18 February 2014

பிரிட்டனில் படிக்க என்ன செய்யலாம்?

வெளிநாட்டிற்குச் சென்று உயர் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வம் இன்றைய இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. கூடவே, அதற்கான திட்டமிடல்களும், தேடல்களும் அதிகரித்து வருகின்றன. வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்று விரும்புபவர்களின் முதல் இரண்டு சாஸ்களில் அமெரிக்காவும், இங்கிலாந்தும் முக்கிய இடத்தில் உள்ளன. ஆண்டுக்கு சுமார் 4.30 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கற்பதற்காக பிரிட்டனுக்குச் செல்கிறார்கள். இதில் இந்திய மாணவர்கள் சுமார் 30 ஆயிரம் பேர்.

பிரிட்டனில் முதுநிலை பட்டப் படிப்பு படிக்க இந்திய மாணவர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருவதற்கு முக்கியமாக இரண்டு காரணங்களைக் கூறலாம். இந்தியாவைப்போல் அல்லாமல், அங்கு ஓராண்டு காலத்திற்குள் முதுநிலை பட்டப் படிப்பை முடித்துவிடலாம் என்பதே அதற்குக் காரணம். அத்துடன் பிரிட்டனில் தங்கி படித்துக் கொண்டிருக்கும்போதே பகுதி நேர வேலை பார்த்து, தங்களது அன்றாட வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்கும் அளவுக்கு சம்பாதிக்க முடியும் என்பதும் ஒரு காரணம். மிகச் சிறந்த பிரிட்டன் பல்கலைக்கழகங்களில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் பிரகாசமாக இருக்கும்.

இந்திய மாணவர்களின் ஆர்வத்துக்கு தீனி போடும் வகையில் பிரிட்டனைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் பங்கேற்கும் கல்விக் கண்காட்சி சென்னையில் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டு சென்னையில் நடந்த கண்காட்சியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று தங்களது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டனர்.

யுனிவர்சிட்டி ஆஃப் காலேஜ் பிர்மிங்காம், சிட்டி யுனிவர்சிட்டி லண்டன், பிபிபி யுனிவர்சிட்டி, ஆஸ்டன் யுனிவர்சிட்டி, யுனிவர்சிட்டி ஆஃப் ஈஸ்ட் லண்டன், யுனிவர்சிட்டி ஆஃப் கிரீன்விச் (லண்டன்), லிவர்பூல் ஹோப் யுனிவர்சிட்டி, லண்டன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் அண்ட் மேனேஜ்மெண்ட், நியூகேஸில் யுனிவர்சிட்டி, யுனிவர்சிட்டி ஆஃப் ரீடிங், குயின் மேரி யுனிவர்சிட்டி ஆஃப் லண்டன் உள்ளிட்ட 63 பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கல்வி நிறுவனங்களில் கற்பிக்கப்படும் படிப்புகள் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

ஆண்டுதோறும் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களில் எஜுக்கேஷன் யு.கே. கண்காட்சியை நடத்தி வருகிறோம். இங்கிலாந்து சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்து தருகிறோம். மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன? என்பது பற்றியெல்லாம் விளக்குகிறோம். பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் படிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கும் நாங்கள் உதவுகிறோம். IELTS  தேர்வுக்குத் தயாராகும் முறை பற்றியும் விளக்கமளிக்கிறோம்" என்கிறார் பிரிட்டீஷ் கவுன்சிலின் சர்வதேசக் கல்விச் சந்தைக்கான சீனியர் புராஜக்ட் மேனேஜர் (தென் இந்தியா) சோனு.

மாஸ் கம்யூனிக்கேஷன், கம்ப்யூட்டர் எடட் டிசைன், ஃபிலிம் அண்ட் டி.வி. புரடக்‌ஷன், மீடியா, டிசைன், டாகுமெண்டரி புரடக்‌ஷன்,  ஃபைன் ஆர்ட்ஸ், அக்ரிகல்ச்சுரல் மேனேஜ்மெண்ட், கிரிமினஸ் ஜஸ்டிஸ், அனிமல் கேர், சயின்ஸ் அண்ட் மேனேஜ்மெண்ட், மோட்டார் ஸ்போர்ட்ஸ் என்ஜினீயரிங், பர்பார்மிங் ஆர்ட்ஸ், டிராவல் அண்ட் டூரிஸம், ஸ்போர்ட்ஸ் ஜர்னலிசம், இன்டர்நேஷனல் மேனேஜ்மெண்ட், கிராபிக் டிசைன், அப்ளைடு பெட்ரோலியம் ஜியோசயின்ஸ், கண்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன், கன்ஸ்ட்ரக்ஷன் எக்கனாமிக்ஸ் அண்ட் மேனேஜ்மெண்ட், டிரக் டிக்கவரி அண்ட் டெவலப்மெண்ட் உள்ளிட்ட ஏராளமான பிரிவுகளில் ஆயிரக்கணக்கான படிப்புகள் பிரிட்டனிலுள்ள  பல்கலைக்கழகங்களில் கற்றுத் தரப்படுகின்றன.

பிரிட்டனிலுள்ள எந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கலாம் என்பதை முடிவு செய்வது, சம்பந்தப்பட்ட மாணவனின் வாழ்க்கையில் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் முடிவு. எனவே ஒரு பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முதலில் எஜுக்கேஷன் யு.கே. இணையதளத்துக்குச் சென்று பார்வையிடுவது நல்லது. ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் உள்ள படிப்புகள், வசதிகள் பற்றியெல்லாம் இதிலிருந்து அறிந்துகொள்ள முடியும். யு.கே. விசா மற்றும் இமிக்ரேஷன் இணையதளத்திற்குச் சென்று நீங்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துள்ள கல்வி நிறுவனம் பதிவு செய்யப்பட்டதுதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். உங்கள் ஊருக்கு அருகிலுள்ள பிரிட்டீஷ் கவுன்சில் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு இங்கிலாந்தில் படிப்பதற்கான வாய்ப்புகள், செலவுகள் போன்ற விவரங்களை அறிந்து கொள்ளுங்கள். பிறகு ஒரு தெளிவான முடிவை எடுக்கலாம்.

பிரிட்டனில் எம்.பி.ஏ. படிக்க விரும்பும் மாணவர்கள், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இளநிலைப் பட்டப் படிப்பையோ அல்லது முதுநிலை பட்டப் படிப்பையோ படித்து முடித்த மாணவர்கள் நேரடியாக எம்.பி.ஏ. படிப்பில் சேர முடியாது. பிரபலமான மேனேஜ்மெண்ட் கல்லூரிகளில் படிக்க விரும்பினால் அதற்கேற்றபடி கல்விக் கட்டணமும் அதிகமாக இருக்கும்.  படித்துக் கொண்டிருக்கும்போதே பகுதி நேர வேலை பார்த்து சம்பாதிக்கவும் முடியும்" என்கிறார் இங்கிலாந்திலுள்ள ஐ.இ.எஸ். அகாதெமியின் இயக்குநர் (தென் இந்தியா) டாக்டர். ஜார்ஜ் ஜோசப். கண்காட்சிக்கு வந்திருந்த அன்னபூரணி என்ற மாணவி, சென்னையில் எம்.எஸ்.டபிள்யூ முடித்தவர். இங்கிலாந்தில் பிஎச்.டி. படிப்புக்கான வாய்ப்புகள் பற்றி அறிந்துகொள்ள வந்திருந்தார்.

இங்கிலாந்தில் முழு நேர பிஎச்.டி. படிப்புக்கு  மூன்று ஆண்டுகள் ஆகும். பகுதி நேரப் படிப்புக்கு  5 ஆண்டுகள் ஆகும். பிஎச்.டி. படிப்புக்காக இங்கிலாந்து செல்பவர்கள், அங்கு பகுதி நேர வேலை பார்ப்பது சாத்தியமில்லை என்பதை தெரிந்துகொண்டேன்" என்கிறார் அன்னபூரணி.

பிரிட்டனில் இளநிலை பட்டப் படிப்பு படிக்க விரும்புபவர்கள், மேல்நிலைக் கல்வியில்  60 சதவீதத்துக்குக் குறையாத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். ஒரு சில  பல்கலைக்கழகங்கள் 75 முதல் 90 சதவீதம் வரை மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று நிர்ணயித்துள்ளது. அத்துடன் ஆங்கில மொழி அறிவை சோதித்தறியும் TOEFL அல்லது  IELTS தேர்வில் சிறப்பிடம் பெற்றிருக்கவேண்டும். IELTS தேர்வுக்குத் தயாராவதற்கு பிரிட்டீஷ் கவுன்சிலே பயிற்சியளிக்கிறது.

பிரிட்டனில் இளநிலை பட்டப் படிப்பு படிக்க ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரையும், முதுநிலை பட்டப் படிப்பு படிக்க ஆண்டுக்கு ரூ.13 லட்சம் வரையும் செலவு பிடிக்கும். தேர்ந்தெடுக்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் படிப்புக்கேற்ப இந்தக் கட்டணம் மாறுபடும்.  படித்துக் கொண்டிருக்கும்போதே பகுதி நேரமாக வாரத்துக்கு 20 மணி நேரம் வேலை பார்க்கலாம். அதில் கிடைக்கும் ஊதியத்தைக்கொண்டு தங்களது செலவுகளைச் சமாளித்துக்கொள்ள முடியும். மாணவர்களின் படிப்பு மற்றும் திறமைக்கேற்ப பல்வேறு ஸ்காலர்ஷிப்களும் கிடைக்கும். இங்கிலாந்துக்குப் படிக்கப் போகும் மாணவர்கள், அதுபற்றி ஓராண்டுக்கு முன்பே திட்டமிடுவது நல்லது. எதைப் படிக்கப் போகிறோம், எங்கு படிக்கப் போகிறோம் என்பதை முன்கூட்டியே முடிவு செய்துகொள்ள வேண்டும்.

பிரிட்டனில் செப்டம்பர் மாதத்திலிருந்துதான் கல்வியாண்டு தொடங்குகிறது. அதனால் அதற்கு முன்பே, ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலேயே படிக்கும் கல்லூரி, தேர்ந்தெடுக்கும் படிப்பு பற்றித் தீர்மானித்து விடவேண்டும். அத்துடன் ‘ஸ்டேட்மெண்ட் ஆஃப் பர்ப்பஸ்’ எனப்படும் சுயவிளக்கக் கடிதத்தையும் தயார்செய்ய வேண்டும். பிரிட்டன்  சென்று படிக்க விரும்பும் காரணத்தையும், குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தை, படிப்பைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன என்பதையும் அதில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். தவிர, நீங்கள் தற்போது படித்துக் கொண்டிருக்கும் பள்ளி அல்லது கல்லூரி முதல்வரிடமிருந்து ஒரு பரிந்துரைக் கடிதத்தையும் பெற்று அனுப்ப வேண்டும்" என்று டிப்ஸ் தருகிறார் லண்டனிலுள்ள கிங்ஸ்டன் பல்கலைக் கழகத்தின் சர்வதேச அதிகாரி எலினர் லூகர்.

மேலும் விவரங்களுக்கு: www.britishcouncil.in  /  www.educationuk.org/india / www.ielts.org  /  www.vfs-uk-in.com

மேற்படிப்புக்கு லாத்வியா நாட்டுக்குப் போகலாமா?

எஸ். சந்திர மௌலி

லாத்வியா - ஐரோப்பாவில் பால்டிக் கடலையொட்டி, ருஷ்யா, லிதுவேனியா, எஸ்தானியா ஆகிய நாடுகளால் சூழப்பட்ட சின்ன தேசம் லாத்வியா. சுமார் 65 ஆயிரம் ச.கி.மீ. பரப்பளவும், 23 லட்சம் மக்கள் தொகையும் கொண்ட இந்நாட்டின் தலைநகரம் ரிகா. லாத்வியா நாட்டில் உள்ள ஏழு பல்கலைக்கழகங்கள் ஒன்று சேர்ந்து சென்னையில், ‘லாத்வியா கல்வி மையம்’ ஒன்றைத் துவக்கியுள்ளன. லாத்வியா நாட்டில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு உதவுவதற்காக அந்நாட்டு அரசாங்கத்தின் ஆதரவோடு இந்தியாவில் துவக்கப்பட்டிருக்கும் முதல் மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மையத்தின் துவக்க விழாவுக்காக லாத்விய பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் குழு ஒன்று சென்னைக்கு வந்திருந்தது. அவர்களோடு ஒரு உரையாடல்:

லாத்வியா நாட்டைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?
பல நூற்றாண்டுப் பாரம்பரியமும், கலாசாரமும் கொண்ட லாத்வியா, ருஷ்யாவிடமிருந்து 1991-ல் சுதந்திரம் பெற்றது. மக்கள் தொகையில் 60% லாத்வியர்கள், 30% ருஷ்யர்கள். பாராளுமன்ற மக்களாட்சி நடக்கிறது. நாட்டின் பெரும்பகுதி காடுகளைக் கொண்டது. ஏராளமான வன விலங்குகளும் உண்டு. நாடெங்குமாக 12 ஆயிரம்  சிறு ஆறுகளும், 3,000 ஏரிகளும் உள்ளன. ஐரோப்பிய நாடுகளின் கட்டுமான மற்றும் காகிதத் தொழிலுக்குத் தேவையான மரம் இங்கிருந்துதான் ஏற்றுமதியாகிறது. நீண்ட, கடுமையான குளிர்காலமும், வெதுவெதுப்பான கோடையும் கொண்ட நாடு. மிகப் பழைமையான ஐரோப்பிய மொழிகளில் லாத்விய மொழியும் ஒன்று (ஒரு விஷயம்: லாத்விய மொழிக்கும், நம் நாட்டின் சம்ஸ்கிருதத்துக்கும் தொடர்பு உண்டு என்கிறது ஓர் இன்டர்னெட் தகவல்). ஐஸ் ஹாக்கி நாட்டின் மிகப் பிரபலமான விளையாட்டு. கால்பந்தும், கூடைப்பந்தும் மற்ற முக்கிய விளையாட்டுகள்.

உங்கள் ஊர் பல்கலைக்கழகங்களின் ஸ்பெஷாலிட்டி என்ன?
‘எங்கள் பல்கலைக்கழகங்கள் மிகச் சிறந்த கல்வியாளர்களையும், தொழில்நுட்ப வல்லுநர்களையும் கொண்டவை. நவீன வசதிகள், பெரிய நூல் நிலையங்கள், ஆராய்ச்சி வசதிகள், தரமான கல்வி ஆகியவை எங்கள் பலம். பட்டப் படிப்புக்கு லாத்வியா வந்தால், பட்ட மேற்படிப்பையும், அதன் பின் ஆராய்சிப் படிப்பையும் தொடர முடியும். மேலும், மற்ற ஐரோப்பிய பல்கலைக்கழகங்களோடு ஒப்பிடும் போது, லாத்வியாவில்தான் மிக அதிகபட்சமாக ஆங்கிலத்தில் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. மாணவர்கள், படிக்கும்போது வாரத்துக்கு 20 மணிநேரம் வரை பகுதி நேரமாக ஏதாவது பணி செய்து சம்பாதிக்கலாம். இதற்காக பிரத்யேகமாக ஒர்க் பர்மிட் பெற வேண்டிய அவசியமில்லை. மற்ற சில ஐரோப்பிய நாடுகளில் மாணவர்கள், படிப்பை முடித்தவுடன், அங்கேயே வேலை தேட வேண்டுமானாலும் கூட, மாணவர் விசா முடிந்து, தங்கள் ஊருக்குக் கட்டாயமாகச் சென்று, மீண்டும் விசா நீட்டிப்புக்கு விண்ணப்பித்து, அதன் பிறகு ஐரோப்பா திரும்பி, வேலை தேட வேண்டும். லாத்வியாவில் அதற்கு அவசியமில்லை. படிப்பை முடித்தவுடன், அங்கேயே தங்கி வேலை தேடிக்கொள்ளலாம். தற்போது ஐம்பதுக்கும் அதிகமான உலக நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் எங்கள் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். பன்னாட்டு மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்களும் உள்ளன.

இப்போது இந்திய மாணவர்கள் யாராவது லாத்வியாவில் படிக்கிறார்களா?
சுமார் 200 இந்திய மாணவர்கள் இப்போது லாத்வியாவில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். மற்ற எந்த ஐரோப்பிய நாடுகளையும் விட, லாத்வியா சென்று படிப்பதால் செலவு கொஞ்சம் குறைவாகவே இருக்கும்.’

தொடர்புக்கு:
Study in Latvia, 18, II Floor, Lokesh Towers, Kodambakkam High Road, Chennai - 600034

CSIR –UGC நடத்தும் விரிவுரையாளர் தகுதித் தேர்வு

கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகவும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்காக  ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்பும் பெற விரும்பும் அறிவியல்  பாட மாணவர்கள் சிஎஸ்ஐஆர்-யுஜிசி நடத்தும் நெட் தேர்வை எழுத வேண்டும். தற்போது, பொறியியல்  பட்ட மாணவர்களும் எம்பிபிஎஸ் பட்ட மாணவர்களும் இத்தேர்வை எழுத அனுமதிக்கப்படுகிறார்கள்.

ல்லூரிகளில் விரிவுரையாளர்களாகவும் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் பெற்று ஆராச்சிப் படிப்புகளை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களும் அறிவியல் மற்றும் தொழில் ஆராச்சிக் கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) நடத்தும்  சிஎஸ்ஐஆர்-யுஜிசி விரிவுரையாளர் தகுதித் தேர்வை (நெட்) எழுத வேண்டும். இந்தத் தேர்வு ஆண்டுக்கு இரு முறை, அதாவது ஜூன், டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. வருகிற ஜூன் 22-ஆம் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இந்தத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு நடைபெறும் தேதியில் மாறுதல் இருக்கவும் வாய்ப்பு உண்டு. தேர்வுக் கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கெமிக்கல் சயின்சஸ்,
  • லைஃப் சயின்சஸ்
  • எர்த், அட்மாஸ்பெரிக், ஓசன் அண்ட்  பிளானிட்டரி சயின்சஸ்
  • பிசிக்கல் சயின்ஸ்,
  • மேத்மேட்டிக்கல் சயின்சஸ்,
  • என்ஜினீயரிங் சயின்சஸ்

ஆகிய ஆறு பாடப் பிரிவுகளில் மூன்று மணி நேரம் இத்தேர்வு நடைபெறும். இந்தப் பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் 200 மதிப்பெண்கள். கேள்வித்தாள் ஏ,பி,சி என்ற மூன்று பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். பகுதி-ஏ பிரிவு அனைத்துப் பாடங்களுக்கும் பொதுவானது. லாஜிக்கல் ரீசனிங், கிராபிக்கல் அனாலிசிஸ், அனலிட்டிக்கல் அண்ட் நியூமரிக்கல் எபிலிட்டி, குவான்டிடேட்டிவ் கம்பேரிசன், சீரியஸ் பார்மேசன், பசில்ஸ் போன்ற பிரிவுகளில் திறனறி வினாக்கள் இருக்கும்.

என்ஜினீயரிங் மாணவர்களுக்கான பகுதி-பி பிரிவில் கணிதம், என்ஜினீயரிங் ஆப்டிட்யூட் ஆகியவை குறித்த வினாக்களும் பகுதி - சி பிரிவில் சம்பந்தப்பட்ட பாடங்களிலிருந்து அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகளும் கேட்கப்படும்.

மற்ற பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பகுதி - பி பிரிவில் சம்பந்தப்பட்ட பாடங்களில் அப்ஜெக்ட்டிவ் முறையில் வினாக்கள் கேட்கப்படும். பகுதி - சி பிரிவில் அறிவியல் கோட்பாடுகள் குறித்து மாணவர்களின் அறிவை சோதனை செய்யும் வகையில் வினாக்கள் இருக்கும். இத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சென்னை உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் இத்தேர்வை எழுதலாம்.

இந்தத் தேர்வை யார் எழுதலாம்?

பிஎஸ் நான்கு ஆண்டு பட்டப் படிப்பு, பிஇ, பிடெக், பிபார்ம், எம்பிபிஎஸ், ஒருங்கிணைந்த பிஎஸ்-எம்எஸ் அல்லது எம்எஸ்சி படிப்புகள் அல்லது அதற்கு நிகரான படிப்புகளில் பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி மாணவர்கள் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் இந்தப் படிப்புகளில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எம்எஸ்சி படிக்கச்  சேர்ந்துள்ள மாணவர்களும் இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். பிஎஸ்சி ஆனர்ஸ் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றவர்களும் இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். ஒருங்கிணைந்த எம்எஸ்.-பிஎச்டி படிப்பில்  சேர்ந்துள்ள மாணவர்களும் இத்தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். அதேசமயம், பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி மாணவர்கள் குறைந்தது  55 சதவீத மதிப்பெண்களும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

அறிவியல், பொறியியல் அல்லது வேறு பாடங்களில் இளநிலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் பிஎச்டி அல்லது ஒருங்கிணைந்த பிஎச்டி படிப்பில் பதிவு செய்த பிறகுதான் ஃபெல்லோஷிப் பெறுவதற்கு தகுதி பெறுகிறார்கள். விரிவுரையாளருக்கான நெட் தேர்வில் தகுதி பெற்றவர்கள், பல்கலைக்கழக மானியக் குழுவின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். ஜேஆர்எஃப்-நெட் தேர்வு எழுத விரும்புபவர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதி நிலவரப்படி, 28 வயதுக்கு மேல் ஆகி இருக்கக் கூடாது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் விலக்கு அளிக்கப்படும். விரிவுரையாளர் பணிக்கான நெட் தேர்வு எழுதுவதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்தத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், இந்தியன் வங்கிக் கிளைகளில் விண்ணப்பக் கட்டணங்களைச் செலுத்தலாம். பொதுப்பிரிவு மாணவர்களுக்கு கட்டணம் ரூ.400. ஓபிசி பிரிவினருக்கு கட்டணம் ரூ.200. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பார்வையற்றோருக்கு கட்டணம் ரூ.100. ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்கள், ஆன்லைன் மூலம் செலானை டவுன்லோடு செய்து விண்ணப்பக் கட்டணத்தை இந்தியன் வங்கியில் செலுத்த வேண்டும்.

வங்கிகளில் மார்ச் 3-ஆம் தேதிக்குள் கட்டணத்தைச் செலுத்திவிட வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 4. ஆன்லைன் மூலம் அனுப்பிய விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, வங்கி செலான் மற்றும் உரிய உரிய இணைப்புகளுடன் ‘Sr. Controller of Examination, Examination Unit, HRDG, CSIR Complex, Library Avenue, Pusa, New Delhi -   110012’ என்ற முகவரிக்கு மார்ச் 8-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். நீண்ட தூர பகுதிகளைச்  சேர்ந்த மாணவர்களின் விண்ணப்பங்கள் மார்ச் 14-ஆம் தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பிக்கும் முறை, தகுதி உள்ளிட்ட விரிவான தகவல்களை இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

விவரங்களுக்குwww.csirhrdg.res.in