Pages
- About Us
- Library Services
- Library Working Hours
- Rules and Regulations
- Collections
- E-Resources
- Open Access Dictionaries/Encyclopedia
- Open Access E-Books
- Open Course Wears
- Open Access IR
- Free IEEE Journals
- Open Access E-Journals
- Open E-Theses
- News Papers
- Ongoing Research Projects
- Centre For Research
- Conferences & Workshops
- Discussion Forums
- BIT Media Library
- NPTEL Video Lectures
- BIT-Library Youtube Channel
- E-Learning Lectures
- UPSC jobs
- TNPSC Jobs
- Educational Loans & Scholarships
- Engineering Calculator
- Photogallery
- GATE preparation Apps & Papers
- E-Question Bank
- Staff Profile
- Contact Address
8 May 2014
First Graduate Concession : முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கான படிப்புக் கட்டணச் சலுகை
அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள், சட்டக்கல்லூரிகளில் ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கை மூலம் அட்மிஷன் பெறும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தமிழக அரசே வழங்கி வருகிறது. இதுவரை பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொழிற் கல்வி படிப்புகளைப் படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் ஜாதி வேறுபாடின்றி இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது .
கல்விக் கட்டணம் என்பது அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்கல்லூரிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்படும் கட்டணத்தையும் தனியார் சுயநிதி தொழிற்கல்லூரிகளில் கட்டண நிர்ணயத்துக்காக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணத்தையும் பல்கலைக்கழகங்கள் நடத்தும் பாடப்பிரிவுகளுக்கு அந்தப் பல்கலைக்கழகங்கள் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் குறிக்கும்.
ஒற்றைச்சாளர முறை மூலம் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து படிக்கும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கும் இந்தக் கல்விக் கட்டணச் சலுகை வழங்கப்படும். விண்ணப்பத்துடன் வழங்கப்படும் விளக்கத் தகவல் குறிப்பேட்டில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரிப் படிவத்தில் உள்ளபடி, வருவாய்த் துறையின் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தகுதிக்குக் குறையாத அலுவலரிடம் சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும். ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பிக்கும் போதே இந்தச் சான்றிதழையும் வைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
குடும்பத்தில் அப்பா, அம்மா, அவர்களது பெற்றோர், மாணவியின் சகோதர, சகோதரிகள் உள்ளிட்டவர்கள் இதுவரை பட்டப் படிப்பு படிக்கவில்லை என்பதை உத்தரவாதப்படுத்தும் வகையில் மாணவரும் பெற்றோர் அல்லது பாதுகாவலரும் குறிப்பிட்ட படிவத்தில் உறுதி மொழி அளித்து கையெழுத்திட வேண்டும். இந்தப் படிவங்களை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளிலும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சுய ஆதரவுப் படிப்புகளிலும் (செல்ஃப் சப்போர்ட்டிங் கோர்ஸ்) சேரும் மாணவர்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின் முதல் தலைமுறை பட்டதாரிக்கான கல்விக் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கல்லூரியிலும் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் படிக்கும் 5 சதவீத மாணவர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படும். இந்த உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்குக் குறைவாக இருக்க வேண்டியது அவசியம்.
இந்தச் சலுகை பெறும் மாணவர்கள், முதலில் தேர்வு செய்த கல்வி நிறுவனத்தையோ, படிப்பையோ மாற்ற அனுமதிக்கப்பட மாட்டாது. ஏஐசிடிஇ வழங்கும் படிப்புக் கட்டணச் சலுகை பெற விரும்புபவர்கள் அதற்கான விருப்பத்தையும் விண்ணப்பத்தில் குறிப்பிடவேண்டும்.
2 May 2014
50 ரூபாயில் ஹிந்தி படிக்கலாம்!
ஹிந்தி பேசாத மாநிலங்களில் பிறந்தவர்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் ஹிந்தியில் சான்றிதழ் படிப்பை கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கிறது மத்திய ஹிந்தி இயக்ககம்
ஹிந்தி பேசாத மாநிலங்களில் பிறந்தவர்களும், வெளிநாட்டில் செட்டிலாகிவிட்ட இந்தியர்களும், ஹிந்தி கற்றுக்கொள்ள விரும்பும் வெளிநாட்டினரும், ஹிந்தி மொழியை கற்றுக்கொள்வதற்கு வசதியாக புதுதில்லியிலுள்ள மத்திய ஹிந்தி இயக்ககம், தொலைநிலைக் கல்வி மூலம் ஹிந்தி மொழியைக் கற்றுத் தருகிறது.
ஹிந்தி மொழியில் சான்றிதழ் படிப்பு, டிப்ளமோ படிப்பு போன்ற படிப்புகளை ஆங்கிலம், தமிழ், மலையாளம் போன்ற மொழிகள் வாயிலாக கற்றுக் கொள்ளலாம். ஓராண்டு காலப் படிப்பு இது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதல் இப்படிப்பு துவங்கும்.
கல்வித் தகுதி: இந்தியர்கள் மற்றும் இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள், ஹிந்தி மொழியில் சான்றிதழ் படிப்பை படிக்க முடியும். 15 வயதுக்கு மேற்பட்ட, ஹிந்தி மொழி தாய்மொழியாக இல்லாதவர்கள் இப்படிப்பில் சேரலாம். இந்தியர்களின் குழந்தைகள் அல்லது இந்தியாவில் நிரந்தரமாகத் தங்கியிருப்பவர்களின் குழந்தைகள் குறைந்தபட்சம் 10 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தால், அவர்களும் இந்த சான்றிதழ் படிப்பில் சேரலாம்.
ஹிந்தியில் டிப்ளமோ படிக்க விரும்புபவர்கள், மேற்கூறிய தகுதிகளுடன், மத்திய ஹிந்தி இயக்ககத்தில் ஹிந்தி மொழியில் சான்றிதழ் படிப்பு படித்தவர்களாக இருக்கவேண்டும்.
இந்தியாவில் வசிப்பவர்கள், சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புக்கான கட்டணமாக தலா ரூ.50 செலுத்தவேண்டும். கட்டணத்தை வங்கி வரைவோலை அல்லது இந்தியன் போஸ்டல் ஆர்டராக Director, Central Hindi Directorate, Ramakrishna Puram, New Delhi – 110066 என்கிற முகவரிக்கு புதுதில்லியில் செலுத்தத்தக்க வகையில் எடுத்து அனுப்பவேண்டும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கான கட்டணம் 50 அமெரிக்க டாலர்கள்.
சான்றிதழ், டிப்ளமோ படிப்புகளுக்குப் பிறகு, இந்தியில் அட்வான்ஸ்ட் டிப்ளமோ படிக்க விரும்புபவர்கள், 17 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கவேண்டும். இப்படிப்பை படிக்க விரும்பும் இந்தியாவில் வசிப்பவர்களுக்கான கட்டணம் ரூ.200. வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கான கட்டணம் 200 டாலர்கள் அல்லது அதற்குச் சமமான தொகை.
மாதிரி விண்ணப்பப் படிவம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் சேர விரும்பும் படிப்பு, எந்த மீடியத்தில் படிக்க விரும்புகிறார்கள் போன்ற விவரங்களுடன், தங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி, பெற்றோரின் பெயர், எந்த நாடு, தாய்மொழி, கல்வித் தகுதி, பாலினம், ஹிந்தி பற்றிய அறிவு, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய முறை போன்ற விவரங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரியக் கட்டணத்துடன் வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விவரங்களுக்கு: www.hindinideshalaya.nic.in
பிஇ கவுன்சலிங் : சான்றிதழ்களை தயாராக வைத்திருங்கள்!
கவுன்சலிங் மூலம் பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் பிளஸ் டூ படித்த மாணவர்கள் எந்தெந்த சான்றிதழ்களை எந்தப் படிவத்தில் பெற வேண்டும் என்பது குறித்த விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு மே மாதம் முதல் வாரம் வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சலிங் மூலம் பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் தேவையான சான்றிதழ்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக எந்தெந்தச் சான்றிதழ்களை யாரிடமிருந்து பெற வேண்டும் என்பது குறித்தும் அந்தச் சான்றிதழ்களின் மாதிரி குறித்தும் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சில நேரங்களில் சான்றிதழ் பெறுவதற்கு காலதாமதம் ஏற்படும் என்பதால், மாணவர்கள் கடைசி நேரப் பரபரப்புக்கு ஆளாக நேரிடும். அதைத் தவிர்க்கவே இந்தத் தகவல்கள் முன்னதாக வெளியிடப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் இடம் பெற விரும்பும் மாணவர்கள் தமிழகத்தை இருப்பிடமாகக் கொண்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்திருந்தால் இருப்பிடச் சான்றிதழ் தேவையில்லை. அதாவது, 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் படிக்காத மாணவர்கள் இருப்பிடச் சான்றிதழ் (நேட்டிவிட்டி சர்டிபிகேட்) பெற வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள படிவத்தில் உள்ளது போல படிவத்தில் பூர்த்தி செய்து கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர், தாசில்தார் ஆகியோரின் கையெழுத்துக்களுடன் இருப்பிடச் சான்றிதழை பெற வேண்டும். சிறப்பு தாசில்தார், துணைத் தாசில்தார் போன்றவர்களிடமிருந்து பெறப்படும் சான்றிதழ் ஏற்கப்பட மாட்டாது என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுவரை பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கட்டணச் சலுகை பெற விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பப் படிவமும் உறுதிமொழிப் படிவமும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் படிவத்தில் உள்ளபடி, முதல் தலைமுறை பட்டதாரி என்பதற்கும் கட்டணச் சலுகை பெறத் தகுதியுடையவர் என்பதற்குமான சான்றிதழை தலைமை நிலைய துணைத் தாசில்தாரிடமிருந்து பெற வேண்டும். உறுதிமொழி படிவத்தில் மாணவரும் பெற்றோரும் கையெழுத்திட வேண்டும்.
முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் போன்று சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் இடம் பெற விரும்பும் மாணவர்களுக்கான சான்றிதழ் மாதிரிகளும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அதனைப் பார்த்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இதேபோல, ஜாதிச் சான்றிதழ்கள் மாணவர்களிடம் ஏற்கெனவே இருக்கும். கல்விக்கடன் பெறுவதற்கு வருவாய் சான்றிதழ் தேவைப்படலாம். இதுபோல தேவைப்படும் சான்றிதழ்களைக் கருத்தில் கொண்டு அவற்றை வாங்கி வைத்துக் கொள்வதில் மாணவர்கள் இப்போதே கவனம் செலுத்த வேண்டும்.
கல்லூரிகளில் படிக்க வங்கிகளில் கல்விக்கடன் பெறுவது எப்படி?
பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் சேர்ந்து உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அதேசமயம் உயர்கல்வி படிப்பதற்கான செலவுகளும் அதிகரித்து வருகின்றன. கல்வி நிறுவனங்களில் படிக்க இடம் கிடைத்தும் பணம் இல்லாத காரணத்தினால் மாணவர்கள் படிப்பை விட்டு விடக் கூடாது என்பதற்காக வங்கிகள் மூலம் மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் நாட்டில் இதுவரை 25 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். அவர்களுக்காக பொதுத் துறை வங்கிகள் மூலம் ரூ.55 ஆயிரம் கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
பிளஸ் டூ தேர்வு முடித்து கல்லூரியில் காலடி எடுத்து வைக்கக் காத்திருக்கும் மாணவர்கள் உயர்கல்வி படிப்புச் செலவுக்கு என்ன செய்வது என்று யோசிக்கலாம். அந்த மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் வங்கிகள் மூலம் கல்விக் கடன் பெறுவது எப்படி என்கிற விவரங்களை தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. வரும் கல்வி ஆண்டில் உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் கல்விக் கடன் பெறுவதற்கான ஆயத்தப் பணிகளை இப்போதே தொடங்கி விடுவது நல்லது. இதுகுறித்து மாணவர்களுக்கு இயல்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் இதோ...
எந்தெந்தப் படிப்புகளில் சேருவதற்குக் கல்விக்கடன் வழங்கப்படுகிறது?
பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் போன்ற அரசு அமைப்புகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட இளநிலை பட்டப் படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, முதுநிலை டிப்ளமோ படிப்புகளிலும் சேர்ந்துள்ளவர்கள் கல்விக் கடன் கேட்டு பொதுத் துறை வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். ஐசிடபிள்யூஏ, சிஏ, சிஎஃப்ஏ போன்ற படிப்புகளில் சேருபவர்களும் ஐஐஎம், ஐஐடி, ஐஐஎஸ்சி, எக்ஸ்எல்ஆர்ஐ, நிப்ட், நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன் போன்ற கல்வி நிறுவனங்கள் நடத்தும் படிப்புகளில் சேருபவர்களும் கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். இந்திய நர்சிங் கவுன்சில், டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஏவியேஷன், டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஷிப்பிங் போன்ற அரசு அங்கீகார அமைப்புகளின் அனுமதியுடன் நடத்தப்படும் நர்சிங் டிப்ளமோ அல்லது நர்சிங் பட்டப் படிப்பு, பைலட் டிரெயினிங், ஷிப்பிங் போன்ற பட்ட மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேருபவர்களும் கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். சிறந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் நடத்தும் அங்கீகாரம் பெற்ற படிப்புகளில் சேருபவர்களுக்கும் கல்விக் கடன் கிடைக்கும். இதுதவிர, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய படிப்புகளுக்கும் கல்விக் கடன் வழங்குவது குறித்து வங்கிகள் பரிசீலனை செய்யும். அத்துடன், வெளிநாடுகளில் உள்ள தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் படிக்க தேர்வு செய்யப்பட்ட மாணவர்களும் தங்களது படிப்புச் செலவுகளுக்காக வங்கிகளில் கல்விக் கடன் பெறலாம்.
பத்தாம் வகுப்பு படித்து விட்டு தொழில் பயிற்சி மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்குக் கல்விக் கடன் கிடைக்குமா?
பத்தாம் வகுப்பு படித்து விட்டு பாலிடெக்னிக், ஐடிஐ போன்ற கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ படிப்புகளில் சேரும் மாணவர்களுக்குக் கல்விக் கடன் கிடைக்கும். அதாவது, பத்தாம் வகுப்பு படித்து விட்டு தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சி படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கும் வங்கிகளில் கல்விக் கடன் பெறத் தனித்திட்டம் உள்ளது. இந்த மாணவர்களுக்கு கல்விக் கடன் வட்டி சலுகை மட்டும் கிடைக்காது.
கல்விக் கடனாக எவ்வளவு வழங்கப்படும்? எதற்கெல்லாம் கல்விக் கடன் கேட்க முடியும்?
இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் படிப்பதற்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கல்விக் கடன் பெறலாம். வெளிநாடுகளில் படிப்பதற்கு ரூ.20 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படுகிறது. கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம், தேர்வுக் கட்டணம், நூலகம் மற்றும் லேபரட்டரி கட்டணம், புத்தகங்கள், லேப்டாப், புராஜக்ட், ஸ்டடி டூர் போன்ற பல்வேறு படிப்பு தொடர்பான செலவுகளுக்குக் கல்விக் கடன் பெறலாம். வெளிநாடு செல்லும் மாணவர்களின் போக்குவரத்துச் செலவுக்கும் கல்விக் கடன் பெறலாம். நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் பெற்றவர்களுக்கு அரசு அமைப்புகள் நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணத்தின்படியே கல்விக் கடன் பெற முடியும்.
கல்விக் கடன் பெறுவதற்கு வங்கிகளில் முன் பணம் (மார்ஜின் மணி) செலுத்த வேண்டுமா?
ரூ.4 லட்சம் வரை கல்விக் கடன் பெறுவதற்கு வங்கிகளில் முன்பணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. இந்தியாவில் படிக்க ரூ.4 லட்சத்துக்கு மேல் கல்விக் கடன் வாங்கினால் கடன் தொகையில் 5 சதவீதமும் வெளிநாடுகளில் படிக்க ரூ.4 லட்சத்துக்கு மேல் கல்விக் கடன் வாங்கினால் கடன் தொகையில் 15 சதவீதமும் முன்பணமாக மாணவர்கள் செலுத்த வேண்டியதிருக்கும்.
கல்விக் கடன் பெறுவதற்கு மாணவர்கள் ஜாமீனோ அல்லது உத்தரவாதமோ அளிக்க வேண்டுமா?
ரூ.4 லட்சம் வரை கல்விக் கடன் பெறுவதற்கு ஜாமீனோ, உத்தரவாதமோ தேவையில்லை. ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.7.5 லட்சம் வரை கடன் வாங்கினால் மூன்றாம் நபர் ஜாமீன் தேவைப்படும். ரூ.7.5 லட்சத்துக்கு மேல் கல்விக் கடன் பெற்றால், சொத்து உத்தரவாதம் தேவைப்படும். அனைத்துக் கடன் ஆவணங்களிலும் மாணவருடன் பெற்றோர் உத்தரவாதம் அளித்துக் கையெழுத்திட வேண்டியதிருக்கும்.
கல்விக் கடனுக்கு வட்டி எவ்வளவு வசூலிக்கப்படும்?
‘பேஸ் ரேட்’ அடிப்படையில் வங்கிகள் கல்விக் கடனுக்கான வட்டியை நிர்ணயிக்கின்றன. வங்கிகளைப் பொருத்து வட்டி விகிதம் வேறுபடும். சுமார் 12 சதவீதத்திலிருந்து 14 சதவீதம் வரை வட்டி இருக்கும். கல்விக் கடன் பெறும் மாணவர்கள் படிக்கின்ற காலத்திலேயே வட்டியைச் செலுத்த வேண்டும் என்று வங்கிகள் மாணவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது. படித்து முடிக்கும் வரை வட்டியை செலுத்த இயலாது என்பது குறித்து மாணவர்களே வங்கிகளிடம் எழுதிக் கொடுத்து விடலாம்.
கல்விக் கடனுக்கு அரசு வழங்கும் வட்டி சலுகை யாருக்குக் கிடைக்கும்?
கல்விக் கடன் வழங்குவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை இந்தியன் வங்கிகள் சங்கம் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. அந்தத் திட்டத்தின் கீழ், பொதுத் துறை வங்கிகளில் கல்விக் கடன் பெறுபவர்களுக்குத்தான் மத்திய அரசின் கல்விக் கடன் வட்டி சலுகை கிடைக்கும். இந்த விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டும் மாணவர்களுக்கு வங்கிகள் கல்விக் கடன் வழங்குகின்றன. அதன்படி, கல்விக் கடன் பெறும் மாணவர்களுக்கு மத்திய அரசின் வட்டி சலுகை கிடைக்காது.
அதேபோல, கலை, அறிவியல் படிப்புகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்விக் கடன் வட்டி சலுகை கிடைக்காது. தொழில் மற்றும் தொழில்நுட்ப (புரபஷனல் அண்ட் டெக்னிக்கல்) படிப்புகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு இந்தச் சலுகை கிடைக்கும். அதாவது. ரூ.4.5 லட்சத்துக்குக் குறைவான வருவாய் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய அரசின் 100 சதவீத வட்டி சலுகை வழங்கப்படும். படிப்புக் காலம் முடிந்து அதிகபட்சம் ஓராண்டு வரை வட்டி சலுகை கிடைக்கும். வேலை கிடைத்து அதிகபட்சம் ஆறு மாதம் வரை இந்த சலுகையைப் பெறலாம். அதாவது, படித்து முடித்ததிலிருந்து அதிகபட்சம் ஓராண்டு வரைதான் இந்தச் சலுகை உண்டு. கல்விக் கடனுக்கான வட்டி சலுகை பெற விரும்பும் மாணவர்கள், தங்களது பெற்றோரின் வருமானம் குறித்து தாசில்தாரிடம் வருவாய் சான்றிதழை பெற்று கல்விக் கடன் பெறும் வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்விக் கடனை எவ்வளவு காலத்துக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்?
படிப்பை முடித்த ஓராண்டிலிருந்து அல்லது வேலைக்குப் போய் 6 மாதங்களிலிருந்து கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்க வேண்டும். ரூ.7.5 லட்சம் வரை கல்விக் கடன் வாங்குபவர்கள், பத்து ஆண்டுகளுக்குள் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். ரூ.7.5 லட்சத்துக்கு மேல் கல்விக் கடன் பெறுபவர்கள் 15 ஆண்டுகளுக்குள் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். வங்கிக் கடன் வாங்கிப் படித்து முடித்த மாணவர்கள், வேலையில் சேர்ந்தாலும்கூட, தொடக்கத்தில் குறைந்த ஊதியம் பெறும் மாணவர்கள் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த சிரமப்படுவார்கள். அதனால், ‘டெலஸ்கோப்பிக்’ முறையை இந்திய வங்கிகள் சங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில், தொடக்கத்தில் குறைந்தபட்சத் தொகையை செலுத்தலாம். பின்னர், படிப்படியாக, திருப்பிச் செலுத்தும் தொகையை அதிகரித்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். இதுகுறித்து, வங்கி அதிகாரிகளிடம் பேசி மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கல்விக் கடன் கிடைக்குமா?
ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் உயர்கல்வி படித்தாலும்கூட, அவர்கள் அனைவரும் படிக்க வங்கிகளில் கல்விக் கடன் பெறலாம். ஒரு குடும்பத்தில் ஒரு மாணவருக்கு கல்விக் கடன் வாங்கினாலும்கூட, அந்த மாணவரின் சகோதர, சகோதரிகள் படிக்க வங்கிகள் கல்விக் கடன் வழங்கத் தடையில்லை. கல்விக் கடன் பெறுவதற்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. மாணவர் மைனராக இருந்தால் பெற்றோர்கள் உறுதியளிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு ரூ. 2 லட்சமும் இரண்டாவது மாணவருக்கு ரூ. 3 லட்சமும் கல்விக் கடன் வாங்குவதாக வைத்துக் கொள்வோம். அந்தக் குடும்பத்துக்கான மொத்தக் கல்விக் கடன் தொகையைக் கணக்கிட்டு அதற்கேற்ற ஜாமீனை மாணவர்களின் பெற்றோர்கள் அளிக்க வேண்டும். அதேசமயம், அந்த மாணவர்கள் கல்விக் கடன் வட்டி சலுகை பெற தகுதி பெற்றிருந்தால் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் அந்தச் சலுகை கிடைக்கும். அதற்குத் தடை எதுவும் இல்லை.
நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கடன் கிடைக்குமா?
நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது கல்விக் கடன் வழங்குவதற்கான விதி. நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நேரடியாக சேரும் மாணவர்கள், இந்தியன் வங்கிகள் சங்கத்தின் திட்டத்தின் கீழ் வங்கிகளிலிருந்து கல்விக் கடன் பெற முடியாது. நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர விரும்பும் மாணவர்களும் அரசு ஓதுக்கீட்டின் கீழ் தாங்கள் விரும்பிய கல்லூரியில் விரும்பிய படிப்பில் இடம் கிடைக்கவில்லை என்பதைக் காட்ட வேண்டும். அதனால், அரசு நடத்தும் கவுன்சலிங்கில் பங்கேற்று கிடைக்கின்ற கல்லூரியையும் படிப்பையும் தேர்வு செய்ய வேண்டும். பிறகு, தாங்கள் விரும்பும் கல்லூரியில் விரும்பிய படிப்பில் இடம் கிடைக்காததைக் காரணம் காட்டி, அந்த அட்மிஷனை சரண்டர் செய்து விட வேண்டும். பிறகுதான் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர வேண்டும். அப்போதுதான் இந்தியன் வங்கிகள் சங்கத்தின் திட்டத்தின் கீழ் கல்விக் கடன் கிடைக்கும். அப்போதுதான் வட்டி சலுகையும் கிடைக்கும். அப்படி இல்லாவிட்டால், இந்தியன் வங்கிகள் சங்கத்தின் திட்டம் அல்லாத நடைமுறையில் வங்கிகளை அணுகி கல்விக் கடன் பெற முயற்சிக்கலாம். இந்தக் கடனுக்கு மத்திய அரசின் வட்டி சலுகை கிடைக்காது.
நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு, அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற அமைப்பு நிர்ணயம் செய்த கட்டணத்தைக் கல்விக் கடனாகப் பெற முடியும். அத்துடன், தங்குமிடம், உணவு, லேப்டாப் போன்ற பல்வேறு செலவுகளுக்கு ஆகும் பணத்தையும் கல்விக் கடனாகப் பெறலாம்.
வங்கிக் கல்விக் கடன் பெறுவதற்கு விண்ணப்பிப்பது எப்படி?
வங்கிகளில் கல்விக் கடன் பெறுவதற்கு இந்தியப் பிரஜையாக இருக்க வேண்டியது அவசியம். வங்கிகளில் கல்விக் கடன் பெறுவதற்கு ஆண்டு முழுவதும் விண்ணப்பிக்கலாம். இந்த வங்கியில்தான் கல்விக் கடன் பெற முடியும் என்கிற விதி எதுவும் இல்லை. அந்த ஊரில் உள்ள எந்த வங்கியிலும் கல்விக் கடன் பெற அணுகலாம். கல்வி நிறுவனத்தில் அட்மிஷன் பெறுவதற்கு முன்னதாக கல்விக் கடன் பெற விண்ணப்பிக்க முடியாது. வங்கிகளில் கல்விக் கடன் பெறுவதற்கு முன்னதாக அங்கீகரிக்கப்பட்டக் கல்வி நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவில் அட்மிஷன் வாங்கி இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திடமிருந்து படிப்புக்கு ஆகும் செலவு குறித்த எஸ்டிமேட் தேவை. கல்விக்கடன் கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். வங்கிகளில் விண்ணப்பங்களைப் பெற்று நேரிலும் சமர்ப்பிக்கலாம். நேரில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது, விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டதற்கான ரசீதை சம்பந்தப்பட்ட வங்கிக் கிளையிலிருந்து பெற வேண்டும். ரேஷன் கார்டு, பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டியதிருக்கும். உத்தரவாதம் கொடுக்க வேண்டியதிருந்தால் அதற்கான ஆவணங்களும் தேவைப்படும். வங்கிகளுக்கு நேரில் சென்று எந்தெந்த ஆவணங்கள் தேவைப்படுகின்றன என்பதை நேரில் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். வங்கிகளின் இணைய தளத்திலும் இதுகுறித்த விவரங்கள் உள்ளன.
வங்கிகளில் கல்விக் கடன் எத்தனை நாள்களில் கிடைக்கும்?
மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்கு பரிசீலனை செய்ய 15 நாட்கள் முதல் ஒருமாதம் வரை வங்கிக் கிளைகள் கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். கல்விக் கடன் கிடையாது என்று நிராகரிக்க அந்த வங்கிக் கிளை அதிகாரிக்கு அதிகாரம் இல்லை. கல்விக் கடன் கேட்டும் மாணவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணத்தை உயர் அதிகாரிகளின் ஒப்புதல் பெற்று எழுத்து மூலம் விண்ணப்பதாரருக்குத் தெரிவிக்க வேண்டும். உரிய ஆவணங்களுடன் கொடுக்கப்படும் கல்விக் கடன் மனுவை நிராகரிக்க வங்கிகளுக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. கல்விக் கடன் வழங்குவதற்கான இலக்கு முடிந்து விட்டது என்பது போன்ற காரணங்களை வங்கி அதிகாரிகள் கூறி வங்கிக் கடன் இல்லை என்று கூற முடியாது. சில வங்கிகளில் கல்விக் கடன் விண்ணப்பம் இல்லை என்று கூறலாம். அது சரியல்ல. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, உரிய காலத்தில் விண்ணப்பம் பரிசீலனை செய்யப்படவில்லை என்றால் உயர் அதிகாரிகளிடம் முறையிடலாம். வங்கித் தலைவருக்குக் கடிதம் எழுதியும் நிவாரணம் பெறலாம். ரிசர்வ் வங்கியிலும் மாணவர் கல்விக் கடன் குறை தீர்ப்புக்குத் தனிப்பிரிவு உள்ளது. அங்கும் முறையிடலாம்.
உதவிக் கரம்
“வங்கியில் கல்விக் கடன் பெறுவது தொடர்பான பல்வேறு முக்கியத் தகவல்கள் எஜுக்கேஷன் டாஸ்க் ஃபோர்ஸ் இணையதளத்தில் உள்ளன. கல்விக் கடன் பெறுவதில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு எஜுக்கேஷன் டாஸ்க் ஃபோர்ஸ் உதவி வருகிறது. எங்களது இணையதளத்தில் (www.eltf.in) உங்களது குறைகளை உரிய தகவல்களுடன் இ மெயில் மூலம் அனுப்பினால், உரிய ஆலோசனைகள் வழங்குவோம். தேவைப்பட்டால், உரிய நடவடிக்கைக்காக அதை வங்கி உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்வோம்” என்கிறார் அதன் அமைப்பாளர் பிரைம் பாயிண்ட் ஸ்ரீனிவாசன்.
Subscribe to:
Posts (Atom)