தெற்கு ரயில்வேயில் 1,666 பணியிடங்களுக்கு தகுதியுடையவர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அசிஸ்டண்ட் லோகோ பைலட் (ஏ.எல்.பி.) மற்றும் டெக்னீஷியன் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
சேர விரும்புபவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர், எலெக்ட்ரீஷியன், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், மில்ரைட், ரேடியோ அண்ட் டி.வி. மெக்கானிக், எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், மோட்டார் வாகன மெக்கானிக், வயர்மேன், டீசல் மெக்கானிக், டர்னர், பெயிண்டர், கார்பெண்டர் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ மற்றும் என்ஜினீயரிங் பட்டம் பெற்றவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பதாரர்கள் 18 வயதிலிருந்து 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.40 (பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர்களுக்கு). தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், முன்னாள் படைவீரர்கள், கணவனை இழந்த பெண்கள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
அசிஸ்டண்ட் லோகோ பைலட் (ஏ.எல்.பி.) பணியில் பொதுப் பிரிவினருக்கு 157 காலியிடங்களும், தாழ்த்தப்பட்டோருக்கு 45 காலியிடங்களும், பழங்குடியினருக்கு 18 காலியிடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 63 காலியிடங்களும் உள்ளன. இந்தப் பணிக்கு மொத்தம் 283 காலியிடங்கள் உள்ளன. டெக்னீஷியன் பணியில் பொதுப் பிரிவினருக்கு 782 காலியிடங்களும், தாழ்த்தப்பட்டோருக்கு 347 காலியிடங்களும், பழங்குடியினருக்கு 275 காலியிடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 262 காலியிடங்களும் என மொத்தம் 1,383 காலியிடங்கள் உள்ளன.
எழுத்துத் தேர்வு எப்படி இருக்கும்?: எழுத்துத் தேர்வு மூலம் இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். அதற்கான எழுத்துத் தேர்வில் ஜெனரல் அவேர்னஸ், மேத்மேட்டிக்ஸ், ஜெனரல் இன்டலிஜென்ஸ், ரீசனிங், ஜெனரல் சயின்ஸ், டெக்னிக்கல் எபிலிட்டி என ஆறு பிரிவுகளில் இருந்து 100 முதல் 120 கேள்விகள் வரை கேட்கப்படும். அதற்கு 90 நிமிடங்கள் உள்ளன. ஒவ்வொரு தவறான பதிலுக்கும் நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.
விண்ணப்பிப்பது எப்படி?:
விண்ணப்பப் படிவத்தை இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும். விண்ணப்பப் படிவத்தில் நீலம் அல்லது கறுப்பு பால் பாயிண்ட் பேனாவால் அடித்தல், திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும். தற்போது எடுக்கப்பட்டிருக்கும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை, ‘The Assistant Secretary, Railway Recruitment Board, Chennai' payable at Chennai என்ற முகவரிக்கு டி.டி. எடுத்து அனுப்ப வேண்டும். அல்லது விண்ணப்பக் கட்டணத்தை ’The Assistant Secretary, Railway Recruitment Board, Chennai' payable at 'GPO, Chennai’ என்கிற முகவரிக்கு இந்தியன் போஸ்டல் ஆர்டரும் அனுப்பலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் கட்டணம் செலுத்திய டி.டி. அல்லது போஸ்டல் ஆர்டர் ரசீதையும், பத்தாம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. சான்றிதழ் நகலையும், சாதிச் சான்றிதழ் நகலையும் சேர்த்து அனுப்பி வைக்கவேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The Assistant Secretary, Railway Recruitment Board, No.5, Dr.P.V. Cherian Crescant Road, Behind Ethiraj College, Egmore, Chennai - 600008.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 17.02.2014
தேர்வு நாள்: 15.06.2014
விவரங்களுக்கு: http://rrcb.gov.in/