வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் சீர்மரபைச் சேர்ந்த நாடோடி பழங்குடி இன மாணவர்களுக்கும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பாரம்பரியக் கலைஞர்கள் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் மத்திய அரசின் சமூக நீதி அமைச்சகம் கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
வெளிநாடுகளில் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கும். ஆனால், அதற்கு கல்வி உதவித்தொகை கிடைக்குமா என்று ஏங்கி நிற்கும் மாணவர்களும் உண்டு. வங்கிகளில் கடன் உதவி பெறலாம்தான். ஆனால், அதற்கான உத்தரவாதம் கொடுக்க அசையாச் சொத்துக்கு எங்கே போவது? தாழ்த்தப்பட்ட ஏழை மாணவர்களின் நிலைமையைக் கேட்க வேண்டாம். வறுமைச் சூழ்நிலையிலும் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும்கூட அவர்களை கைதூக்கி விட மற்றவர்களை எதிர்பார்க்க வேண்டியது உள்ளது. இந்தச் சூழ்நிலையில், தாழ்த்தப்பட்ட மாணவர்களும் வெளிநாடுகளில் சென்று படிப்பதற்கு கல்வி உதவித்தொகையை மத்திய சமூக நீதி அமைச்சகம் வழங்குகிறது. தாழ்த்தப்பட்ட, சீர்மரபு பழங்குடியினர் மற்றும் நிலமில்லாத விவசாயத் தொழிலாளர்கள், பாரம்பரியக் கலைஞர்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் படிப்பதற்கான கல்வி உதவித்தொகையை மத்திய சமூக நீதி அமைச்சகம் வழங்குகிறது. வெளிநாடுகளில் முதுநிலை பட்டப் படிப்போ அல்லது பிஎச்டி ஆய்வுப் படிப்போ படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.
தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த 54 மாணவர்களுக்கும் சீர்மரபைச் சேர்ந்த நாடோடி பழங்குடியைச் சேர்ந்த 4 மாணவர்களுக்கும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பாரம்பரியக் கலைஞர்கள் குடும்பங்களைச் சேர்ந்த 2 மாணவர்களுக்கும் வெளிநாடுகளில் படிக்க கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
என்ஜினீயரிங் அண்ட் மேனேஜ்மெண்ட் துறையில் படிக்க 20 பேருக்கும் பியூர் சயின்ஸ் அண்ட் அப்ளைடு சயின்ஸ், அக்ரிகல்ச்சுரல் சயின்ஸ் அண்ட் மெடிசின், இன்டர்நேஷனல் காமர்ஸ் அண்ட் அக்கவுண்டிங் ஃபைனான்ஸ், ஹியுமானிடிஸ், சோஷியல் சயின்ஸ் அண்ட் ஃபைன் ஆர்ட்ஸ் ஆகிய ஐந்து பாடப்பிரிவுகளில் தலா 10 மாணவர்கள் வீதம் மொத்தம் 60 மாணவர்கள் இந்த கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்படுவார்கள். இதுதவிர, 5 பேருக்கு வெளிநாட்டுப் பயணத்துக்கான மானியத் தொகை வழங்கப்படும். இந்த வெளிநாட்டுப் பயண மானியத் தொகையைப் பெறுவதற்கு, முதுநிலை பட்டப் படிப்பு படித்து இருக்க வேண்டும். வெளிநாட்டில் முதுநிலைப் படிப்பு, ஆராய்ச்சி அல்லது பயிற்சி பெற மெரிட் ஸ்காலர்ஷிப் பெற்றிருக்க வேண்டும்.
இந்தக் கல்வி உதவித்தொகை பெற என்ன தகுதி வேண்டும்?
பிஎச்டி படிக்க விரும்பும் மாணவர்கள் முதுநிலை பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அனுபவம் மிக்க விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களும் இளநிலை பட்டப் படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். அனுபவம் மிக்க விண்ணப்பதாரர்களுக்கு இந்தக் கல்வி உதவித்தொகை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் மாணவர்கள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.6 லட்சத்துக்கு மேற்படாமல் இருக்க வேண்டும். பணிபுரியும் விண்ணப்பதாரர்கள் வருமான வரித்துறைக்கு சமர்ப்பித்த வருமான வரிக் கணக்கு மற்றும் பணிபுரியும் நிறுவனத்திலிருந்து ஊதியச் சான்றிதழையும் பெற்று அனுப்ப வேண்டும். அத்துடன் ஆட்சேபணை இல்லை (என்.ஓ.சி.) சான்றிதழையும் பெற வேண்டும். ஏற்கெனவே இந்தக் கல்வி உதவித்தொகை பெற்று வெளிநாட்டில் படித்தவர்கள் மீண்டும் படிக்க இந்த உதவித்தொகை பெற முடியாது. அதேசமயம், ஒரே குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் வரை இந்தக் கல்வி உதவித்தொகை பெற அனுமதிக்கப்படுவார்கள்.
வெளிநாடுகளில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் 2013-14 கல்வி ஆண்டிலிருந்து படிக்க அட்மிஷன் பெற்றுள்ளவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். படிக்கச் சேர்ந்துள்ள கல்வி நிறுவனம் தர அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவர்களுக்கு முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் பெறுவதற்கு முயற்சி செய்யும் தகுதியுடைய மாணவர்களுக்கும் இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அந்த மாணவர்களுக்கு இந்தச் சலுகை ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இந்தக் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடைய இரண்டு பேர் சமநிலையில் இருந்தால், வயதில் மூத்தவர் அந்தக் கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்படுவர். வேலை பார்க்கும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து ஆட்சேபணை இல்லை சான்றிதழ் வாங்கி அனுப்ப வேண்டும்.
வெளிநாட்டில் படிக்க எவ்வளவு உதவித்தொகை கிடைக்கும்?
பிஎச்டி படிக்கும் மாணவர்களுக்கு நான்கு ஆண்டு காலத்துக்கும் முதுநிலை பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மூன்று ஆண்டு காலத்துக்கும் இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். பிரிட்டன் தவிர அமெரிக்கா உள்பட மற்ற நாடுகளில் படிப்பதற்கு ஆண்டுக்கு 15,400 டாலர்கள் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். பிரிட்டனில் படிக்கும் மாணவர்களுக்கு 9,900 பிரிட்டிஷ் பவுண்ட் வழங்கப்படும். இந்தக் கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் நாடுகளில் ரிசர்ச் மற்றும் டீச்சிங் அசிஸ்டென்ஷிப் மூலம் சம்பாதித்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
பிரிட்டன் நீங்கலாக அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் படிக்கச் சேரும் மாணவர்கள் புத்தகங்கள், உபகரணங்கள், ஸ்டடி டூர், கருத்தரங்குகளில் பங்கேற்கச் செல்வதற்கான பயணச் செலவு, ஆய்வுக் கட்டுரையை டைப் செய்தல் பைண்ட் செய்தல் ஆகியவற்றுக்கான செலவுகளுக்காக ஆண்டுக்கு 1,500 டாலர் வழங்கப்படும். பிரிட்டனில் படிக்கும் மாணவர்களுக்கு இந்தச் செலவுகளுக்காக ஆண்டுக்கு 1,100 பவுண்ட் வீதம் வழங்கப்படும். விசா கட்டணம், மருத்துவ இன்சூரன்ஸ் கட்டணம், விமானப் பயணக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்கும் உரிய உதவித்தொகை வழங்கப்படும். படிப்பு முடிக்கும் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் மாணவர்கள் இருவரிடம் தலா ரூ.50 ஆயிரத்துக்கான உத்தரவாதப் பத்திரத்தைப் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களிலோ அல்லது கல்வி நிறுவனங்களிலோ அட்மிஷன் பெற வேண்டியது மாணவர்களின் பொறுப்பு. இந்திய அரசின் தூதரக உறவு உள்ள நாடாகவும் அங்குள்ள கல்வி நிறுவனம் தர அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனமாக இருக்க வேண்டியதும் அவசியம். திருமணமான விண்ணப்பதாரர்கள், தாங்கள் படிக்கும் காலத்தில் மனைவி, குழந்தைகளை அழைத்துச் செல்ல விரும்பினால் அதற்கான அனைத்துச் செலவுகளையும் விண்ணப்பதாரர்களே ஏற்றுக்கொள்ள வேண்டியதிருக்கும். படிப்புக் காலத்தில் தவிர்க்க முடியாத அவசரக் காரணங்களால் தாய்நாட்டுக்கு வந்து செல்ல வேண்டியதிருந்தால், சம்பந்தப்பட்ட மாணவர்கள்தான் அதற்கான செலவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். படிப்புக் காலத்தில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாணவர்களின் படிப்பு குறித்து அங்குள்ள இந்தியத் தூதரகம், பல்கலைக்கழகத்திடம் அறிக்கையை கேட்டுப் பெறும். இந்த உதவித்தொகை பெற தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, படிப்பை மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது. எனினும், ஆராய்ச்சிக்கு வழிகாட்டும் பேராசிரியர் அந்தப் பல்கலைக்கழகத்தை விட்டு விட்டுப் போதல் போன்ற நிலைமைகளில் வேறு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பைத் தொடர அனுமதிப்பது குறித்து அந்த நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் முடிவு செய்யும்.
படிப்புக்காலம் முடிந்ததும் தேவையைக் கருத்தில் கொண்டு மேலும் இரண்டு ஆண்டு காலம் அந்த மாணவரை தங்க அனுமதிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்யும். ஆனால், அந்தக் கால கட்டத்துக்கு நிதியுதவி எதுவும் வழங்கப்பட மாட்டாது. இந்தக் கல்வி உதவித்தொகை பெற்று வெளிநாட்டில் படித்துவிட்டு இந்தியா வருபவர்கள், அடுத்த ஐந்து ஆண்டுகள் இந்தியாவிலேயே இருக்க வேண்டும். அரசுப் பணியில் இருந்து கொண்டே இந்தக் கல்வி உதவித்தொகை பெற்று வெளிநாடுகளுக்குப் படிக்கச் சென்றவர்கள், திரும்பி வந்து குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது அரசுப் பணியில் இருக்க வேண்டும்.
இந்த உதவித்தொகை பெற எப்படி விண்ணப்பிப்பது?
இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்டு 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அனைத்து படிப்புச் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், பிறந்த தேதிச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களின் நகல்களை சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும். வெளிநாட்டில் படிக்க பயண உதவித்தொகை கோரும் மாணவர்கள், அதற்கான சான்றிதழ்களின் நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை தில்லியிலுள்ள சமூக நீதி அமைச்சகத்தின் சார்புச் செயலர் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இந்தக் கல்வி உதவித்தொகை பெறுவதற்குத் தகுந்த விண்ணப்பதாரர்களை மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் தேர்வுக் குழு தேர்வு செய்யும். இந்த உதவித்தொகை பெறுவதற்கான தகுதி உள்ளிட்ட விரிவான தகவல்கள் சமூக நீதி அமைச்சகத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.