தமிழ்நாட்டில் பொதுப்பணித் துறையில் உதவிப் பொறியாளர் பணிகளிலும் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையில் உதவி இயக்குநர் பணியிலும் சேர விரும்புபவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வை எழுத வேண்டும்.
பொதுப் பணித்துறையில் தண்ணீர் வளத் துறையில் உதவிப் பொறியாளர் (சிவில்), பொதுப்பணித் துறை கட்டடங்கள் பிரிவில் உதவிப் பொறியாளர் பணிகளில் சேர விரும்புபவர்கள் சிவில் என்ஜினீயரிங் அல்லது சிவில் அண்ட் ஸ்ட்ரக்சுரல் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் பி.இ., படித்திருக்க வேண்டும். இன்ஸ்டிட்யூஷன் தேர்வில் சிவில் என்ஜினீயரிங் தேர்வில் ஏ, பி பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஓராண்டுக்குக் குறையாமல் சர்வே பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பொதுப்பணித் துறையில் ஓவர்சீயர் அல்லது ஜூனியர் என்ஜினீயராக ஓராண்டு பணிபுரிந்து இருக்க வேண்டும் அல்லது எல்சிஇ டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
பொதுப் பணித்துறையில் உதவிப் பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்) பணியில் சேர விரும்புபவர்கள் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். அல்லது இன்ஸ்டிட்யூஷன் தேர்வில் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பாடப்பிரிவை எடுத்து அதில் ஏ, பி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை உதவி இயக்குநர் பணியில் சேர விரும்புபவர்கள், மெக்கானிக்கல், புரடக்ஷன், இன்டஸ்ட்ரியல், எலெக்ட்ரிக்கல், கெமிக்கல் என்ஜினீயரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதாவது பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பணிகளில் சேர விரும்புபவர்கள், பத்தாம் வகுப்பு படித்து விட்டு பிளஸ் டூ அல்லது டிப்ளமோ படித்து விட்டு இளநிலைப் பட்டம் படித்திருக்க வேண்டியது அவசியம். தமிழ் மொழி அறிவு இருக்க வேண்டியது அவசியம். தேர்வு செய்யப்படுபவர்கள் உடல் தகுதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது இருக்கும். இந்தப் பணியில் சேர விரும்புபவர்களுக்கு குறைந்தது 18 வயது ஆகி இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் அனைத்து சாதிகளைச் சேர்ந்த விதவைகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் கிடையாது. மற்றவர்களுக்கு 30 வயதுக்கு மேல் ஆகி இருக்கக் கூடாது. மற்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் மத்திய, மாநில அரசுப் பணிகளில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால், அவர்கள் 30 வயதுக்கு உட்பட்டிருந்தாலும் இந்தப் பணிகளில் சேர விண்ணப்பிக்க முடியாது.
போட்டித் தேர்வு எப்படி இருக்கும்?
சென்னை, மதுரை, கோவை, சிதம்பரம், காஞ்சிபுரம், காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, உதகமண்டலம், வேலூர் ஆகிய இடங்களில் இத்தேர்வை எழுதலாம்.
முதல் தாள் ஜூலை 27-ஆம் தேதி காலை 10 மணியிலிருந்து 1 மணி வரையிலும் நடைபெறும். இரண்டாம் தாள், அதே நாளில் பிற்பகல் 2.30 மணியிலிருந்து 4.30 மணி வரையில் நடைபெறும். எழுத்துத் தேர்வில் இரண்டு தாள்கள் உண்டு. இதில் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். முதல் தாளில் பட்டப் படிப்பு நிலையில் சம்பந்தப்பட்ட பாடங்களில் 200 கேள்விகள் கேட்கப்படும். இதற்கு விடையளிக்க 3 மணி நேரம் வழங்கப்படும்.
முதல் தாளுக்கு 300 மதிப்பெண்கள். இரண்டாம் தாளில் ஜெனரல் ஸ்டடீஸ் பாடத்தில் 100 கேள்விகள் கேட்கப்படும். இதற்கு 200 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதைத் தொடர்ந்து நடத்தப்படும் வாய்மொழித் தேர்வுக்கு 70 மதிப்பெண்கள் வழங்கப்படும். இத்தேர்வில் தாழ்த்தப்பட்டோர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் ஆகியோர் 570-க்கு குறைந்தது 171 மதிப்பெண்களும் மற்றவர்கள் 228 மதிப்பெண்களும் எடுக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப் படிவத்துக்குக் கட்டணம் ரூ.50, தேர்வுக் கட்டணம் ரூ.125. அதாவது மொத்தக் கட்டணம் ரூ.175. ஏற்கெனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நிரந்தரப் பதிவு முறையில் ஏற்கெனவே பதிவு செய்து பதிவுக் கட்டணமாக ரூ.50 செலுத்தி பதிவு எண் பெற்றுள்ளவர்கள், விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டியதில்லை. அவர்கள், தேர்வுக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேக்கிங் மூலம் கட்டணம் செலுத்தலாம். தபால் அலுவலகம் அல்லது இந்தியன் வங்கி மூலமும் கட்டணத்தைச் செலுத்தலாம்.
ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு முன்னதாக புகைப்படத்தையும் கையெழுத்தையும் ஸ்கேன் செய்து புகைப்படத்தை சிடி அல்லது பென் டிரைவில் வைத்துக்கொள்ள வேண்டும். விண்ணப்பதாரருக்கு இ-மெயில் முகவரியும் மொபைல் எண்ணும் இருக்க வேண்டியது அவசியம். ஹால் டிக்கெட், நேர்காணல் அழைப்புக் கடிதம் போன்றவை இ-மெயில் முகவரிக்கே அனுப்பப்படும். விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பித்த பிறகு, அதனை பிரிண்ட் PDF முறையில் சேமித்து வைத்துக் கொள்வதுடன் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்புபவர்கள், ஏப்ரல் 23-ஆம் தேதி இரவு 11.59-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.