6 February 2014

தில்லி தெற்காசிய பல்கலைக்கழகத்தில் உதவித் தொகையுடன் முதுநிலை படிப்புகள்

மோ.கணேசன்

சார்க் நாடுகள்  அமைப்பின் முயற்சியால்  தில்லியில் தொடங்கப்பட்டுள்ள தெற்காசிய பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பில் சேரவிரும்பும் மாணவர்கள் அதற்கான நுழைவுத்தேர்வை எழுத விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

இந்தியா, இலங்கை, பூட்டான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், வங்கதேசம், மாலத்தீவு ஆகிய நாடுகளை அடக்கிய சார்க் நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் முதுநிலை படிப்புகளைப் படிக்க உதவும் வகையில் சார்க் நாடுகள் அமைப்பின் முயற்சியால் கடந்த 2010-ஆம் ஆண்டு, தில்லியில் தெற்காசியப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. சர்வதேசத் தரத்தில் ஆசிரியர்கள், மிகச்சிறந்த நூலக வசதி, நவீன அறிவியல் ஆய்வுக்கூடங்கள், 24 மணி நேர இலவச இண்டர்நெட் இணைப்பு வசதி, மிகக்குறைந்த செலவில் ஹாஸ்டல் வசதி போன்ற நவீன வசதிகள் கொண்டது இப்பல்கலைக்கழகம். பொருளாதாரரீதியில் பின்தங்கியிருந்தாலும் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு உதவித் தொகை கிடைக்கும். ஆவை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு ஏற்ற பல்கலைக்கழகம் இது.

இந்தப் பல்கலைக்கழகத்தில் அப்ளைடு மேத்மேட்டிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகளில் எம்எஸ்சி படிப்பும் இண்டர்நேஷனல் ரிலேஷன்ஸ், டெவலப்மெண்ட் எக்கனாமிக்ஸ், சோஷியாலஜி ஆகிய பாடப்பிரிவுகளில் எம்ஏ படிப்பையும் படிக்கலாம். அத்துடன், எல்எல்எம் எனப்படும் மாஸ்டர் ஆப் லா படிப்பும் இங்கு உள்ளது. இதுதவிர, எம்பில், பிஎச்டி ஆய்வுப் படிப்புகளையும் படிக்க வாய்ப்புகள் உண்டு. முதுகலைப் படிப்புகளில் உள்ள ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 30 மாணவர்கள் சேர்க்கப்படுவர். 30 மாணவர்களில் 15 இடங்கள் இந்திய மாணவர்களுக்கும், மீதமுள்ள 15 இடங்கள் பிற சார்க் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

எம்ஏ மற்றும் எல்எல்எம் படிப்புகளில் சேர விரும்புவோர் தங்களது இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடனும், எம்எஸ்சி படிப்பில் சேர விரும்புவோர் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்புகளை ரெகுலர் முறையில் படித்து முடித்திருக்க வேண்டும். ஒவ்வொரு முதுநிலை படிப்பிலும் சேருவதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்ற விவரங்கள் இணையதளத்தில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக தனி நுழைவுத் தேர்வு சார்க் நாடுகளின் முக்கிய நகரங்களில் நடத்தப்படுகிறது. இந்தியாவில் சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, குவாஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர். கொல்கத்தா, லக்னோ, மும்பை, சண்டிகார், பாட்னா மற்றும் தில்லி ஆகிய நகரங்களில் இந்த நுழைவுத் தேர்வு நடைபெறும். எந்தப் பாடப்பிரிவில் மாணவர்கள் சேர விரும்புகிறார்களோ அந்தப் பாடப் பிரிவிலிருந்தும், ஜெனரல் அவேர்னஸ், நாட்டு நடப்புகளிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும். மூன்று மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வில் அப்ஜெக்டிவ் முறையிலும், விரிவாக பதில் அளிக்கும் முறையிலும் கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வுக்கு மொத்த மதிப்பெண்கள் 100.

படிப்புக் கட்டணம்: இந்தியா உள்ளிட்ட சார்க் நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கான ஓராண்டுக்கான படிப்புக் கட்டணம் 880 அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் தோராயமாக 54 ஆயிரம் ரூபாய் ஆகும். விடுதி வசதி உண்டு. விடுதியில் தங்குவதற்கு மாத வாடகை ரூ. 500. உணவுக்கட்டணம் தனி.

கல்வி உதவித் தொகை: தெற்காசியப் பல்கலைக்கழகத்தில் படிக்கச் சேரும் மாணவர்களுக்கு பல்வேறு உதவித் தொகைகள் கிடைக்கும் சாத்தியங்கள் உள்ளன. நுழைவுத்தேர்வில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு பிரசிடெண்ட் ஸ்காலர்ஷிப் கிடைக்கும். இந்த ஸ்காலர்ஷிப்பில் முழு படிப்புக் கட்டணமும், விடுதிக் கட்டணமும் இலவசம். அத்துடன், அந்த மாணவர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் உதவித்தொகையும் வழங்கப்படும். ஒவ்வொரு நாட்டிலும் நுழைவுத்தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு இந்த பிரசிடெண்ட் ஸ்காலர்ஷிப் கிடைக்கும்.

பொருளாதார அளவில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு மாதம் 3 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் வரையில் உதவித்தொகை வழங்கப்படும். ஸ்காலர்ஷிப் அனைத்தும் ஓராண்டுக்கு வழங்கப்படும். அந்த ஓராண்டில் மாணவரின் படிப்புத்திறனைப் பொருத்து உதவித் தொகை அடுத்த ஆண்டிற்கு நீட்டிக்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ. 600. டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு என ஆன்லைன் மூலமாகவும், டிமாண்ட் டிராப்ட் மூலமாகவும் கட்டணத்தைச் செலுத்தலாம்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.03.2014
நுழைவுத்தேர்வு நடைபெறும் தேதி: 06.04.2014.
விவரங்களுக்கு: http://sau.ac.in



‘‘தமிழக மாணவர்களிடம்  போதிய விழிப்புணர்வு இல்லை’’

கள்ளக்குறிச்சிதான் எனக்கு சொந்த ஊர்.  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பிஇ படித்து முடித்துவிட்டு வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன். அப்போது தெற்காசிய பல்கலைக்கழகத்தின் விளம்பரத்தினைப் பார்த்து எம்எஸ்சி, மேத்மேட்டிக்ஸ் படிப்புக்கு விண்ணப்பித்தேன்.

நுழைவுத்தேர்வு எளிமையாகத்தான் இருந்தது. அப்படி ஒன்றும் கடினமானதாக இல்லை. இந்த நுழைவுத்தேர்வுக்குத் தயாராக வேண்டுமெனில் இந்த இணையதளத்தில் பாடத்திட்டங்களும், நடைபெற்று முடிந்த தேர்வுகளின் வினாத்தாள்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதனை டவுன்லோடு செய்து பயிற்சி செய்தாலே எளிதில் தேர்ச்சி பெற்றுவிடலாம்.

உலகத்தரம் வாய்ந்த கல்வி முறை, சிறந்த நூலகம், பல்வேறு நாட்டு மாணவர்களுடன் இணைந்து படிக்கும் வசதி, குறைந்த கட்டணத்தில் ஹாஸ்டல் வசதி இப்படி எல்லா வகையிலும் தெற்காசியப் பல்கலைக்கழகம் ஒரு படி மேலே இருக்கிறது. இங்கு படிப்பது குறித்து தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கே போதிய விழிப்புணர்வு இல்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.

என் அப்பா பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணி புரிகிறார். ஆண்டு வருமானம் 3 லட்சம் அவருக்கு. இந்த வருமானத்தின் அடிப்படையில் மாதம் 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் இந்தப் பல்கலைக்கழகத்தின் மூலம் எனக்கு கிடைக்கிறது. இதனால் பொருளாதார நெருக்கடியின்றி இங்கு படித்துவருகிறேன். சென்ற ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து மூன்று பேர் இங்கு படிக்க வந்தோம். அதில் இரண்டு பேர் இங்கிருந்தபடியே சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்து விட்டனர். ஆய்வுப் படிப்புகளில் ஈடுபடவேண்டும் என்று விரும்பும் மாணவர்களுக்கு இந்தப் பல்கலைக்கழகம் சரியானதொரு தேர்வு"

- தீபக் பாண்டியன்,
2-ஆம் ஆண்டு எம்எஸ்சி,
தெற்காசியப் பல்கலைக்கழகம்