24 November 2013

IIT-NIT பொது நுழைவுத் தேர்வு



ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்திய அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச்  சேர்ப்பதற்கான பொது நுழைவுத் தேர்வு குறித்த அறிவிப்பை இத்தேர்வை நடத்தும் மத்திய செகண்டரி கல்வி போர்டு (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ளது. இந்த நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் பிளஸ் டூ  தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பிளஸ் டூ படித்து வரும் மாணவர்களும் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

ஐடிக்களில் சேருவதற்காக நடத்தப்பட்டு வந்த ஐஐடி நுழைவுத் தேர்வுக்கும் என்ஐடி, ஐஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக நடத்தப்பட்டு வந்த அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வுக்கும் (AIEEE)பதிலாக பொது நுழைவுத் தேர்வு இந்தக் கல்வியாண்டில் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்தப் பொது நுழைவுத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும்.

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் தேர்வை குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே எழுத முடியும். என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பிஇ, பிடெக் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் மெயின் தேர்வின் முதல் தாளை (ஏஐஇஇஇ தேர்வில் முதல் தாளாக முன்பு இருந்தது) எழுத்துத் தேர்வாக எழுதலாம். கம்ப்யூட்டர் மூலமும் எழுதலாம். ஏப்ரல் 6-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை முதல் தாள் எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் தேர்வு ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பி.ஆர்க்., பி.பிளானிங் படிப்புகளில் சேருவதற்கான மெயின் தேர்வு இரண்டாம் தாளை (ஏஐஇஇஇ தேர்வில் இரண்டாம் தாளாக இருந்தது) காகிதத்தில் விடை எழுதும் எழுத்துத் தேர்வாக (Offline Mode)  மட்டும் எழுதலாம்.  இந்தத் தேர்வு ஏப்ரல் 6-ஆம் தேதி பிற்பகல் 2 மணியிலிருந்து 5 மணி வரை நடைபெறுகிறது.

மெயின் தேர்வின் முதல் தாளில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களிலிருந்து அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வுக்கு விடையளிக்க மூன்று மணி நேரம் அளிக்கப்படும். வினாத்தாள்கள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இருக்கும். இரண்டாம் தாளில் ஏற்கெனவே ஏஐஇஇஇ தேர்வில் இருந்தது போலவே கணிதம், ஆப்டிட்யூட் டெஸ்ட், டிராயிங் டெஸ்ட் ஆகியவற்றில் கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வுக்கும் விடையளிக்க மூன்று மணி நேரம் வழங்கப்படும். இந்த நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டமும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பிஇ, பிடெக் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இயற்பியல், கணிதம்  ஆகிய பாடங்களுடன் வேதியியல், பயோ டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரியல் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒரு பாடத்தை எடுத்துப் படித்திருக்க வேண்டும். இந்தப் பாடங்களில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பிஆர்க் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும். கணிதத்தில் 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். நுழைவுத் தேர்வு மதிப்பெண்களுடன் பிளஸ் டூ மதிப்பெண்களும் என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ரேங்க் பட்டியல் தயாரிப்பதில் கணக்கில் கொள்ளப்படும். அதாவது, மெயின் நுழைவுத் தேர்வுக்கு 60 மதிப்பெண்கள், பிளஸ் டூ தேர்வுக்கு 40 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படும். இதன் அடிப்படையில் மாணவர்கள் கவுன்சலிங்கிற்கு அழைக்கப்பட்டு என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் வழங்கப்படும். இந்தத் தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு மாணவர் சேர்க்கையை நடத்தும் கல்வி நிறுவனங்களும் பல உள்ளன.

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், 1989-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதியோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் 1984-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதியோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்திருக்க வேண்டும். செகண்டரி பள்ளிச் சான்றிதழில் உள்ளபடி பிறந்த தேதி கணக்கில் கொள்ளப்படும்.

2012-ஆம் ஆண்டிலோ அல்லது 2013-ஆம் ஆண்டிலோ பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். 2014-இல் பிளஸ் டூ தேர்வை எழுத இருக்கும் மாணவர்களும் இந்த நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். 2011-ஆம் ஆண்டிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்களும் 2015-ஆம் ஆண்டில் பிளஸ் டூ தேர்வு எழுத இருக்கும் மாணவர்களும் இத்தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். 2011-ஆம் ஆண்டில் பிளஸ் டூ தேர்வு எழுதி தேர்ச்சி பெறாமல், 2012-ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களும் இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்க முடியாது.

ஜேஇஇ மெயின் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். நவம்பர் 15-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

மெயின் தேர்வில் முதல் தேர்வை மட்டும் எழுதுகிறோமா அல்லது இரண்டாவது தேர்வை எழுதுகிறோமா அல்லது இரண்டு தேர்வுகளையும் எழுதுகிறோமா என்பதை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். அத்துடன், காகிதத்தில் எழுத்துத் தேர்வு எழுதுகிறோமா அல்லது கம்ப்யூட்டர் மூலம் தேர்வு எழுதுகிறோமா என்பதையும் குறிப்பிட வேண்டும். அதைப் பொருத்து கட்டணம் வேறுபடும்.

முதல் தாள் அல்லது இரண்டாம் தாளை மட்டும் எழுத்துத் தேர்வாக எழுத விரும்பும் பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவு மாணவர் களுக்குக் கட்டணம் ரூ.1,000. மாணவிகளுக்குக் கட்டணம் ரூ.500. தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் கட்டணம் ரூ.500. முதல் தாளை கம்ப்யூட்டர் மூலம் எழுத விரும்பும் பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்குக் கட்டணம் ரூ.600. மாணவிகளுக்குக் கட்டணம் ரூ.300. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் கட்டணம் ரூ.300.

முதல் தாளையும் இரண்டாவது தாளையும் சேர்த்து எழுத்துத் தேர்வாக எழுத விரும்பும் பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்குக் கட்டணம் ரூ.1,800. இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவிகளுக்குக் கட்டணம் ரூ.900. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் கட்டணம் ரூ.900. அதேபோல முதல் தாளை கம்ப்யூட்டர் தேர்வாகவும் இரண்டாவது தாளை எழுத்துத் தேர்வாகவும் எழுத விரும்பும் பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்குக் கட்டணம் ரூ.1,400. இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவிகளுக்குக் கட்டணம் ரூ.700. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் கட்டணம் ரூ.700.

 இந்தக் கட்டணத்தை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் செலுத்தலாம் அல்லது ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த பிறகு, சிண்டிகேட் வங்கி, கனரா வங்கி, ஐசிஐசிஐ வங்கிகளில் இ- செலான் மூலமும் கட்டணம் செலுத்தலாம்.

இந்த ஆண்டில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதனால், தபால் மூலம் எதையும் அனுப்ப வேண்டியிருக்காது. எனவே, இந்தத் தேர்வுக்கான தகவல் விவரக் குறிப்புகளை கவனமாகப் படித்து, தகுதி குறித்த விவரங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான விவரங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். புகைப்படம், கையெழுத்து, இடதுகை கட்டை விரல் ரேகை ஆகியவற்றை ஸ்கேன் செய்து (JPG)பார்மெட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர், ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். அத்துடன், ஸ்கேன் செயப்பட்டவற்றையும் அப்லோட் செய்ய வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் (அல்லது இ-செலான் மூலமும் கட்டணத்தைச் செலுத்தலாம்). விண்ணப்பத்தை அனுப்பியதற்கான ரசீதை
டவுன்லோடு செய்து பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். விண்ணப்பத்தில் தனது அல்லது பெற்றோரின் இ-மெயில் முகவரியையும் மொபைல் எண்ணையும் கொடுக்க வேண்டும். ஏனெனில், அவற்றின் மூலம்தான் தகவல்கள் அனுப்பப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 26-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இத்தேர்வு குறித்தும், விண்ணப்பிக்கும் முறைகள் குறித்தும் இணையதளத்தில் உள்ள விளக்கக் குறிப்பேட்டில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

விவரங்களுக்கு:  www.jeemain.nic.in