16 December 2013

CSIR - JRF தேர்வை எதிர்கொள்வது எப்படி?

ஞா.சக்திவேல்

கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகவும் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்பும் பெற்று ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) நடத்தும் சிஎஸ்ஐஆர்-யுஜிசி விரிவுரையாளர் தகுதித் தேர்வை (நெட்) எழுத வேண்டும். வருகிற 22-ஆம் தேதி இத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் சில யோசனைகள்...
சென்னைப் பல்கலைக் கழகத்தின் கிண்டி வளாகத்தில் சிஎஸ்ஐஆர் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ஞாயிற்றுக்கிழமை தோறும் இயற்பியல் பாடத்தில் இலவசப் பயிற்சி வகுப்பை நடத்தி வரும் பாண்டிச்சேரி பல்கலைக்கழக இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் எஸ்.வி.எம். சத்திய நாராயணா கூறும் யோசனைகள்:

அறிவியல் பாடத்தைப் படித்து தேர்ச்சி பெறுகிறார்களே தவிர, ஆழ்ந்தும், புரிந்தும் படிப்பதில்லை. பாடத்திட்டங்கள் சிறப்பாக இருந்தும் பயிற்சி முறையில் பிரச்சினை இருப்பதால் சிஎஸ்ஐஆர் தேர்வுகளில் பல மாணவர்களால் பெரிய அளவில் வெற்றி பெற முடிவதில்லை. இயற்பியல் போன்ற அறிவியல் பாடங்களைப் படிக்கும்போது கோட்பாடு குறித்தும் அதையொட்டிய பிரச்சினைகளையும் அதற்கான தீர்வுகளையும் புரிந்து படிக்க வேண்டியது அவசியம். அத்துடன், மாற்றுத் தீர்வு குறித்தும் யோசிக்க வேண்டும். ஒரு பகுதியைப் படித்தோம், அதில் என்ன தீர்வு முறை இருக்கிறதோ அதையும் பார்த்துவிட்டோம் என்று இருந்தால் இந்தத் தேர்வில் வெற்றி பெறுவது கடினம்.

சிஎஸ்ஐஆர் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் என்னென்ன பாடப் பிரிவுகள் இருக்கின்றன என்பதை அறிந்து ஒவ்வொரு பாடமாகப் படிக்க வேண்டும். ஒரு பாடப்பிரிவு குறித்துப் படிக்கும்போது நூலகத்தில் அந்தப் பாடப்பிரிவுக்கு உரிய நான்கு ஐந்து புத்தகங்களை எடுத்துக்கொண்டு மாணவர்களே தனியாக குறிப்பெடுத்துப் படிக்க வேண்டும். இவ்வாறு படிக்கும் போது ஒவ்வொரு பாடத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் பிராப்ளம் சால்விங் முறைகளை பயிற்சி செய்து பார்க்க வேண்டும். ஒரு கணக்கிற்குத் தீர்வு காணும் போது வேறு நிலைப்பாட்டில் என்ன மாதிரியான முடிவுகள் வரும் என்பதை மாற்றி மாற்றி தீர்வு கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு பிரச்சினைக்களுக்கான தீர்வைக் காணும்போது என்னென்ன தவறுகள் நிகழ்கின்றன என்பதையும், அந்தத் தவறால் என்னென்ன முடிவுகள் வருகின்றன என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். இந்த முறையில் பயிற்சி செய்வது தேர்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கணக்கை மாற்றிக் கொடுத்தாலும் உங்களுக்கு எப்படித் தீர்வு கண்டுபிடிப்பது என்பதும் எளிதாகத் தெரிந்து விடும்.

தேர்வில் கேள்விக்கு சரியான பதில் எது என்பதை அறிந்து அதை மீண்டும் பரிசோதித்துப் பார்த்து சரியான விடைதானா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஏனெனில், தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.

பழைய கேள்வித்தாள்களை எடுத்து வைத்துக்கொண்டு மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்க்க வேண்டும். மூன்று மணி நேரத்தில் எவ்வளவு கேள்விகளுக்கு விடையளிக்க முடிகிறது என்பதை நாமே மதிப்பீடு செய்துகொண்டு நம்மை முன்னேற்றிக்கொள்ள முடியும். ஒரு கணக்கிற்கு விடை தேடும்போது அரைப்பக்கத்திற்கு மேல் போட்டுப் பார்த்தும் விடை கிடைக்காமல் போனால் அந்தக் கணக்கை அப்படியே விட்டு விட்டு அடுத்த கேள்விக்கு போய் விட வேண்டும். ஒரே கணக்கிற்கு அதிகமான நேரம் ஒதுக்கி விடை தேடிக்கொண்டிருந்தால், தெரிந்த கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க நேரமில்லாமல் போகலாம்.

ஒவ்வொரு கணக்கைத் தீர்க்கவும் எளிய உத்தி முறைகள் இருக்கும். அதனை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த உத்தியினை தேர்விலும் கடைப்பிடித்து விரைவில் விடையளிக்க முயற்சி செய்ய வேண்டும்.

ஒரு வாரம் படித்த பாடங்களை அடுத்த வாரமும் திருப்பிப் படிக்க வேண்டும். அப்போதுதான் மறந்து போகாது. குழுவாக சேர்ந்து படிப்பதும் இந்தத் தேர்வில் வெற்றி பெறுவதற்கு உதவும். குழுவில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிமுறைக்கும் தீர்வு கண்டுபிடித்திருப்பார்கள் அல்லது தீர்வை சிந்தித்து இருப்பார்கள் அல்லது அதே கணக்கிற்கு வேறு வழியில் விடையளிக்க முயற்சி செய்திருப்பார்கள். இதனால் எந்த முறை எளியது என்பது குழுவாக அமர்ந்து விவாதிக்கும் போது அறிந்துகொள்ள முடியும். தேர்வுக்கு வழங்கப்பட்டிருக்கும் பாடத்திட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் படிக்க முடியாமல் போய்விட்டாலும்கூட, குறிப்பிட்ட சில முக்கியப் பாடங்களிலாவது நல்ல தெளிவு வேண்டும். அப்போதுதான் நாம் நன்கு படித்த பாடங்களிலிருந்து கேள்விகள் வரும்போது அவற்றை எளிதாக எதிர்கொள்ளலாம். தேர்வு எழுதும் பலரும், ஒரு கேள்விக்கு தவறாக விடையளித்து விட்டோம் என்ற பதற்றத்தில் வேறு சில கேள்விகளுக்கும் சரியாக பதில் எழுதத் தவறவிட்டு விடுவார்கள் எனவே பதற்றம் தேவையில்லை. நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ளவும்.

தேசிய தகுதித் தேர்வு மற்றும் மாநில தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கூட்டமைப்பின் செயலாளரும், மதுரை பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரியில் இயற்பியல் துறையின் கௌரவ பேராசிரியருமான நாகராஜன் வழங்கும் டிப்ஸ்:

கடந்த பத்தாண்டுகளில் கேட்கப்பட்ட பழைய கேள்வித் தாள்கள் இணையத்தில் இருக்கின்றன. பெரும்பாலும், பழைய கேள்விகளை மீண்டும் கேட்பதில்லை. இருந்தபோதிலும் அதற்கு இணையான கேள்விகள் கேட்கப்படுவதால் பழைய வினாத்தாள்களுக்கு விடையளித்து பயிற்சி செய்ய வேண்டும். கடந்த ஆண்டுகளில் கேட்ட கேள்விகளுக்கு விடையளித்துப் பார்க்கும்போதுதான் எப்படியெல்லாமல் கேள்விகள் கேட்கக்கூடும் என்பதைப் புரிந்து கொண்டு தயாராக முடியும். தேர்வின் முதல் பகுதியில் தேர்ச்சி பெற பல்வேறு போட்டித் தேர்வுக்கான புத்தகங்களை வாங்கிப் படிப்பது அவசியம். நிறைய பயிற்சி மையங்கள் இதற்கென்று தனியே பயிற்சியினை வழங்குகின்றன. அங்கு வழங்கப்படும் பயிற்சிக் கையேடுகளையும் பிற மாணவர்களிடமிருந்தும், இதற்கு முன்பு படித்தவர்களிடமிருந்தும் வாங்கிப் படிக்க வேண்டும்.

தேர்வின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பகுதிக்கு சிஎஸ்ஆர் தனியே பாடத்திட்டங்களை வழங்குகிறது. அதில் உள்ள ஒவ்வொரு பகுதியையும் பிரித்து நீங்களே தனித்தனியாக குறிப்புகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே கணக்குகளுக்கு விடையளிக்கும் வகையில் ஒவ்வொரு பாடப் பிரிவிற்கும் தனி வினா வங்கியைத் தயார் செய்து வைத்துகொள்ள வேண்டும். நீங்களே அதற்காக சொந்தமாக கேள்விகளை தயார் செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் பாடப்புத்தகம் என்று தனியே இருக்கிறது. அதில் உள்ள அப்ஜெக்ட்டிவ் டைப் வினாக்களை மாதிரியாக எடுத்துக்கொண்டு பயிற்சி மேற்கொள்ள வேண்டும். கைடு புத்தகங்கள், பயிற்சி மையங்கள் வழங்கும் புத்தகங்கள் என ஏராளமானவை புழக்கத்தில் இருக்கின்றன.

பகுப்பாய்வு முறையில் கேள்விகளைக் கேட்பதால் பாடப் புத்தகங்களை ஆழ்ந்து படித்தால் மட்டுமே விடையளிக்க முடியும். நீங்கள் படிக்கும் போது வினாக்களை எழுப்பி அதற்குத் தகுந்தாற்போல் விடையளிக்க முயற்சி செய்ய வேண்டும். Result and case studies என்ற பகுதியில் ஒரு வினாவை எழுப்பி இப்படி இருந்தால் என்ன விடை கிடைக்கும் என்று கேட்பார்கள். Derivation பகுதியில் இடையில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்பதால் ஒவ்வொரு டெரிவேஷனையும் ஆழ்ந்து படித்து அறிந்துகொள்வது அவசியம்.

கேள்விக்கு தவறாக விடையளிக்கும்போது மதிப்பெண் குறையும் என்பதால் சரியாக விடை தெரிந்த வினாக்களுக்கு முதலில் பதிலளிக்க வேண்டும். நேர மேலாண்மையும் மிக முக்கியமானது. நன்கு அறிந்த கேள்விகளுக்கு விடையளித்த பின்னரே, கணித முறையில் விடை தேடவேண்டிய கேள்விகளுக்கு வர வேண்டும். முதலில் கணிதம் சார்ந்த கேள்விகளுக்கு விடையளிக்க ஆரம்பித்தால், மற்ற கேள்விகளுக்கு விடையளிக்கப் போதுமான நேரமில்லாமல் போக வாய்ப்பு இருக்கிறது. கணித முறையில் விடையளிக்க உதவியாக லாக் மற்றும் ஆண்டி லாக் அட்டவணை கொடுத்திருப்பார்கள். பெரும்பாலான நேரங்களில் கால்குலேட்டரை பயன்படுத்திதான் விடையளித்திருப்போம். ஆனால் தேர்வில் கால்குலேட்டரை பயன்படுத்த அனுமதிக்க மாட்டார்கள். ஆகையால், ஆரம்பத்தில் இருந்தே லாக் மற்றும் ஆண்டி லாக் அட்டவணையைப் பயன்படுத்தி விடையளிக்க பயிற்சி பெற்றிருப்பது அவசியம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு கணிதத் திறனும், பிரச்சினைக்குத் தீர்வுகாணும் திறனும் குறைவாக இருக்கின்றன. இத்தகைய திறன்களை வளர்த்துக்கொள்ள ஒவ்வொரு கான்செப்டையும் நன்கு ஆழ்ந்து படிக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு மணி நேரம் ஒதுக்கிப் படிக்கும் போது ஓராண்டிற்குள் நல்ல திறமையை வளர்த்துக்கொண்டு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியும்" என்கிறார், லயோலா கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றும் ஜோசப்.

தேர்வில் 200 மதிப்பெண்களுக்கும் விடையளிக்க வேண்டிய அவசியமில்லை. ரொம்ப வேகமாக முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் எல்லாக் கேள்விகளுக்கும் அவசர அவசரமாக விடையளிக்கும்போது பல விடைகள் தவறுதலாகி உங்களுக்கு மிகக்குறைந்த மதிப்பெண்களே கிடைக்கும். தேர்வு நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே படித்துப் பார்த்ததைத் திருப்பிப் பார்க்க வேண்டும். கடைசி நாளில் கண் விழித்துப் படித்தால் அடுத்த நாள் தேர்வில் சரியாக எழுத முடிவதில்லை" என்கிறார், சென்னைப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ஐயப்பன். படித்துப் பார்த்ததை மீண்டும் மீண்டும் திருப்பிப் படித்துப் பார்க்க வேண்டும். தொடர்ந்து பயிற்சி செய்யும்போது மட்டுமே தேர்வில் எளிதாக, விடையளிக்க முடியும்" என்கிறார் கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு மாணவராக இருக்கும் அபுதாகீர்.

தேர்வுக்கு நன்கு தயாராக நல்ல உழைப்பைச் செலுத்துங்கள். நம்பிக்கையோடு தேர்வு எழுதுங்கள்! வெற்றி நிச்சயம்!

இலவசப் பயிற்சி

சிஎஸ்ஐஆர் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக 1996-ஆம் ஆண்டில் இருந்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் இலவச வகுப்புகளை நடத்தி வருகிறோம். இதில் எம்எஸ்சி இயற்பியல் மாணவர்களும் முதுநிலை பட்டப் படிப்பைப் படித்து முடித்தவர்களும் கலந்துகொள்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக எங்களுக்கு உதவியாக இந்திய கணித அறிவியல் மையத்தில் இருந்து பேராசிரியர் ராஜசேகரனும், மணியும் கலந்துகொண்டு வகுப்பு எடுக்கிறார்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அணு இயற்பியல் துறையில் காலை 10 மணியில் ஆரம்பித்து மாலை 5 மணி வரை வகுப்பு எடுக்கிறோம். கட்டணம் எதுவும் கிடையாது. ஜூலை மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் இந்தப் பயிற்சி, ஜூன் மாதம் சிஎஸ்ஐஆர் எக்ஸாம் தேர்வு நடக்கும்வரை தொடந்து நடைபெறும். இந்த இலவசப் பயிற்சியில் பங்கேற்ற நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிஎச்டி முடித்து நல்ல பணிகளில் இருக்கிறார்கள்" என்கிறார், உதவிப் பேராசிரியர் எஸ்.வி.எம். சத்தியநாராயணா.