கவுன்சலிங் மூலம் பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் பிளஸ் டூ படித்த மாணவர்கள் எந்தெந்த சான்றிதழ்களை எந்தப் படிவத்தில் பெற வேண்டும் என்பது குறித்த விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு மே மாதம் முதல் வாரம் வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சலிங் மூலம் பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் தேவையான சான்றிதழ்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக எந்தெந்தச் சான்றிதழ்களை யாரிடமிருந்து பெற வேண்டும் என்பது குறித்தும் அந்தச் சான்றிதழ்களின் மாதிரி குறித்தும் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சில நேரங்களில் சான்றிதழ் பெறுவதற்கு காலதாமதம் ஏற்படும் என்பதால், மாணவர்கள் கடைசி நேரப் பரபரப்புக்கு ஆளாக நேரிடும். அதைத் தவிர்க்கவே இந்தத் தகவல்கள் முன்னதாக வெளியிடப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் இடம் பெற விரும்பும் மாணவர்கள் தமிழகத்தை இருப்பிடமாகக் கொண்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்திருந்தால் இருப்பிடச் சான்றிதழ் தேவையில்லை. அதாவது, 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் படிக்காத மாணவர்கள் இருப்பிடச் சான்றிதழ் (நேட்டிவிட்டி சர்டிபிகேட்) பெற வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள படிவத்தில் உள்ளது போல படிவத்தில் பூர்த்தி செய்து கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர், தாசில்தார் ஆகியோரின் கையெழுத்துக்களுடன் இருப்பிடச் சான்றிதழை பெற வேண்டும். சிறப்பு தாசில்தார், துணைத் தாசில்தார் போன்றவர்களிடமிருந்து பெறப்படும் சான்றிதழ் ஏற்கப்பட மாட்டாது என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுவரை பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கட்டணச் சலுகை பெற விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பப் படிவமும் உறுதிமொழிப் படிவமும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் படிவத்தில் உள்ளபடி, முதல் தலைமுறை பட்டதாரி என்பதற்கும் கட்டணச் சலுகை பெறத் தகுதியுடையவர் என்பதற்குமான சான்றிதழை தலைமை நிலைய துணைத் தாசில்தாரிடமிருந்து பெற வேண்டும். உறுதிமொழி படிவத்தில் மாணவரும் பெற்றோரும் கையெழுத்திட வேண்டும்.
முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் போன்று சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் இடம் பெற விரும்பும் மாணவர்களுக்கான சான்றிதழ் மாதிரிகளும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அதனைப் பார்த்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இதேபோல, ஜாதிச் சான்றிதழ்கள் மாணவர்களிடம் ஏற்கெனவே இருக்கும். கல்விக்கடன் பெறுவதற்கு வருவாய் சான்றிதழ் தேவைப்படலாம். இதுபோல தேவைப்படும் சான்றிதழ்களைக் கருத்தில் கொண்டு அவற்றை வாங்கி வைத்துக் கொள்வதில் மாணவர்கள் இப்போதே கவனம் செலுத்த வேண்டும்.