இந்திய அரசின்கீழ் இயங்கி வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) சயின்டிஸ்ட் பணியில் சேர விரும்பும் என்ஜினீயரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
மொத்தப் பணியிடங்கள்: 102.
பி.இ. அல்லது பி.டெக். எலெக்ட்ரானிக்ஸ் படித்தவர்களுக்கு 35 பணியிடங்களும், மெக்கானிக்கல் படித்தவர்களுக்கு 50 பணியிடங்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களுக்கு 17 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் ஏதேனும் ஒன்றில் 65 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும். 13.03.2014-ஆம் தேதி நிலவரப்படி 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு விதிமுறையின்படி வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். இஸ்ரோ இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பக் கட்டணத்துக்கான சலானை டவுன்லோடு செய்ய வேண்டும். சலானைப் பூர்த்தி செய்து, அருகிலுள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் இஸ்ரோவின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். வங்கி அளிக்கும் இரண்டு ரசீதுகளில் ஒன்றை, தங்களது கோப்புக்காக வைத்துக்கொள்ள வேண்டும். மற்றொரு சலான் ரசீதை Head, P&GA (ICRB), ISRO Head Quarters, Antariksh Bhavan, New BEL Road, Bangalore - 560094 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பெண் விண்ணப்பதாரர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஆனால், ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதற்கு அடையாளமாக வழங்கப்படும் ஆன்லைன் ரெஜிஸ்ட்ரேஷன் எண்ணை குறிப்பிட்டு, கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை இணைத்து தபால் மூலம் இஸ்ரோவுக்கு அனுப்ப வேண்டும்.
ஏற்கெனவே மத்திய, மாநில அரசு அலுவலகங்களிலோ அல்லது பொதுத்துறை நிறுவனங்களிலோ பணிபுரிந்து வருபவர்கள், தாங்கள் இந்தப் பணியில் விண்ணப்பிப்பதற்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை என்பதைக் குறித்தும் NO OBJECTION LETTER-ஐ தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தின் உயர் அதிகாரியிடமிருந்து வாங்கி அனுப்ப வேண்டும்.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வு சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, புதுதில்லி உள்ளிட்ட 10 இடங்களில் நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.03.2014
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 26.04.2014
விவரங்களுக்கு: http://isro.gov.in