25 September 2014

ஐஏஎஸ் தேர்வு: அரசு இலவசப் பயிற்சி!

தமிழக அரசு நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு இலவசப் பயிற்சியில் சேர விரும்பும் பட்டதாரி மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தின்கீழ் இயங்கும் அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையம், இலவசப் பயிற்சியை அளித்து வருகிறது. இங்கு இலவசப் பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு முதல் 200-லிருந்து 225 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆதி திராவிடர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 92 இடங்களும், அருந்ததியருக்கு 18 இடங்களும், பழங்குடியினருக்கு 3 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 40 இடங்களும், பிற்படுத்தப்பட்டோருக்கு 54 இடங்களும், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 7 இடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 7 இடங்களும், பொதுப் பிரிவினருக்கு 4 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

முழு நேரப் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு இலவச தங்கும் விடுதி வசதியும் செய்து தரப்படுகிறது. பெண்களுக்கென தனி விடுதி வசதியும் உண்டு. தரமான, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், 21 ஆயிரம் புத்தகங்கள் கொண்ட நூலகம், 24 மணி நேரம் இணையதள வசதி, நேர்த்தியான வகுப்பறை... இப்படி மாணவர்களுக்கேற்ற பல்வேறு வசதிகள் இங்கு உள்ளன. அத்துடன், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் வழிகாட்டுதல்கள், தன்முனைப்புப் பயிற்சிகள், ஊக்குவிப்புப் பயிற்சிகள், பாடவாரியான பயிற்சிகள், குழு விவாதம்... இப்படி மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இங்கு பயிற்சி பெற விரும்புவோர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவராக இருக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 1.8.2015 நிலவரப்படி விண்ணப்பதாரர், குறைந்தபட்சம் 21 வயது ஆனவராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 32 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்-முஸ்லிம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.

முழுநேரப் பயிற்சியில் சேர தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு உணவு கட்டணம், தங்கும் விடுதிக் கட்டணம், படிப்புக் கட்டணம் எதுவும் இல்லை. ஆனால், இப்பயிற்சியில் சேரத் தேர்ந்தெடுக்கப்படும் பொதுப்பிரிவினர் மட்டும் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அனைத்துப் பிரிவினரும் நூலக காப்புக் கட்டணமாக ரூ. 3 ஆயிரம் செலுத்த வேண்டும். பயிற்சியின் முடிவில் இந்த காப்புக் கட்டணம் திருப்பி தரப்படும். முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெறும் மாணவருக்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று மாதங்களுக்கும், நேர்காணல் தேர்வுக்கு தகுதி பெறுபவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும் அரசால் வழங்கப்படும்.

இங்கு பகுதி நேரப் பயிற்சி பெறுவதற்கு 100 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இப்பயிற்சி பெறுவதற்கு பயிற்சிக் கட்டணமாக ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும். நூலகக் காப்புத்தொகையாக ரூ. 3 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்தத் தொகை பயிற்சியின் முடிவில் திருப்பித் தரப்படும். பகுதி நேரப் பயிற்சி வகுப்புகளில் சேருவோருக்கு, வாராந்திர நாட்களில் மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு நேரமாகவும் பயிற்சி அளிக்கப்படும். இவர்களுக்கு உணவு, தங்கும் விடுதி வசதி வழங்கப்பட மாட்டாது.

முழு நேரப் பயிற்சியிலும், பகுதி நேரப் பயிற்சியிலும் சேர விரும்பும் மாணவர்கள் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் நடத்தும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இந்த நுழைவுத் தேர்வு நவம்பர் 23-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம், வேலூர், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், தர்மபுரி, சிவகங்கை ஆகிய ஊர்களில் இத்தேர்வை எழுதலாம். இந்த இரண்டு மணி நேரத் தேர்வில் அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். இந்திய வரலாறு மற்றும் தேசிய இயக்கம், இந்திய மற்றும் உலகப் புவியியல், இந்திய அரசியலமைப்பு மற்றும் நிர்வாக முறை, பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி, பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், சுற்றுப்புறச் சூழ்நிலை தொடர்பான பொதுவிவாதங்கள், பருவநிலை மாற்றங்கள் மற்றும் உயிரினப் பரிணாம வளர்ச்சி, அடிப்படை எண் அறிவு, பகுத்தறியும் திறன், பொதுப்புத்திக் கூர்மை மற்றும் புரிந்துகொள்ளும் திறன் ஆகியவற்றிலிருந்து, கேள்விகள் கேட்கப்படும்.

ஆங்கில மொழியில் 100 கேள்விகளைக் கொண்ட இந்த நுழைவுத் தேர்வுக்கு மொத்தம் 200 மதிப்பெண்கள். நுழைவுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

இத்தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள், அலுவலக வேலை நாட்களில் (காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை) தங்களது ஜாதி, வயது மற்றும் பட்டப்படிப்புச் சான்றுகளின் நகல்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பித்து, உரிய விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களிடமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். சென்னையைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் சென்னையில் உள்ள பயிற்சி மைய வளாகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி: 14.10.2014

விவரங்களுக்கு: http://civilservicecoaching.com

தொலைபேசி: 044 – 24621475
 

தேர்ச்சி எவ்வளவு?

அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று சிவில் சர்வீஸ் பணிகளில் சேர்ந்தவர்கள் விவரம்:

    2011 - 47 பேர்
    2012 - 49 பேர்
    2013 - 57 பேர்