25 September 2014

அனல் மின்நிலையங்களில் பணிபுரிய ஓராண்டுப் படிப்பு


அனல் மின்நிலையங்களில் வேலை செய்ய விரும்புபவர்கள் நெய்வேலியில் உள்ள நேஷனல் பவர் டிரெயினிங் இன்ஸ்டிட்யூட்டில் ஓராண்டு போஸ்ட் டிப்ளமோ படிப்பைப் படிக்கலாம்.
 
நமது நாட்டில் எந்த அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்தாலும்கூட மின்சாரப் பற்றாக்குறை என்பது தவிர்க்க இயலாததாக உள்ளது. இந்நிலையில், மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. எனவே, இத்துறையில் உரிய பயிற்சி பெற்ற பொறியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
 
இந்த நிலையில் எரிசக்தி துறை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கும் வகையில் நேஷனல் பவர் டிரெயினிங் இன்ஸ்டிட்யூட்டை மத்திய எரிசக்தி அமைச்சகம் தொடங்கியது. 1965-ம் ஆண்டில் நெய்வேலியில் தொடங்கப்பட்ட இந்த பவர் டிரெயினிங் இன்ஸ்டிட்யூட், நாட்டிலேயே முதலாவது பவர் டிரெயினிங் பயிற்சி நிலையமாகும். இந்தப் பயிற்சி நிலையத்தில் தெர்மல் பவர் பிளாண்ட் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் போஸ்ட் டிப்ளமோ படிப்பைப் படிக்கலாம். 
 
நமது எரிசக்தித் துறைக்குத் தேவையான தொழில்நுட்பப் பணியாளர்களை உருவாக்குவதற்கு ஏற்ற வகையில் இந்த ஓராண்டு படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
இந்தப் படிப்பின் முதல் இரண்டு வாரங்கள் அனைத்து மாணவர்களுக்கும் இணைப்புப் பாலமாக வகுப்புகள் நடத்தப்படும். அதாவது, மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பாடத்திலும் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பாடத்திலும் அறிமுகப் பாடங்கள் இருக்கும்.
 
மாணவர்களுக்கு வகுப்பறையில் பாடங்கள்  தவிர, அனல் மின்நிலையங்களில் நேர்முகப் பயிற்சி பெறவும் வாய்ப்பளிக்கப்படும். இந்தப் போஸ்ட் டிப்ளமோ பயிற்சி பெறுபவர்கள், அனல் மின்நிலையங்களில் பணிபுரிவதற்கேற்ற ஓ அண்ட் எம் காம்பிட்டன்சி சான்றிதழைப் பெற தகுதி பெற முடியும். இந்தப் படிப்பில் சேர்ந்து படித்து முடித்த மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.
 
இந்த ஓராண்டு போஸ்ட் டிப்ளமோ படிப்பில் 77 இடங்கள் உள்ளன. இதில் 25 சதவீத இடங்கள் ஸ்பான்சர் செய்யப்படும் மாணவர்களுக்கானவை. அட்மிஷனில் மத்திய அரசின் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படும். மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல் பாடப்பிரிவுகளில் டிப்ளமோ பெற்ற மாணவர்கள் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.
 
விண்ணப்பக் கட்டணம் ரூ.700. மாணவர்களின் பெயர், தந்தையின் பெயர், முகவரி, தொலைபேசி எண், வயது, கல்வித் தகுதி, அனுபவம் உள்ளிட்ட விவரங்களை (விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளபடி) தனி காகிதத்தில் எழுதி, புகைப்படத்துடன் விண்ணப்பக் கட்டணத்துக்கான டிமாண்ட் டிராப்ட்டையும் இணைத்து இம்மாதம் 29-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். தேவையான சான்றிதழ்களின் நகல்களுக்கு சான்றொப்பம் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டியதிருக்கும்.
 
இப்படிப்புக்குக் கட்டணம் ரூ.1.35 லட்சம். அத்துடன் சேவைக் கட்டணமும் உண்டு. படிப்புக் கட்டணத்தை இரண்டு தவணைகளில் செலுத்தலாம். இப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு தங்கும் விடுதி வசதியும் உண்டு. முன்னால் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விடுதியில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும். 
 
நெய்வேலியில் உள்ள பவர் டிரெயினிங் இன்ஸ்டிட்யூட்டில் போஸ்ட் டிப்ளமோ படிப்பில் சேர விரும்பும் டிப்ளமோ மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
 
விவரங்களுக்கு: www.nptineyveli.in