மத்திய அரசின் கீழ் இயங்கும் தரநிர்ணய சான்றிதழ் வழங்கும் நிறுவனத்தில் சேர விரும்பும் என்ஜினீயரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
மத்திய அரசின் நுகர்வோர் நலன் உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய தர நிர்ணய நிறுவனம் (Bureau of Indian Standards) உணவு தயாரிக்கப் பயன்படும் பொருள்கள், மின் சாதனப் பொருள்கள், குடிநீர் போன்றவற்றிற்கான தர நிர்ணயம், தங்கம், வெள்ளி ஆகியவற்றுக்கான ஹால்மார்க் தர நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு தர நிர்ணயப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பி கிரேடு சயின்டிஸ்ட் பணிகளில் 115 காலியிடங்கள் உள்ளன. இப்பணிகளில் சேர என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் 31 காலி இடங்களும், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் 31 காலி இடங்களும், சிவில் என்ஜினீயரிங் பிரிவில் 24 காலி இடங்களும், மெட்டலர்ஜிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் 9 காலி இடங்களும், கெமிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் 8 காலி இடங்களும், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் பிரிவில் 10 காலி இடங்களும், டெக்ஸ்டைல் என்ஜினீயரிங் பிரிவில் 2 காலி இடங்களும் உள்ளன. பணியில் சேரும் என்ஜினீயர்களுக்கு மாதம் ரூ. 52,280 ஊதியமாகக் கிடைக்கும். பொதுப்பிரிவிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ., அல்லது பி.டெக். படிப்பை முடித்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைனில் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 750. இக்கட்டணத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும். பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வரும் ஜனவரி 19-ஆம் தேதி சென்னை உள்ளிட்ட இந்தியாவில் உள்ள 45 நகரங்களில், ஆன்லைன் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.விண்ணப்பிக்கும் முறை மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் BIS இணையதளத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.12.2013