Showing posts with label power system. Show all posts
Showing posts with label power system. Show all posts

25 September 2014

என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.13 லட்சம் சம்பளத்தில் வேலை!

மத்திய அரசு நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு  ரூ.13.95 லட்சம் சம்பளத்தில் வேலை வழங்குகிறது. இந்தப் பணியில் சேர விரும்புபவர்கள் ‘கேட்’ தேர்வை எழுத வேண்டும்.

ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் மத்திய அரசு நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் எலெக்ட்ரிக்கல் பிரிவில் எக்ஸிகியூட்டிவ் டிரெயினி பணிகளில் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. இந்தப் பணியில்  சேர விரும்புபவர்கள் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரிக்கல் (பவர்), எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், பவர் சிஸ்டம் என்ஜினீயரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் பிஇ, பிடெக், பிஎஸ்சி (என்ஜினீயரிங்) பட்டப் படிப்புகளில் 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எலெக்ட்ரிக்கலில் ஏஎம்ஐஇ தேர்வில் 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும் இப்பணியில் சேர விண்ணப்பிக்கலாம். தற்போது இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களும் அதாவது 14-8-2015-க்குள் இறுதியாண்டு தேர்வு முடிவுகளைப் பெறுவதற்குத் தகுதியுடைய மாணவர்களும் இப்பணியில் சேர விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் பட்டப்படிப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு, இந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி 28 வயதுவரை இருக்கலாம். கிரீமிலேயர் அல்லாத ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 3 ஆண்டுகளும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களது இடஒதுக்கீட்டுப் பிரிவுக்கு ஏற்ப வழங்கப்படும் சலுகை தவிர, கூடுதலாக வயது வரம்பில் 10 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும். இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் பவர் கிரிட் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்கு வயது வரம்பு இல்லை.

இப்பணியில் சேர விரும்புபவர்கள் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் கேட் தேர்வை (GATE 2015) எழுத வேண்டும். கேட்-2014 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளின் கேட் தேர்வு மதிப்பெண்கள் ஏற்கப்பட மாட்டாது. எனவே, கேட்-2015 தேர்வுக்கு எழுத அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கேட் தேர்வு குறித்த விவரங்களை அதற்கான இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

பவர் கிரிட் நிறுவனத்தில் சேர விரும்புபவர்கள் முதலில் கேட் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். பின்னர், கேட் தேர்வு பதிவு எண்ணுடன் பவர் கிரிட் நிறுவன இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் வருகிற ஜனவரி 15-ஆம் தேதி முதல் பிப்ரவரி 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். குரூப் டிஸ்கஷன் மற்றும் நேர்முகத் தேர்வு மே-ஜூன் வாக்கில் நடைபெறும்.

கேட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குரூப் டிஸ்கஷன் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து நேர்காணல் இருக்கும். கேட் தேர்வுக்கு 85 சதவீத மதிப்பெண்களும் குரூப் டிஸ்கஷனுக்கு 3 சதவீத மதிப்பெண்களும் நேர்முகத் தேர்வுக்கு 12 மதிப்பெண்களும் என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டு தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்களுக்கு மருத்துவப் பரிசோதனையும் இருக்கும். கலர் பிளைண்ட்னஸ் இருக்கக் கூடாது.

தேர்வு செய்யப்படும் மாணவர்கள், பவர் கிரிட் நிறுவனத்தின் மையங்களில் ஓராண்டு பயிற்சி பெற வேண்டும். பிளானிங், டிசைன், என்ஜினீயரிங், குவாலிட்டி அஸ்யூரன்ஸ், இன்ஸ்பெக்ஷன், எரெக்ஷன், டெஸ்டிங் அண்ட் கமிஷனிங் சப்-ஸ்டேஷன், டிரான்ஸ்மிஷன் லைன், பவர் சிஸ்டம் புரடக்டிவ் ரிலேஸ், சப்-ஸ்டேஷன் ஆட்டோமேஷன் சிஸ்டம், பவர் லைன் கேரியர் கம்யூனிக்கேஷன், கண்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் சிஸ்டம், இம்ப்ளிமென்டேஷன் ஆஃப் ஸ்மார்ட் கிரிட், ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட், கன்ஸ்ட்ரக்ஷன், ஆபரேஷன், மெயின்டனன்ஸ்... இப்படி பல்வேறு பணிகள் இருக்கும்.

இப்பணிகளில் சேரத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சிக் காலத்தில் ஆண்டுக்கு ரூ.7.78 லட்சம் வழங்கப்படும். பயிற்சிக்குப் பிறகு பணியில் அமர்த்தப்பட்ட பிறகு ஆண்டுக்கு ரூ.13.95 லட்சம் சம்பளமாக வழங்கப்படும். அத்துடன், இந்த நிறுவனத்தில் பணியில் சேருபவர்களுக்கு வீட்டுக் கடன் வசதி, மருத்துவ வசதி, வருங்கால வைப்பு நிதி, பென்ஷன், கிராஜுட்டி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் கிடைக்கும். இப்பணியில் சேரத் தேர்வு செய்யப்படுபவர்கள், இந்த நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளாவது பணிபுரிய வேண்டும். இது குறித்து, ரூ.1 லட்சத்துக்கான உறுதிமொழிப் பத்திரம் அளிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.50 ஆயிரத்துக்கான உறுதி மொழிப் பத்திரம் அளித்தால் போதும். இந்தப் பணியில் சேரத் தேர்வு செய்யப்படுபவர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியிலோ அல்லது வெளிநாட்டிலோ பணியில் அமர்த்தப்படுவார்கள். நல்ல ஊதியத்தில் சேர விரும்பும் பொறியியல் பட்ட மாணவர்களுக்கு ஏற்ற அரசு நிறுவனப் பணி இது.

விவரங்களுக்கு: www.powergridindia.com