தன்னை தானே செல்ஃபி படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்து எல்லோரையும் லைக் போடச் சொல்வது. புரியுதோ, புரியலையோ கவனத்தை ஈர்க்கக்கூடிய எந்த விஷயமாக இருந்தாலும் நம்முடைய இணையதளம் பக்கத்தில் மட்டுமல்லாது நண்பர்களின் பக்கத்திலும் ஒட்டிவைப்பது.
தூங்கினால் ஒரு ஸ்டேட்டஸ், கண் விழித்தால் ஒரு ஸ்டேட்டஸ் என ரகளை பண்ணுவது. இப்படி கும்மாளம் அடிப்பதற்கான சகல வாய்ப்புகளும் அள்ளித் தருபவை சமூக வலைதளங்கள். அதே சமயம் தொழில் நிமித்தமாக ஒருவர் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளவும், உலக அளவில் உள்ள வெவ்வேறு வேலை வாய்ப்புகளைப் பற்றித் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும், ஆட்சேர்ப்புக்கும் பாலமாய் அமைகின்றன சமூக வலைதளங்கள்.
இன்று பல முன்னணி நிறுவனங்கள் லிங்க்டின், பேஸ்புக், டிவிட்டர், வியாடியோ, இன்ஸ்டாகிராம், பிஇண்ட்ரெஸ்ட், ஜிங், கூகுள் பிளஸ், பிரான்ச் அவுட் போன்ற சமூக ஊடக வலைதளங்களின் மூலம் தங்கள் நிறுவனத்துக்கான பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
சமீபத்தில் ஜாப்வைட் (jobvite) எனும் அமைப்பு வேலை தேடுபவர்களைப் பற்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. அதன்படி இன்று வேலை தேடுபவர்களில் 86 சதவீதத்தினர் பேஸ்புக், லிங்க்டின், கூகுள் பிளஸ், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், பி இன்ட்ரெஸ்ட் ஆகிய ஆறு இணையதள சமூக வலைத்தளங்களில் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். அவ்வாறு வேலை தேடியவர்களில் 76 சதவீதம் பேருக்கு பேஸ்புக் மூலமாக வேலை கிடைத்துள்ளது.
தங்கள் வேலைக்கான சான்றாதாரர் (referral) மற்றும் நல்ல பணியில் இருப்பவர்களோடு தொடர்பு கொள்ள லிங்க்டின் தளத்தை பயன்படுத்துகிறார்கள். வேலைத் தொடர்பான அறிவுரை மற்றும் உதவிகள் பெற பலர் டிவிட்டரை நாடுகிறார்கள். ஆனால் வேலை அளிக்கும் நிறுவனங்கள் எந்த இணையதளத்தை விரும்புகிறார்கள் என்பது முக்கியம் அல்லவா? 94 சதவீத நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான சரியான பணியாளரைத் தேர்ந்தெடுக்க லிங்க்டின் இணையதளத்தைத்தான் நாடுகிறார்கள்.
வேலைக்காக காத்திருப்பவர்கள் பெரு நிறுவனங்களின் கவனத்தை ஈர்க்க தன்விவரப் படிவத்தை கண்கவரும்படியாக ஒப்பனைகள் பூசி தயாரிப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அதே போன்று, வேலை அளிக்கும் நிறுவனங்களும் பணியாளர்களை கவர்ந்திழுக்க பல ஜாலங்கள் செய்கிறார்கள். அதில் குறிப்பிடத்தக்கவை, பேஸ்புக் மற்றும் யு டியூப் மூலம் செய்யும் வித்தைகள்.
ஒரு நிறுவனத்தின் சிறப்பைப் பறைசாற்ற ‘லைக்’களின் எண்ணிக்கையை முன்னிருத்துவது பேஸ்புக்கின் வழக்கம். அதே போல கம்பெனிகள் தங்களைப் பற்றிய வீடியோ பதிவுகளை வெளியிட யு டியூப் சைபர் வெளியில் இடமளிக்கிறது. அடுத்தகட்ட வளர்ச்சியாக ஸ்மார்ட் போன் மற்றும் டாப்லெட் மூலம் வேலைக்கு ஆள் எடுக்கும் நாள் கூடிய விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.