அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள், சட்டக்கல்லூரிகளில் ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கை மூலம் அட்மிஷன் பெறும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தமிழக அரசே வழங்கி வருகிறது. இதுவரை பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொழிற் கல்வி படிப்புகளைப் படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் ஜாதி வேறுபாடின்றி இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது .
கல்விக் கட்டணம் என்பது அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்கல்லூரிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்படும் கட்டணத்தையும் தனியார் சுயநிதி தொழிற்கல்லூரிகளில் கட்டண நிர்ணயத்துக்காக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணத்தையும் பல்கலைக்கழகங்கள் நடத்தும் பாடப்பிரிவுகளுக்கு அந்தப் பல்கலைக்கழகங்கள் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் குறிக்கும்.
ஒற்றைச்சாளர முறை மூலம் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து படிக்கும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கும் இந்தக் கல்விக் கட்டணச் சலுகை வழங்கப்படும். விண்ணப்பத்துடன் வழங்கப்படும் விளக்கத் தகவல் குறிப்பேட்டில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரிப் படிவத்தில் உள்ளபடி, வருவாய்த் துறையின் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தகுதிக்குக் குறையாத அலுவலரிடம் சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும். ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பிக்கும் போதே இந்தச் சான்றிதழையும் வைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
குடும்பத்தில் அப்பா, அம்மா, அவர்களது பெற்றோர், மாணவியின் சகோதர, சகோதரிகள் உள்ளிட்டவர்கள் இதுவரை பட்டப் படிப்பு படிக்கவில்லை என்பதை உத்தரவாதப்படுத்தும் வகையில் மாணவரும் பெற்றோர் அல்லது பாதுகாவலரும் குறிப்பிட்ட படிவத்தில் உறுதி மொழி அளித்து கையெழுத்திட வேண்டும். இந்தப் படிவங்களை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளிலும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சுய ஆதரவுப் படிப்புகளிலும் (செல்ஃப் சப்போர்ட்டிங் கோர்ஸ்) சேரும் மாணவர்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின் முதல் தலைமுறை பட்டதாரிக்கான கல்விக் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கல்லூரியிலும் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் படிக்கும் 5 சதவீத மாணவர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படும். இந்த உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்குக் குறைவாக இருக்க வேண்டியது அவசியம்.
இந்தச் சலுகை பெறும் மாணவர்கள், முதலில் தேர்வு செய்த கல்வி நிறுவனத்தையோ, படிப்பையோ மாற்ற அனுமதிக்கப்பட மாட்டாது. ஏஐசிடிஇ வழங்கும் படிப்புக் கட்டணச் சலுகை பெற விரும்புபவர்கள் அதற்கான விருப்பத்தையும் விண்ணப்பத்தில் குறிப்பிடவேண்டும்.