26 November 2013

வெளிநாடுகளில் படிக்க கல்வி உதவித்தொகை

ஜப்பானில் பயிற்சி பெற உதவித்தொகை
ஜப்பானில் உள்ள மிகப்பெரிய மின்னணுத் தொழில் நிறுவனமான ஹிட்டாச்சியில், இந்திய மாணவர்கள் உதவித்தொகையுடன் இலவசப் பயிற்சி பெறலாம். இந்த வாய்ப்பை, ‘இந்து’ நாளிதழுடன் இணைந்து ஹிட்டாச்சி நிறுவனம் வழங்குகிறது.

இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் குறைந்தபட்சம் பி.இ. அல்லது பி.எஸ்சி. (என்ஜினீயரிங்) பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். ஏதேனும் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் ஓர் ஆண்டு முன் அனுபவம் இருந்தால், கூடுதல் தகுதியாகக் கருதப்படும். அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி முப்பது வயதிற்குள் இருக்க வேண்டும்.  கடந்த ஆண்டுகளில் இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பித்தவர்கள், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம்.

ஹிட்டாச்சி நிறுவனத்தில் ‘இன்பர்மேஷன் அண்ட் டெலிகம்யூனிக்கேஷன் சிஸ்டம்ஸ்’, ‘பவர் சிஸ்டம்ஸ்’, ‘சோஷியல் இன்ப்ராஸ்ட்ரக்ச்சர் அண்ட் இண்டஸ்ட்ரியல் சிஸ்டம்ஸ்’, ‘டிரான்ஸ்போர்ட்டேஷன் கண்ட்ரோல் சிஸ்டம் என்ஜினீயரிங் (ட்ரென் மேனேஜ்மெண்ட் சிஸ்டம்)’ போன்ற ஏதேனும் ஒரு பிரிவில், அடுத்த ஆண்டு ஜூலையிலிருந்து ஆறு மாதங்கள் பயிற்சி மேற்கொள்ள முடியும்.

இந்த உதவித் தொகை பெற தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு விமான டிக்கெட், தங்குவதற்கான இடம், உணவு வசதிகள் போன்ற அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதுதவிர ஜப்பான் நாட்டிற்குள் மேற்கொள்ளப்படும் பயணச் செலவு மற்றும் சோந்தச் செலவுகளுக்கும் உதவித்தொகை அளிக்கப்படும்.

இந்த உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இந்தியாவில் உள்ள, ‘இந்து’ பத்திரிகையின் அனைத்து அலுவலகங்களிலும் கிடைக்கும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: டிசம்பர் 31, 2013.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி: THE HINDU - HITACHI TRAINING SCHEME, THE HINDU, 859 & 860, Anna salai, Chennai - 600 002.


டாக்டர் மன்மோகன்சிங் ஸ்காலர்ஷிப்
பிரதமர் மன்மோகன் சிங் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஜான் கல்லூரியில் டாக்டர் மன்மோகன்சிங் ஸ்காலர்ஷிப் திட்டத்தின்கீழ் அறிவியல், தொழில் நுட்பம், பொருளாதாரம் மற்றும் சமூக அறிவியல் பிரிவுகளில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளலாம். இந்த உதவித் தொகை பெறத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, படிப்புக் கட்டணம், போக்குவரத்து கட்டணம், மாதந்திர செலவுத் தொகை, பிரிட்டன்  செல்வதற்கு விசா கட்டணம் வழங்கப்படும்.

இந்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏற்கெனவே கருத்தரங்குகள், ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டிருப்பது விரும்பத்தக்கது. விமான பொறியியல் மற்றும் எரிசக்தித் துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்கு முன்பு பிரிட்டனில் படிக்காதவராகவும், பிரிட்டிஷ் அரசின் கல்வி உதவித்தொகை பெறாதவராகவும் இருக்க வேண்டும். வயது வரம்பு 35 வயதிற்குள் இருக்க வேண்டும். நன்கு ஆங்கிலம் பேசவும் எழுதவும் தெரிந்தவராக இருக்க வேண்டும். ஆராய்ச்சி வழிகாட்டுதலுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியரின் ஒப்புதல் பெற்றிருக்கும் பட்சத்தில் எளிதில் உதவித்தொகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இத்திட்டத்தின்கீழ் தேந்தெடுக்கப்படுகிறவர்கள் செப்டம்பர் அல்லது அக்டோபரில் தனது ஆய்வுப் பணியைத் தொடங்கலாம். இந்தக் கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் வருகிற ஜனவரி 15-ஆம் தேதிக்குள் பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விவரங்களுக்கு: www.admin.cam.ac.uk/students/gradadmissions/prospec/


ஆக்ஸ்போர்டு இந்திரா காந்தி பட்டப்படிப்பு உதவித்தொகை
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக உள்ள சோமெர்வெல்லி கல்லூரியில் மருத்துவ அறிவியல், தத்துவம், சர்வதேச நாடுகளுக்கான உறவு மற்றும் அரசியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பிரிவுகளில் இளநிலைப் பட்டப்படிப்பு படிக்க ஆக்ஸ்போர்டு இந்திரா காந்தி பட்டப்படிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் உதவி பெற விரும்பும் மாணவர்கள் இந்தியப் பல்கலைக்கழகங்களில் இளநிலைப் பட்டப் படிப்பைப் படித்திருக்க வேண்டும். இந்த உதவித் தொகை பெறும் மாணவர்களின் கல்லூரிக் கட்டணம், மாதாந்திரச் செலவுக்கான தொகை என மொத்தம் 13,726 யூரோக்கள் வழங்கப்படும். மாணவர்களின் படிப்புத் திறமையைப் பொருத்து உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்படும். பிரிட்டனில் படிப்பை முடித்தவுடன் இந்தியாவிற்கு வந்துவிட வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.1.2014. ஜனவரியில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் மார்ச் 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு: https://uni-of-oxford.custhelp.com/app/ask