எம்.பி.ஏ பைனான்ஸ் முடித்துவிட்டு அரசு வேலை தேடுகிறேன். வங்கிப் பணிக்கான தேர்வுகளில் வெற்றியடைய என்ன செய்யவேண்டும்?
வங்கி பணியைப் பொறுத்தவரை பெரும்பான்மையான பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் ஐ.பி.பி.எஸ். (Institute of Banking Personnel Selection) என்ற அமைப்பு மூலமாக எழுத்தர் (Clerk) மற்றும் வங்கி அலுவலர் (Probationary Officer) ஆகிய இரு பணிகளுக்குக்கான போட்டித் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் தேர்ந்தெடுக்கின்றன. இவை மட்டுமல்லாது இந்திய ரிசர்வ் வங்கியில் (Reserve Bank of India) உதவியாளர் மற்றும் Grade-B அலுவலர் பணிகளுக்கும் போட்டித் தேர்வு மூலமாகத் தேர்வுசெய்யப்படுகின்றனர். மேலும், வங்கி பணிகளில் பொறியியல், விவசாயம், சட்டம் மற்றும் கணினி பட்டதாரிகளுக்குப் பிரத்தியேகமாகச் சிறப்பு அலுவலர் (Specialist Officer) தேர்வும் நடத்தப்படுகிறது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி மட்டும் தனக்கான பணியாளர்களைப் பிரத்தியேகமாகத் தனித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கிறது.
மேற்கண்ட அனைத்து அலுவலர் நிலை (Officer Rank) தேர்வுகளுக்கும் தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் ஏறத்தாழ ஒன்றுதான். எழுத்தர் தேர்வில் எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற இரு நிலைகளிலும், அலுவலர்களுக்கான தேர்வில் முதல்நிலைத் தேர்வு, பிரதானத் தேர்வு, நேர்காணல் மற்றும் குழு விவாதம் என்ற நான்கு நிலைகளில் தேர்வு நடைபெறும்.
ரிசர்வ் வங்கி அலுவலர் தேர்வுக்கான தேர்வு முறை மட்டும் மேற்கண்ட தேர்வு முறைகளில் இருந்து சற்று வேறுபடும். எழுத்தர் மற்றும் வங்கி அலுவலர் ஆகிய இரண்டு தேர்வுகளுக்குமே குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக இளங்கலை பட்டப்படிப்பு அவசியம்.
வங்கித் தேர்வில் ஆங்கில மொழியறிவு, கணிதத் திறன், தர்க்கத் திறன் மற்றும் பொதுஅறிவு மற்றும் தற்கால நடப்புகள், கணினி அறிவியல் ஆகிய ஐந்து பகுதிகளில் கேள்விகள் கேட்கப்படும். வங்கித் தேர்வுக்குத் தயார் செய்ய பேங்கிங் சர்வீஸ் கிரானிக்கல் (www.bscacademy.com), பேங்கிங் டுடே ( www.bankexamstoday.com), பிரத்தியோகிதா தர்பன் (www.pdgroup.upkar.in) உள்ளிட்ட மாத இதழ்கள் உறுதுணையாக அமையும்.
இவை மட்டுமல்லாமல் சென்ற ஆண்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் விளக்கங்களை உள்ளடக்கிய சிறந்த புத்தகங்களும் சந்தையில் கிடைக்கின்றன. எழுத்துத் தேர்வில் தேறியவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுப் பொருளாதாரம், வங்கித் துறை தொடர்பான கேள்விகள், பொதுஅறிவு மற்றும் ஆளுமைத்திறன் ஆகியவை தொடர்பான கேள்விகள் கேட்கப்படும் நேர்காணலால் சோதிக்கப்படுவார்கள். அதன் தொடர்ச்சியாகக் குழு விவாதத்தில் பங்கேற்கச் செய்து அவர்களின் ஆளுமை மற்றும் தகவல் தொடர்புத் திறன் சோதிக்கப்படும்.
பிரதானத் தேர்வு, நேர்காணல் மற்றும் குழு விவாதம் ஆகிய மூன்று நிலைகளிலும் பெற்ற மொத்த மதிப்பெண் அடிப்படையில் இறுதியான தேர்ச்சிப் பட்டியல் தயாரிக்கப்படும்.
பெரும்பான்மையான வங்கித் தேர்வுகள் கணினி வழியாகவே ஆன்லைன் தேர்வாக நடத்தப்படுகின்றன.
தேர்வுக்கு நல்ல தயாரிப்பு அவசியம். புத்தகங்களைப் படிப்பது மட்டுமல்ல. புத்தகங்களில் உள்ள பயிற்சி வினாக்களுக்கு விடையளித்துப் பயிற்சி எடுப்பதுதான் மிகவும் முக்கியமானது.
ஏனெனில் தவறாக விடையளிக்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் மதிப்பெண் குறைக்கப்படும் என்பதை நினைவில் வையுங்கள்.வங்கித் தேர்வுகளைத் தமிழில் எழுத இயலாது.
மேலும் விவரங்களுக்கு, பார்க்க: - www.ibps.in
Thanks to : The Hindu Tamil