஆவணங்களில் முகவரியை மாற்றுவது எப்படி?

இவள் பாரதி

வீடு மாறினாலோ, வேலை காரணமாக ஊர் மாறினாலோ  நமது ஆவணங்களிலும் முகவரியை மாற்ற வேண்டியது அவசியம். குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு, ஓட்டுநர் உரிமம் ஆகிய ஆவணங்களில் முகவரியை மாற்றுவது எப்படி? அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை?

குடும்ப அட்டையில் முகவரி மாற்ற :  தேவையான ஆவணங்கள்:
முகவரி மாறியவுடன் முதலில் மாற்ற வேண்டியது கேஸ்  இணைப்பைத்தான். அதற்கு தற்போது குடியிருக்கும் வீட்டின் ஒப்பந்தந்தை அளித்து கைப்பட ஒரு விண்ணப்பம் எழுதிக் கொடுத்தால் போதும். வீட்டு ஒப்பந்தம், கேஸ் இணைப்பின் ரசீது இவற்றின் நகல்களை இணைத்து குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

எங்கே விண்ணப்பிப்பது?
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும். மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வட்ட வழங்கல் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைப் பதிவுத் தபாலிலும் அனுப்பலாம். நேரில் கொடுப்பவர்கள் கண்டிப்பாகக் கொடுத்ததற்கான அத்தாட்சி சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும்?
முகவரி மாற்றம் அதே ரேசன் கடையின் எல்லைக்குள் எனில் 3 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும். அதே மாவட்டத்தில் வேறு ஊரில் கடை மாற்றம் செய்யவேண்டுமெனில் 7 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும். மாநிலத்திற்குள் வேறு மாவட்டம் அல்லது வேறு தாலுகா முகவரி மாற்றம் 7 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும்.

தாமதமானால் என்ன செய்ய வேண்டும்?
வேண்டுமென்றே கொடுக்க மறுத்தாலோ, காலதாமதம் செய்தாலோ சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆணையாளரிடமும் மற்ற மாவட்டங்களில் மாவட்ட  வழங்கல் அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சியரிடமும் புகார் செய்ய வேண்டும் அல்லது தகவல் பெறும் உரிமை சட்டத்தைப் பயன்படுத்தி எளிதில் வாங்க முடியும் அல்லது மாநில நுகர்வோர் மையத்தைத் தொடர்பு கொள்ளவும்.

மாநில நுகர்வோர் மையத்தை 044  2859 2858 என்கிற எண்ணில் தொலைபேசியிலோ, consumer@tn.gov.in, schtamilnadu@gmail.com   என்கிற மின்னஞ்சல் முகவரியிலோ, மாநில நுகர்வோர் உதவி மையம், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, 4-ஆவது தளம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை - 5 என்ற முகவரியில் தபால் மூலமும் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாற்ற : தேவையான ஆவணங்கள்:
குடும்ப அட்டை, பான் கார்டு,

எங்கே விண்ணப்பிப்பது?
வேறு வாக்காளப் பகுதிக்கு அல்லது தொகுதிக்குள் உங்களுடைய வீடு இடமாற்றம் செய்யப்பட்டால், அந்தப் பகுதியின் வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பதிவை இடமாற்றம் செய்ய வேண்டும். இதற்காக படிவம்  8 A –ஐ பயன்படுத்தவேண்டும்.

மாநகராட்சிப் பகுதிக்குள் வசித்து வருபவராக இருந்தால், மண்டல அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று சமர்ப்பிக்கலாம். மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள், வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று சமர்ப்பிக்கலாம். உங்களுக்கு அருகிலுள்ள மையத்தை அல்லது தாலுகா அலுவலகத்தில் யாரைத் தொடர்புகொள்ள வேண்டும் போன்ற விவரத்தை http://elections.tn.gov.in/EPIC_CENTRE_ADDRESS.pdf   என்கிற இத்தளத்திற்குச் சென்று தெரிந்துகொள்ளலாம்.

ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்ற: தேவையான ஆவணங்கள்:
குடும்ப அட்டை, பான் கார்டு, மின் கட்டண ரசீது, தொலைபேசிக் கட்டண ரசீது, இத்துடன் முந்தைய முகவரிக்குட்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் என்.ஓ.சி. (‡No objection Certificate) ) வாங்கி இணைக்க வேண்டும்.  

எங்கே விண்ணப்பிப்பது?
ஓட்டுநர் உரிமத்தில் தனது பெயரையோ அல்லது தந்தை பெயருக்குப் பதில் கணவர் பெயரையோ, பிறந்த தேதியையோ, முகவரியையோ ஏதேனும் மாற்ற விரும்பினால் அதற்கான சான்றையும், ஒரு வெள்ளைத்தாளில் விண்ணப்பமும் எழுதிக் கொடுத்தால் போதும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அல்லது மோட்டார் வாகன ஆய்வாளர் கிரேடு I / II அவர்களிடம் நேரில் கொடுக்க வேண்டும்.

கட்டணம்:
கட்டணம் 315 ரூபாய்தான்.

வங்கிக் கணக்கில் முகவரி மாற்ற : தேவையான ஆவணங்கள்:
குடும்ப அட்டை, பான் கார்டு, மின் கட்டண ரசீது, தொலைபேசிக் கட்டண ரசீது.

எப்படி விண்ணப்பிப்பது?
கணக்கு இருக்கும் வங்கிக்குச் சென்று வங்கிக் கிளையை மாற்றம் செய்து தரக் கோரி ஒரு வெள்ளைத்தாளில் விண்ணப்பித்தால் போதும், உங்கள் வங்கிப் புத்தகத்தில் அந்தக் கிளையின் பெயரை எழுதிக் கொடுத்துவிடுவார்கள். பின்னர் அந்தப் புத்தகத்துடன் எந்த வங்கிக் கிளைக்கு மாற்ற விரும்புகிறீர்களோ அங்கு சென்று கணக்குப் புத்தகத்தைக் கொடுத்து, தேவையான ஆவணங்களையும் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஒரு வாரம் முதல்  15 நாட்களுக்குள் மாற்றம் செய்து தந்துவிடுவார்கள்.

ஆதார் அட்டையில் முகவரி மாற்ற :
ஆதார் அட்டையில் முகவரியை மாற்ற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணம் ஏதுமில்லை.http://uidai.gov.in/update-your-aadhaar-data.html  என்கிற இத்தளத்திற்குச் சென்று ஆன்லைன் வழியாக அப்டேட் செய்துகொள்ளலாம். தேவையான ஆவணங்களில் கையெழுத்திட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் இன்னும் நிரந்த மையம் அமையாததால் தபாலில் அனுப்ப விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரியில் அனுப்பலாம். விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய: http://uidai.gov.in/images/application_form_11102012.pdf

தமிழில் விண்ணப்பம் அனுப்ப :
UIDAI Regional Office
Khanija Bhavan, No.49, 3rd Floor,
South Wing Race Course Road, Bangalore -  01080-22340862

ஆங்கிலத்தில் விண்ணப்பம் அனுப்ப:
UIDAI Regional Office,
5th 7th Floor, MTNL Building,
B D Somani Marg, Cuff Parade, Mumbai – 400 005   
022  - 22186168  

மேலும் விவரங்கள் பெற: 1800-300-1947, help@uidai.gov.in

பாஸ்போர்ட்டில் முகவரி மாற்ற :
எல்லா ஆவணங்களையும் மாற்றிவிட்டு இறுதியாக பாஸ்போர்ட் முகவரியை மாற்ற வேண்டும். ஏனெனில் பாஸ்போர்ட் முகவரி மாற்றத்துக்குத் தேவையான ஆவணங்கள் அதிகம்.

தேவையான ஆவணங்கள்:
குடும்ப அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்குப் புத்தகம், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை.

எங்கே விண்ணப்பிப்பது?
அந்தந்த மாவட்டங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்களில் விண்ணப்பிக்கலாம் இவற்றுக்கு ஃபார்ம் 2 - ஐ பயன்படுத்த வேண்டும். (பெயர் மாற்றம், முகவரி மாற்றம், திருமணம் ஆனவுடன் உங்கள் மனைவியின் பெயரை உங்கள் பாஸ்போர்ட்டில் குறிப்பிடுதல் போன்ற சிறு திருத்தங்கள் மேற்கொள்ள, பாஸ்போர்ட்டைப் புதுப்பித்துக்கொள்ள ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தேவை இல்லை).

கட்டணம்:
இவற்றில் ஆர்டினரி, தட்கல் இரண்டுக்கும் 1,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஆவணங்களில் முகவரியை மாற்ற  விரும்புவோர் கவனத்திற்கு
  • புதிய முகவரிக்கு ஆவணங்களை மாற்றும்போது முதலில் ஓர் ஆவணத்தில் முகவரியை மாற்றி, பின்னர் மற்ற ஆவணங்களை மாற்ற விண்ணப்பிக்க வேண்டும்.
  • முதலில் கேஸ் இணைப்பை மாற்றிவிட வேண்டும். பின்னர் அதை வைத்து குடும்ப அட்டையையும், குடும்ப அட்டையை வைத்து மற்ற ஆவணங்களையும் மாற்றிவிட்டு கடைசியாக பாஸ்போர்ட் மாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  • சில இடங்களில் நீங்கள் கொடுக்கும் ஆவணங்களுடன் கூடுதல் ஆவணம் கேட்டால் நோட்டரி பப்ளிக் வாங்கிக் கொடுக்கலாம்.

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் என்ஜினீயர் பணி

ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன்  நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் எக்ஸிகியூட்டிவ் என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், என்விரான்மெண்டல், இன்ஸ்ட்ருமென்டேஷன், மெக்கானிக்கல், புரடெக்ஷன் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
11.04.2014-ஆம் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 30  வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும்,  தாழ்த்தப்பட்டோர்  மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/- (ஓ.பி.சி. மற்றும் பொது பிரிவினருக்கு), ரூ.100/- (மற்றவர்களுக்கு).
தேர்ந்தெடுக்கப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். அப்ஜெக்ட்டிவ் முறையில் நடைபெறும் தேர்வில், தாங்கள் படித்த படிப்பு தொடர்புடைய பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படும். அத்துடன், ஜெனரல் அவேர்னஸ் மற்றும் ஆப்டிட்யூட்  முறையிலும் கேள்விகள் கேட்கப்படும். 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். எழுத்துத் தேர்வில் சிறப்பிடம் பெறுவோருக்கு நேர்முகத் தேர்வும், உளவியல் தேர்வும் நடைபெறும்.  எழுத்துத் தேர்வுக்கு 60 மதிப்பெண்களும், நேர்முகத் தேர்வுக்கு 15 மதிப்பெண்களும், தகுதித் தேர்வுக்கு 25 மதிப்பெண்களும் ஆக மொத்தம்  100 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
சென்னை, பெங்களூரு, அகமதாபாத், ஹைதராபாத், தில்லி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 14 நகரங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.04.2014
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 22.06.2014
விவரங்களுக்கு: www.ongcindia.com

இந்திய கடற்படையில் பைலட் பணி

இந்திய கடற்படையில் பைலட்டாகப் பணியாற்ற திருமணம் ஆகாத ஆண், பெண் இருபாலர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு  ஜனவரி முதல்  தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 19 வயதுக்குக் குறையாமலும் 24 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும் அதாவது 02.01.1991-ஆம் தேதியிலிருந்து 01.01.1996-ஆம் தேதிக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர்  மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். இந்த பணிக்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.04.2014
விவரங்களுக்கு: www.nausena-bharti.nic.in

ரைட்ஸ் நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி

ரைட்ஸ் நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், மெட்டலர்ஜிகல், கெமிக்கல் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். காலியிடங்கள்: 16  
நேர்முகத் தேர்வு நாட்கள்: 10.04.2014, 11.04.2014
விவரங்களுக்கு: www.rites.com

டிப்ளமோ படித்தவர்களுக்கு அணுசக்தி துறை வேலை!

ஹைதராபாத் மற்றும் தூத்துக்குடியில் இயங்கி வரும் அணுசக்தி துறையில் டெக்னீஷியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம். டிரெய்னி (category 1) பணிக்கு மெக்கானிக்கல், கெமிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், மெட்டலர்ஜி ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ  பெற்றிருக்க வேண்டும். இதில் தாழ்த்தப்பட்டோருக்கு 13 காலியிடங்களும், பழங்குடியினருக்கு 4 காலியிடங்களும், பொதுப் பிரிவினருக்கு 77 காலியிடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 6 காலியிடங்களும் உள்ளன. இந்த ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள்  18 வயதுக்குக் குறையாமலும் 24 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும்,  தாழ்த்தப்பட்டோர்  மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.

டிரெய்னி (category 2) பணிக்கு ஃபிட்டர், டர்னர், வெல்டர், மெஷினிஸ்ட், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன், கார்பெண்டர், பிளம்பர், ரிக்கர், லேப் டெக்னீஷியன், கெமிக்கல் பிளாண்ட் ஆபரேட்டர் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இதில் தாழ்த்தப்பட்டோருக்கு 152 காலியிடங்களும், பொதுப் பிரிவினருக்கு 208 காலியிடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 183 காலியிடங்களும் உள்ளன. இந்த ஆண்டு  ஏப்ரல் 14-ஆம்  தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்குக் குறையாமலும் 22 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.  ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும்,  தாழ்த்தப்பட்டோர்  மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150/- (தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது).

விண்ணப்பிப்பது எப்படி?:
1. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் தற்போதைய புகைப்படம், கையெழுத்து, வயதுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழையும் ஸ்கேன் செய்து கொள்ளவும்.
2. இணையதளத்திற்குச் சென்று செலானை பிரிண்ட் அவுட் எடுத்து வங்கியில் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
3. பின்னர், ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.04.2014
விவரங்களுக்கு: www.nfcrecruitment.in

பொறியியல் பட்டதாரிகளுக்கு தமிழக அரசுப் பணிகளில் வேலை!

மிழ்நாட்டில் பொதுப்பணித் துறையில் உதவிப் பொறியாளர் பணிகளிலும் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையில் உதவி இயக்குநர் பணியிலும் சேர விரும்புபவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வை எழுத வேண்டும்.

பொதுப் பணித்துறையில் தண்ணீர் வளத் துறையில் உதவிப் பொறியாளர் (சிவில்), பொதுப்பணித் துறை கட்டடங்கள் பிரிவில் உதவிப் பொறியாளர் பணிகளில் சேர விரும்புபவர்கள் சிவில் என்ஜினீயரிங் அல்லது சிவில் அண்ட் ஸ்ட்ரக்சுரல் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் பி.இ., படித்திருக்க வேண்டும். இன்ஸ்டிட்யூஷன் தேர்வில் சிவில் என்ஜினீயரிங் தேர்வில் ஏ, பி பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஓராண்டுக்குக் குறையாமல் சர்வே பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பொதுப்பணித் துறையில் ஓவர்சீயர் அல்லது ஜூனியர் என்ஜினீயராக ஓராண்டு பணிபுரிந்து இருக்க வேண்டும் அல்லது எல்சிஇ டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

பொதுப் பணித்துறையில் உதவிப் பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்) பணியில் சேர விரும்புபவர்கள் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். அல்லது இன்ஸ்டிட்யூஷன் தேர்வில் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பாடப்பிரிவை எடுத்து அதில் ஏ, பி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை உதவி இயக்குநர் பணியில் சேர விரும்புபவர்கள், மெக்கானிக்கல், புரடக்ஷன், இன்டஸ்ட்ரியல், எலெக்ட்ரிக்கல், கெமிக்கல் என்ஜினீயரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதாவது பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் பணிகளில் சேர விரும்புபவர்கள், பத்தாம் வகுப்பு படித்து விட்டு பிளஸ் டூ அல்லது டிப்ளமோ படித்து விட்டு இளநிலைப் பட்டம் படித்திருக்க வேண்டியது அவசியம். தமிழ் மொழி அறிவு இருக்க வேண்டியது அவசியம். தேர்வு செய்யப்படுபவர்கள் உடல் தகுதி  சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது இருக்கும். இந்தப் பணியில் சேர விரும்புபவர்களுக்கு குறைந்தது 18 வயது ஆகி இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் அனைத்து சாதிகளைச் சேர்ந்த விதவைகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் கிடையாது. மற்றவர்களுக்கு 30 வயதுக்கு மேல் ஆகி இருக்கக் கூடாது. மற்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் மத்திய, மாநில அரசுப் பணிகளில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால், அவர்கள்  30 வயதுக்கு உட்பட்டிருந்தாலும் இந்தப் பணிகளில் சேர விண்ணப்பிக்க முடியாது.

போட்டித் தேர்வு எப்படி இருக்கும்?

சென்னை, மதுரை, கோவை, சிதம்பரம், காஞ்சிபுரம், காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, உதகமண்டலம், வேலூர் ஆகிய இடங்களில் இத்தேர்வை எழுதலாம்.

முதல் தாள் ஜூலை 27-ஆம் தேதி காலை 10 மணியிலிருந்து 1 மணி வரையிலும் நடைபெறும். இரண்டாம் தாள், அதே நாளில் பிற்பகல் 2.30 மணியிலிருந்து 4.30 மணி வரையில் நடைபெறும். எழுத்துத் தேர்வில் இரண்டு தாள்கள் உண்டு. இதில் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். முதல் தாளில் பட்டப் படிப்பு நிலையில் சம்பந்தப்பட்ட பாடங்களில்  200 கேள்விகள் கேட்கப்படும். இதற்கு விடையளிக்க 3 மணி நேரம் வழங்கப்படும்.

முதல் தாளுக்கு 300 மதிப்பெண்கள். இரண்டாம் தாளில் ஜெனரல் ஸ்டடீஸ் பாடத்தில் 100 கேள்விகள் கேட்கப்படும். இதற்கு 200 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதைத் தொடர்ந்து நடத்தப்படும் வாய்மொழித் தேர்வுக்கு 70 மதிப்பெண்கள் வழங்கப்படும். இத்தேர்வில் தாழ்த்தப்பட்டோர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் ஆகியோர் 570-க்கு குறைந்தது 171 மதிப்பெண்களும் மற்றவர்கள் 228 மதிப்பெண்களும் எடுக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப் படிவத்துக்குக் கட்டணம் ரூ.50, தேர்வுக் கட்டணம் ரூ.125. அதாவது மொத்தக் கட்டணம் ரூ.175. ஏற்கெனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நிரந்தரப் பதிவு முறையில் ஏற்கெனவே பதிவு செய்து பதிவுக் கட்டணமாக ரூ.50 செலுத்தி பதிவு எண் பெற்றுள்ளவர்கள், விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டியதில்லை. அவர்கள், தேர்வுக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேக்கிங் மூலம் கட்டணம் செலுத்தலாம். தபால் அலுவலகம் அல்லது இந்தியன் வங்கி மூலமும் கட்டணத்தைச் செலுத்தலாம்.

ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு முன்னதாக புகைப்படத்தையும் கையெழுத்தையும் ஸ்கேன் செய்து புகைப்படத்தை சிடி அல்லது பென் டிரைவில் வைத்துக்கொள்ள வேண்டும். விண்ணப்பதாரருக்கு இ-மெயில் முகவரியும் மொபைல் எண்ணும் இருக்க வேண்டியது அவசியம். ஹால் டிக்கெட், நேர்காணல் அழைப்புக் கடிதம் போன்றவை இ-மெயில் முகவரிக்கே அனுப்பப்படும். விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பித்த பிறகு, அதனை பிரிண்ட் PDF முறையில்  சேமித்து வைத்துக் கொள்வதுடன் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்புபவர்கள், ஏப்ரல் 23-ஆம் தேதி இரவு 11.59-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விவரங்களுக்கு : www.tnpsc.gov.in

என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை!

மத்திய அரசுப் பணிகளில் சேர விரும்பும்  என்ஜினீயரிங் பட்டதாரிகள்,  மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் என்ஜினீயரிங் சர்வீசஸ்  தேர்வை எழுத வேண்டும்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கான பல்வேறு பணிகளில் என்ஜினீயரிங் படித்த மாணவர்களை சேர்ப்பதற்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) என்ஜினீயரிங் சர்வீசஸ் தேர்வை (IES) நடத்துகிறது. சிவில் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்ற மாணவர்கள் இந்தப் போட்டித் தேர்வை எழுதலாம்.

இந்தியன் ரயில்வே சர்வீஸ் ஆஃப் என்ஜினீயர்ஸ், இந்தியன் ரயில்வே ஸ்டோர்ஸ் சர்வீஸ், சென்ட்ரல் என்ஜினீயரிங் சர்வீஸ், இந்தியன் டிபன்ஸ் சர்வீஸ் ஆஃப் என்ஜினீயர்ஸ், இந்தியன் ஆர்டினன்ஸ் ஃபேக்டரிஸ் சர்வீஸ், சென்ட்ரல் என்ஜினீயரிங் சர்வீஸ் (சாலைகள்) குரூப் ஏ பணி, அசிஸ்டெண்ட் எக்ஸிகியூட்டிவ் என்ஜினீயர் (பார்டர் ரோட்ஸ் என்ஜினீயரிங் சர்வீஸ்) குரூப் ஏ பணி, அசிஸ்ட்டெண்ட் எக்ஸிகியூட்டிவ் என்ஜினீயர்  (பி அண்ட் டி பில்டிங் ஒர்க்ஸ்) குரூப் ஏ பணி, சர்வே ஆஃப் இந்தியா குரூப் ஏ சர்வீஸ், இந்தியன் இன்ஸ்பெக்ஷன் சர்வீஸ் (உதவி இயக்குநர் கிரேடு 1) ஆகிய பணிகள் சிவில் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கானவை.

இந்தியன் ரயில்வே சர்வீஸ் ஆஃப் மெக்கானிக்கல் என்ஜினீயர்ஸ், இந்தியன் ரயில்வே ஸ்டோர்ஸ் சர்வீஸ், சென்ட்ரல் பவர் என்ஜினீயரிங் சர்வீஸ் (கிரேடு ஏ), இந்தியன் ஆர்டினன்ஸ் ஃபேக்டரிஸ் சர்வீஸ், இந்தியன் நேவல் ஆர்மமெண்ட் சர்வீஸ், பாதுகாப்பு அமைச்சகத்தில் அசிஸ்ட்டெண்ட் எக்ஸிகியூட்டிவ் என்ஜினீயர் குரூப் ஏ, அசிஸ்ட்டெண்ட் நேவல் ஸ்டோர்ஸ் ஆபீசர் - கிரேடு 1 (இந்திய கடற்படை), சென்ட்ரல் எலெக்ட்ரிக்கல் அண்ட் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் சர்வீஸ், அசிஸ்டெண்ட் எக்ஸிகியூட்டிவ் என்ஜினீயர் (பார்டர் ரோட்ஸ் என்ஜினீயரிங் சர்வீஸ் - குரூப் ஏ), இந்தியன் டிபன்ஸ் சர்வீஸ் ஆஃப் என்ஜினீயர்ஸ், அசிஸ்டெண்ட் எக்ஸ்கியூட்டிவ் என்ஜினீயர் ஜிஎஸ்ஐ என்ஜினீயரிங் சர்வீஸ் கிரேடு ஏ, இந்தியன் சப்ளை சர்வீஸ் (ஜேடிஎஸ் குரூப் ஏ), இந்தியன் இன்ஸ்பெக்ஷன் சர்வீஸ் உதவி இயக்குநர் (கிரேடு-1) ஆகிய பணிகள் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கானவை.

இந்தியன் ரயில்வே சர்வீஸ் ஆஃப் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர்ஸ், இந்தியன் ரயில்வே ஸ்டோர்ஸ் சர்வீஸ், சென்ட்ரல் எலெக்ட்ரிக்கல் அண்ட் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் சர்வீஸ், இந்தியன் நேவல் ஆர்மமெண்ட் சர்வீஸ், இந்தியன் ஆர்டினன்ஸ் ஃபேக்டரிஸ் சர்வீஸ், சென்ட்ரல் பவர் என்ஜினீயரிங் சர்வீஸ் கிரேடு ஏ, இந்தியன் டிபன்ஸ் சர்வீஸ் ஆஃப் என்ஜினீயர்ஸ், அசிஸ்ட்டெண்ட் நேவல் ஸ்டோர்ஸ் ஆபீசர் (கிரேடு 1), பாதுகாப்பு அமைச்சகத்தில் அசிஸ்டெண்ட் எக்ஸிகியூட்டிவ் என்ஜினீயர் (கிரேடு ஏ), இந்தியன் சப்ளை சர்வீஸ் (ஜேடிஎஸ் குரூப் ஏ), இந்தியன் இன்ஸ்பெக்ஷன் சர்வீஸ் (அசிஸ்டெண்ட் டைரக்டர் கிரேடு 1)  ஆகிய பணிகள் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கானவை.

இந்தியன் ரயில்வே சர்வீஸ் ஆஃப் சிக்னல் என்ஜினீயர்ஸ், இந்தியன் ரயில்வே ஸ்டோர்ஸ் சர்வீஸ், இந்தியன் நேவல் ஆர்மமெண்ட் சர்வீஸ், பாதுகாப்பு அமைச்சகத்தில் அசிஸ்டெண்ட் எக்ஸிகியூட்டிவ் என்ஜினீயர் (குரூப் ஏ), சென்ட்ரல் பவர் என்ஜினீயரிங் சர்வீஸ் (குரூப் ஏ), இந்தியன் ரேடியோ ரெகுலேட்டரி சர்வீஸ் (குரூப் ஏ), அசிஸ்டெண்ட் நேவல் ஸ்டேர்ஸ் ஆபீசர் கிரேடு 1 (கடற்படை), இந்தியன் சப்ளை சர்வீஸ் குரூப் ஏ, இந்தியன் டிபன்ஸ் சர்வீஸ் ஆஃப் என்ஜினீயர்ஸ், இந்தியன் இன்ஸ்பெக்ஷன் சர்வீஸ் (அசிஸ்டெண்ட் டைரக்டர் கிரேடு 1), இந்தியன் டெலிகம்யூனிக்கேஷன் சர்வீஸ் குரூப் ஏ, ஜூனியர் டெலிகாம் ஆபீசர் (குரூப் பி), ஆகிய பணிகள் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கானவை.

என்ஜினீயரிங் பாடப்பிரிவுகளில் பட்டப் படிப்பை படித்திருக்க வேண்டும். இன்ஸ்ட்டியூஷன் ஆஃப் என்ஜினீயர்ஸ் அமைப்பு நடத்தும் ஏ மற்றும் பி பிரிவு தேர்வுகளை எழுதியிருக்க வேண்டும். இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயர்ஸ் அமைப்பு நடத்தும் கிராஜுவேட் மெம்பர்ஷிப் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் இத்தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். ஏரோ நாட்டிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா அமைப்பு நடத்தும் அசோசியேட் மெம்பர்ஷிப் தேர்வில் (பகுதி 1 மற்றும் 2 அல்லது ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவுகள்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். லண்டனில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் ரேடியோ என்ஜினீயர்ஸ்  அமைப்பு நடத்தும் கிராஜுவேட் மெம்பர்ஷிப் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தியன் நேவல் ஆர்மமெண்ட் சர்வீஸ் (எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் பணிகள்) மற்றும் என்ஜினீயர் (கிரேடு ஏ வயர்லஸ் பிளானிங் அண்ட் கோ ஆர்டினேஷன் விங், மானிட்டரிங் ஆர்கனைசேஷன்) பணிகளில் சேர விரும்புபவர்களுக்கு மேற்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும்  அல்லது வயர்லெஸ் கம்யூனிக்கேஷன், எலெக்ட்ரானிக்ஸ்,  ரேடியோ பிசிக்ஸ் அல்லது ரேடியோ என்ஜினீயரிங் பாடப்பிரிவுகளை சிறப்புப் பாடமாக எடுத்து எம்எஸ்சி படித்தவர்களும் இந்தப் பணியில் சேர விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி, 21 வயது ஆகி இருக்க வேண்டும்.  ஆனால்  30 வயதுக்கு மேல் ஆகி இருக்கக்கூடாது. அதாவது, 1984-ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதிக்கு முன்னதாகவோ அல்லது 1993-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதிக்குப் பிறகோ பிறந்திருக்கக் கூடாது. பணியில் இருப்பவர்கள், தாற்காலிக பணியில் இருப்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கான விதிமுறை விவரங்கள் இணையதளத்தில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. உடல் தகுதியும் அவசியம் தேவை.

சென்னை, மதுரை உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் இத்தேர்வை எழுதலாம். இந்தத் தேர்வு ஜூன் 20-ஆம் தேதி நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு இரண்டு பிரிவுகளாக இருக்கும். முதல் பிரிவில் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். அதில் ஜெனரல் இங்கிலீஷ், ஜெனரல் ஸ்டடீஸ் ஆகிய பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் இருக்கும். இது அனைவருக்கும் பொதுவானது. இரண்டாம் பிரிவில் மாணவர்கள் தேர்வு செய்த என்ஜினீயரிங் பாடப்பிரிவிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இரண்டு மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வுக்கு 200 மதிப்பெண்கள் வழங்கப்படும். சிவில் என்ஜினீயரிங் மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வில் சிவில் என்ஜினீயரிங் பாடத்தில் நான்கு தாள்கள் உண்டு. இதில் முதல் இரண்டு தாள்களுக்கு விடையளிக்க தலா 2 மணி நேரமும் அதையடுத்துள்ள இரண்டு தாள்களுக்கு விடையளிக்க தலா 3 மணி நேரமும் வழங்கப்படும். இந்த நான்கு தாள்களுக்கும் தலா 200 மதிப்பெண்கள் வீதம் வழங்கப்படும். இதேபோல், மெக்கானிக்கல், என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங் ஆகிய பாடங்களிலும் தேர்வு இருக்கும். எழுத்துத் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு பர்ஸனாலிட்டி டெஸ்ட் நடத்தப்படும். அதற்கும் 200 மதிப்பெண்கள். இந்தப் போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டங்களையும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் ரூ.200. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை. விண்ணப்பக் கட்டணத்தை பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் நேரடியாகச் செலுத்தலாம். பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் ஆகிய வங்கிகளில் நெட் பேங்கிங் வசதிகளைப் பயன்படுத்தி விண்ணப்பக் கட்டணம் செலுத்தலாம் அல்லது கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலமும் கட்டணத்தைச் செலுத்தலாம்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசுத் துறையிலோ அல்லது அரசுத் துறை நிறுவனங்களிலோ நிரந்தரமாகவோ அல்லது தாற்காலிகமாகவோ பணி செய்து வருபவர்கள், இத்தேர்வை எழுத விரும்பினால் அதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்கள், தாங்கள் தேர்வு எழுத விரும்பும் மையம், எந்த என்ஜினீயரிங் பாடத்தில் தேர்வு எழுத விரும்புகிறீர்கள் என்பதைக் குறிப்பிட வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த படிவத்தின் நகலை பிரிண்ட் அவுட் எடுத்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்ப வேண்டியதில்லை. என்ஜினீயரிங் சர்வீஸ் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் ஏப்ரல் 21-ஆம் தேதி இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விவரங்களுக்கு: www.upsc.gov.in