14 January 2015

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துபவை புத்தகங்களே

 சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகக் காட்சியில் ‘நூலக உலகம்’ மாத இதழ் மற்றும் ‘உத்தம நாயகன்’ நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது:
இன்றைய காலத்தில் பத்திரிகை நடத்துவது எளிய காரியமல்ல. தற்போது படிப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்குக் காரணம் பொதுமக்களா? எழுத்தாளர்களா? பதிப்பாளர்களா? அல்லது வெளியீட்டாளர்களா என்று எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் புத்தகங்களை வாசிக்கும் போதுதான் உலகைப் பற்றிய, இந்த சமூகத்தைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு உண்டாகும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற முக்கிய சட்டங்களைக்கூட மக்கள் இன்னும் சரிவர அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். இத்தகைய நிலை மாற நூல்களைப் படிக்க வேண்டும்.

சமூக அக்கறையும் விழிப்புணர்வும் அருகி வரும் இன்றைய காலத்தில் அவற்றைத் தூண்டும் வல்லமை படைத்தவை நூல்களே. இளைஞர்கள் நூல்களைப் படிக்கும் வகையில் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.