பொன்.தனசேகரன்
ஐரோப்பாவில் செக் குடியரசில் ஜப்லோட்ரான் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரியும் விஜய ராகவன், தமிழ்நாட்டில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த முதல் தலைமுறை பட்டதாரி. ஐரோப்பாவில் முதுநிலைப் படிப்பையும் பிஎச்டி படிப்பையும் முழுக் கல்வி உதவித் தொகை பெற்றுப் படித்தவர். வெளிநாடுகளில் கல்வி உதவித் தொகையுடன் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அவரது அனுபவ ஆலோசனைகள்...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். பிளஸ் டூ தேர்வில் 87 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதும், அமிர்தா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்து படித்தேன். நான் பட்டப் படிப்பில் ரேங்க் ஹோல்டர் இல்லை. ஆனால், கல்லூரியில் படிக்கும்போது, ஒரு நாள் கூட விடுமுறை எடுத்தது கிடையாது. ஜெர்மனியில் உயர்கல்வி படிக்கும் மாணவர் ஒருவர், எங்கள் கல்லூரியில் உரை நிகழ்த்தினார். அவரது உரையைக் கேட்டதிலிருந்து வெளிநாட்டில் சென்று படிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன். இறுதியாண்டில், கேம்பஸ் இன்டர்வியூ மூலம் எல் அண்ட் டி நிறுவனத்தில் ரூ.2.75 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை கிடைத்தது. ஆனாலும்கூட, அந்த வேலையில் சேர வில்லை. அந்த வேலையில் சேராமல், வெளிநாட்டில் மேற்படிப்புப் படிக்கச் செல்கிறேன் என்றதும், அப்போது எனது குடும்பத்தில் சிரமமான சூழ்நிலை இருந்தபோதும் அதற்கு தனது முழு சம்மத்தையும் தெரிவித்து எனது முயற்சிக்கு ஆதரவாக இருந்தவர் எனது அப்பா விஸ்வநாதன். எனது மாமா உள்பட குடும்பத்தினர் அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்தனர்.
பிரிட்டனில் உள்ள ஏழு பல்கலைக்கழகங்களில் முதலில் அட்மிஷன் கிடைத்தது. ஆனால் படிப்புச் செலவுக்கு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சம் வரை தேவைப்பட்டது. அந்த அளவுக்கு பணம் திரட்டவோ, வங்கிக் கடன் பெறவோ இயலவில்லை. டீச்சிங் அசிஸ்டெண்ட்ஷிப், கல்வி உதவித் தொகை போன்றவற்றுக்கு அங்கு சென்ற பிறகுதான் விண்ணப்பிக்க வேண்டும் என்றார்கள். அப்புறம் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கு விண்ணப்பித்தேன். இந்தியாவிலிருந்து 3 பேருக்கு அந்த ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அதில் நானும் ஒருவன். எனது மாமா, விமான டிக்கெட் வாங்கவும் கம்ப்யூட்டர் வாங்கவும் பணம் கொடுத்தார். ஒரு வழியாக, இத்தாலியில் உள்ள பாலிடெக்னிக்கோ டொரினோ கல்வி நிலையத்தில் மைக்ரோ அண்ட்நேனோ எலெக்ட்ரானிக்ஸ் முதுநிலைப் படிப்பில் சேர்ந்தேன். இந்த முதுநிலைப் படிப்புக்காக ஸ்விட்சர்லாந்து இபிஎஃப்எல், பிரான்சில் உள்ள ஐஎன்பிஜி ஆகிய கல்வி நிலையங்களிலும் படித்து முதுநிலப் பட்டப் படிப்பை முடித்தேன். முதுநிலைப் பட்டப் படிப்பைப் படிக்கும் போதே, எனது புராஜக்ட் பிரசன்டேஷனை பார்த்த பேராசிரியர் ஒருவர் பிரான்சில் லியோன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நேனோ டெக்னாலஜி கல்வி நிலையத்தில் கல்வி உதவித் தொகையுடன் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார். அங்கு பிஎச்டி முடித்துவிட்டு தற்போது செக் குடியரசில் ஜப்லோட்ரான் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்து வருகிறேன்.
வெளிநாட்டில் உயர்கல்வி படிப்பைப் படிக்க கல்வி உதவித் தொகை கிடைத்ததற்கு முக்கியக் காரணம், படிப்பைத் தவிர கூடுதலான திறமைகளை வளர்த்துக் கொண்டதுதான். அதனால்தான் பல்கலைக்கழக ரேங்க் ஹோல்டர் இல்லை என்றாலும்கூட எனக்கு உயர்கல்வி படிக்க உதவித் தொகை கிடைத்தது. நான் தனியே C,C++ போன்றவற்றையும் படித்திருந்தேன். எனது புராஜக்டையும் கவனத்துடன் செய்தேன். எனது CV, ஸ்டேட்மெண்ட் ஆஃப் பர்ப்பஸ் ஆகியவற்றையும் கவனத்துடன் தயாரித்தேன். பணம் இல்லாததால் பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் சேர முடியாவிட்டாலும்கூட, எனது தொடர் முயற்சியால் இத்தாலியில் கல்வி உதவித் தொகையுடன் படிக்க வாய்ப்பு கிடைத்தது.
வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்கள், படித்து முடித்ததும் அங்கேயே வேலை கிடைக்குமா என்பதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டியதில்லை. திறமை இருந்தால், எங்கு வேண்டுமானாலும் நல்ல வேலை கிடைக்கும். படிப்பில் சேரும்போது, படிப்பிலேயே முழு கவனத்தைச் செலுத்திப் படிக்க வேண்டும் என்பதிலேயே ஆர்வமாக இருங்கள். அதுதான் முக்கியம்.
பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்பில் மூன்றாம் ஆண்டிலேயே எந்த நாட்டில் படிப்பது என்பதைத் தீர்மானித்து விட வேண்டும். எந்த நாட்டில் படிப்பது என்பதைத் தீர்மானித்து விட்டால், அந்த நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களை அறிந்துகொண்டு பத்துக்கும் குறையாத கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்க வேண்டும். அந்தக் கல்வி நிறுவனங்களில் நாம் சேரும் துறையில் நடத்தப்படும் ஆராய்ச்சி குறித்து கவனத்தில் கொண்டு அந்தக் கல்வி நிறுவனத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அந்தக் கல்வி நிறுவனத்தின் தர அடிப்படையிலான ரேங்க்கை மட்டும் வைத்து விண்ணப்பிக்க வேண்டியதில்லை. அந்தக் கல்வி நிறுவனத்தில் நாம் சேர இருக்கும் படிப்பில், உதவித் தொகை கிடைப்பதற்கு சாத்தியம் இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும். நாம் விண்ணப்பிக்கும் துறையில் உள்ள பேராசிரியர்கள் எந்தத் துறைகளில் ஆய்வு செய்கிறார்கள், என்பதை அறிந்துகொண்டு அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்களின் ஆர்வத்தையும் திறமையும் புரிந்து கொண்டால், அவர்கள் அட்மிஷன் பெறவும் கல்வி உதவித் தொகை பெறவும் உதவியாக இருப்பார்கள்.
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான டோபல், ஐஇஎல்டிஎஸ் போன்ற மொழித் தேர்வுகளையும் ஜிஆர்இ போன்ற தேர்வுகளையும் முன்னதாக எழுதி, அதற்கான சான்றிதழ்களை கையில் வைத்திருப்பது நல்லது. ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் பாடம் கற்றுத் தருவது ஆங்கிலத்தில் இருந்தாலும்கூட, அங்கு பேசப்படும் மொழியில் அடிப்படை அறிவு பெற்றிருப்பது நமக்கு உபயோகமாக இருக்கும்.
மாணவர்கள் இளநிலைப் பட்டப் படிப்பில் பெறும் மதிப்பெண்கள் முக்கியம்தான் என்றாலும்கூட, பாடத்தைத் தாண்டி மாணவர்கள் என்ன படித்திருக்கிறார்கள், கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்திருக்கிறார்களா என்பதையெல்லாம் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பார்ப்பார்கள். அத்துடன், நாம் செய்யும் புராஜக்ட் முக்கியமானது. உங்களது சுயவிவரக் குறிப்பை தெளிவாகவும் சுருக்கமாகவும் தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அத்துடன், விண்ணப்பிக்கும்போது நாம் அனுப்ப வேண்டிய முக்கியமான ஆவணம் ஸ்டேட்மெண்ட் ஆஃப் பர்ப்பஸ். இதில் நமது திறமைகள், நமது ஆர்வம், நமது நோக்கம், இந்தக் கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கான காரணம், உயர்கல்வி படிப்பதன் மூலம் சாதிக்க விரும்புவது என்ன என்பது போன்ற விவரங்களை நமது சொந்த மொழியில் இரண்டு பக்கங்களுக்குக் குறையாமல் எழுத வேண்டும். இதனை ஒரே நாளில் எழுதி விட முடியாது. இதற்கு ஒரு மாதத்திற்கு மேல் கூட ஆகலாம். வேறு ஒருவர் எழுதியதைக் காப்பி அடித்து எழுத முயற்சிக்கக் கூடாது. அதனை பேராசிரியர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். நாமே நமது வார்த்தைகளில் எழுத வேண்டியது அவசியம்.
கல்வி நிலையங்களில் அட்மிஷன் பெறுவதற்கும் கல்வி உதவித் தொகை பெறுவதற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டியதிருக்கும். எந்த ஒரு கல்வி நிறுவனம் குறித்தும் அந்தந்தக் கல்வி நிறுவனங்களின் இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இ-மெயில் மூலம் தேவையான சந்தேகங்களுக்கும் விளக்கம் பெறலாம். அந்தந்தப் பல்கலைக்கழக இணைய தளங்கள் மூலம் கல்வி உதவித் தொகை விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
கல்வி உதவித் தொகை விவரங்களை அளித்து வழிகாட்ட அரசு அமைப்புகளும் உள்ளன. எடுத்துக் காட்டாக, ஜெர்மனியில் உள்ள படிப்புகளைப் படிக்க, DAAD அமைப்பும், பிரிட்டனில் படிக்க பிரிட்டிஷ் கவுன்சில் அமைப்பும் மாணவர்களுக்கு உதவுகின்றன. இதேபோல மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் கல்வி உதவித் தொகை வழங்குகின்றன. இந்திய அரசு மூலம் வெளிநாடுகளில் படிக்கவும் கல்வி உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளன.
முதுநிலைப் படிப்பு மற்றும் ஆய்வுப் படிப்புகளுக்கு மாற்றாக, பணி அனுபவத்தையோ, குறுகிய காலப் பயிற்சியையோ கருத முடியாது. வெளிநாடுகளில் இளநிலை, முதுநிலை, ஆய்வுப் படிப்புகளைப் படித்தவர்களுக்கிடையே ஊதிய வித்தியாசம் குறைவுதான். முதுநிலைப் படிப்பையும் ஆய்வுப் படிப்பையும் படித்து தங்களது தகுதியை உயர்த்திக் கொள்வது எதிர்காலத்தை ஒளிமயமாக்க உதவும்.
கல்வித் திறனை வளர்த்துக் கொள்வதில் ஆர்வமிக்கவர்கள் தொடர்ந்து படியுங்கள். படித்து முடித்த பிறகு, சொந்த நாட்டில் படித்த கல்வி நிறுவனத்தை மறக்காதீர்கள். உங்கள் அனுபவத்தை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொள்வதன் மூலம், உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை மற்றவர்களுக்கும் கிடைக்கச் செய்ய முடியும். விவசாயக் குடும்பத்தில் பிறந்த நானே எனது குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரியாகி, வெளிநாட்டில் படித்து வேலை பார்க்க முடியும் என்றால் உங்களால் முடியாதா என்ன? முயற்சி திருவினையாக்கும்.”