மனிதத் தொடர்பு அறிவுத் திறன் கொண்டவர்கள் மற்றவர்களோடு நல்ல நட்புறவு கொள்வார்கள். பிறர் உணர்வுகளை நன்கு புரிந்து கொள்வார்கள். பிறர் நம்பிக்கையைச் சம்பாதிப்பார்கள். ஒரு விஷயத்தை முன் நின்று நடத்தத் துணிந்து முன் வருவார்கள். இது ஒரு பிரத்தியேக அறிவுத்திறன் என உளவியல் நிபுணர் கார்டனர் கூறுகிறார். அதே நேரத்தில் அன்றாட வாழ்வில் அனைவரும் பயன்படுத்தும் திறனாகவும் இந்த மனிதத்தொடர்பு அறிவுத் திறன் விளங்குகிறது.
உதாரணத்துக்கு, ஒரு வீட்டில் கணவனும், மனைவியும் குடும்ப நிர்வாகம் குறித்துப் பேசிக் கொள்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அச்சூழலிலும் மனிதத் தொடர்பு அறிவுத் திறன் மிக அவசியம். “நீ சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளத் தயார், நான் சொல்வதை நீ காது கொடுத்துக் கேள்” என்பதுதானே கருத்துப் பரிமாற்றத்துக்கான அடிப்படை?
தனி ஒரு மனிதராக இருந்தாலும், பல மனிதர்கள் இணைந்த குழுவானாலும் தொடர்பு கொள்ள அடிப்படைத் தேவை மனிதத் தொடர்பு அறிவுத்திறன். இத்திறனை மேலும் மேலும் வளர்த்தெடுக்க முயற்சிப்பவர்களே புற உலகிலும், அக வாழ்விலும் வெற்றி பெறுகிறார்கள் என்கிறார் கார்டனர்.
உள்ளே இருக்கும் தலைவன்
இயல்பிலேயே சிலரிடம் மனிதத்தொடர்பு அறிவுத் திறன் மேலோங்கிக் காணப்படும். சிலரிடம் அது உள்ளே புதைந்திருக்கும். உங்களிடம் மனிதத் தொடர்பு அறிவுத் திறன் உள்ளதா என்பதை நீங்களே சோதித்துப் பார்க்கும் களம் இது. கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு ‘ஆம்’ சில நேரங்களில் ஆம் – சில நேரங்களில் இல்லை’, அல்லது ‘இல்லை’ ஆகிய ஏதோ ஒரு விடை அளிக்கவும். இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என யூகித்துக் குறிக்கக் கூடாது.
நீங்கள் தற்போது என்னவாக உள்ளீர்களோ உள்ளதை உள்ளபடி குறிப்பிடுங்கள். அதைப் பொருத்து உங்கள் மனிதத்தொடர்பு அறிவுத் திறன் எந்த நிலையில் உள்ளது, அதை மேலும் செழுமைப்படுத்த என்ன செய்யலாம் என்பதை விவாதிப்போம்.
1.எல்லாச் சூழலுக்கும் ஏற்ற மாதிரி உங்களைத் தகவமைத்துக் கொள்வீர்களா?
2.குழுவாகச் செயல்படுவது உங்களுக்குச் சவுகரியமற்றதாக இருந்திருக்கிறதா?
3.சிலருடன் மட்டுமே உங்களால் சகஜமாகப் பழக முடிகிறதா?
4.பிறர் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் துல்லியமாகக் கணித்ததுண்டா?
5.ஒரு சிக்கலை விட்டு வெளியேறப் பொய் சொன்னதுண்டா?
6.திடீரென யாரோ உங்களை மேடை ஏற்ற, அனிச்சையாக நல்ல சொற்பொழிவு ஆற்றியதுண்டா?
7.அன்னியர்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு செய்வதறியாது திகைத்ததுண்டா?
8.குழு கலந்துரையாடலில் பங்கேற்க முதல் ஆளாக நிற்பவரா?
9.அருகில் இருப்பவர் திடீரென்று உணர்ச்சிவசப்பட்டால் சூழலைக் கட்டுக்குள் கொண்டுவரத் திணறியதுண்டா?
10.உங்களோடு இருப்பவர்கள் உங்களை நம்பி ரகசியங்களைப் பகிர்ந்ததுண்டா?
11.மேடை பேச்சு என்றால் பயமா?
12.பிறர் சுவாரஸ்யமாக உணரும்படி உரையாற்றியதுண்டா?
13.தனிமை விரும்பியா?
14.மற்றவர்களுடைய தேவை உங்களுக்குத் தெரியுமா?
15.உங்களைப் புரிந்து கொள்வது கடினமா?
16.உங்களை முன்நிறுத்திக்கொள்ளத் தயங்குவீர்களா?
17.உணர்வுகளுக்கு முதலிடம் தருபவரா?
18.புதிதாய்ப் பழகியவரிடமும் சகஜமாகப் பழகியதுண்டா?
19.உங்கள் பிரச்சினையைப் பூதாகாரமாக நினைத்துக் கவலை கொள்வதுண்டா?
20.மற்றவர்கள் மீது அக்கறை இருக்கிறதா?
21.உங்கள் முடிவுகளில் தீர்க்கமாக இருப்பீர்களா?
22.குழுவாக எடுக்கும் தீர்மானத்தை ஏற்றுக் கொள்வீர்களா?
23.நீங்கள் சோகமாக இருக்கும் போது மகிழ்ச்சியாக இருப்பவர்களிடம் இருந்து விலகிச் செல்வீர்களா?
24.நான் சொல்வதற்கு அதிகம் இல்லை என எண்ணியதுண்டா?
பதில் கிடைத்தது!
1, 4, 6, 8, 10, 12, 14, 17, 18, 20, 21, 22 ஆகிய கேள்விகளுக்கு உங்கள் பதில் ‘ஆம்’ என்றால் நீங்கள் உறுதியாக மனிதத் தொடர்பு அறிவுத்திறன் படைத்தவர்தான். அரசியல்வாதி, கல்வியாளர், உளவியல் நிபுணர், மருத்துவர், மனித வள மேலாளர், மனநல ஆலோசகர், விற்பனையாளராகும் கூறுகள் உங்களிடம் பிரகாசமாக உள்ளன.
ஆம் என்றும் சொல்வதற்கில்லை, இல்லை என்றும் சொல்லிவிட முடியாது என்பது போன்ற குழப்பமான பதில் இருந்தால் நீங்கள் முதலில் உங்களை உற்றுக் கவனிக்க வேண்டும். மேலே குறிப்பிடப்பட்ட எண்களில் உள்ள கேள்விகளுக்கு ‘இல்லை’ என்ற பதில்தான் பெருவாரியாக அளித்திருந்தால் உங்கள் பலம் வேறு திறனாக இருக்கும் என்று பொருள்.
அதற்காகக் கவலை கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. ‘எந்தத் திறனையும் இது உயர்வு அது தாழ்வு எனப் பாகுபடுத்திப் பார்க்கக்கூடாது. பன்முக அறிவுத் திறன்கள் அத்தனையும் தன்னளவில் சமமானவையே’ என்பதுதான் கார்டனர் அறுதியிட்டுக் சொல்லும் கருத்து.
Thanks to : The Hindu | Daily
Thanks to : The Hindu | Daily