18 February 2014

பிரிட்டனில் படிக்க என்ன செய்யலாம்?

வெளிநாட்டிற்குச் சென்று உயர் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வம் இன்றைய இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. கூடவே, அதற்கான திட்டமிடல்களும், தேடல்களும் அதிகரித்து வருகின்றன. வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்று விரும்புபவர்களின் முதல் இரண்டு சாஸ்களில் அமெரிக்காவும், இங்கிலாந்தும் முக்கிய இடத்தில் உள்ளன. ஆண்டுக்கு சுமார் 4.30 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கற்பதற்காக பிரிட்டனுக்குச் செல்கிறார்கள். இதில் இந்திய மாணவர்கள் சுமார் 30 ஆயிரம் பேர்.

பிரிட்டனில் முதுநிலை பட்டப் படிப்பு படிக்க இந்திய மாணவர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருவதற்கு முக்கியமாக இரண்டு காரணங்களைக் கூறலாம். இந்தியாவைப்போல் அல்லாமல், அங்கு ஓராண்டு காலத்திற்குள் முதுநிலை பட்டப் படிப்பை முடித்துவிடலாம் என்பதே அதற்குக் காரணம். அத்துடன் பிரிட்டனில் தங்கி படித்துக் கொண்டிருக்கும்போதே பகுதி நேர வேலை பார்த்து, தங்களது அன்றாட வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்கும் அளவுக்கு சம்பாதிக்க முடியும் என்பதும் ஒரு காரணம். மிகச் சிறந்த பிரிட்டன் பல்கலைக்கழகங்களில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் பிரகாசமாக இருக்கும்.

இந்திய மாணவர்களின் ஆர்வத்துக்கு தீனி போடும் வகையில் பிரிட்டனைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் பங்கேற்கும் கல்விக் கண்காட்சி சென்னையில் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டு சென்னையில் நடந்த கண்காட்சியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று தங்களது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டனர்.

யுனிவர்சிட்டி ஆஃப் காலேஜ் பிர்மிங்காம், சிட்டி யுனிவர்சிட்டி லண்டன், பிபிபி யுனிவர்சிட்டி, ஆஸ்டன் யுனிவர்சிட்டி, யுனிவர்சிட்டி ஆஃப் ஈஸ்ட் லண்டன், யுனிவர்சிட்டி ஆஃப் கிரீன்விச் (லண்டன்), லிவர்பூல் ஹோப் யுனிவர்சிட்டி, லண்டன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் அண்ட் மேனேஜ்மெண்ட், நியூகேஸில் யுனிவர்சிட்டி, யுனிவர்சிட்டி ஆஃப் ரீடிங், குயின் மேரி யுனிவர்சிட்டி ஆஃப் லண்டன் உள்ளிட்ட 63 பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கல்வி நிறுவனங்களில் கற்பிக்கப்படும் படிப்புகள் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

ஆண்டுதோறும் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களில் எஜுக்கேஷன் யு.கே. கண்காட்சியை நடத்தி வருகிறோம். இங்கிலாந்து சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்து தருகிறோம். மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன? என்பது பற்றியெல்லாம் விளக்குகிறோம். பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் படிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கும் நாங்கள் உதவுகிறோம். IELTS  தேர்வுக்குத் தயாராகும் முறை பற்றியும் விளக்கமளிக்கிறோம்" என்கிறார் பிரிட்டீஷ் கவுன்சிலின் சர்வதேசக் கல்விச் சந்தைக்கான சீனியர் புராஜக்ட் மேனேஜர் (தென் இந்தியா) சோனு.

மாஸ் கம்யூனிக்கேஷன், கம்ப்யூட்டர் எடட் டிசைன், ஃபிலிம் அண்ட் டி.வி. புரடக்‌ஷன், மீடியா, டிசைன், டாகுமெண்டரி புரடக்‌ஷன்,  ஃபைன் ஆர்ட்ஸ், அக்ரிகல்ச்சுரல் மேனேஜ்மெண்ட், கிரிமினஸ் ஜஸ்டிஸ், அனிமல் கேர், சயின்ஸ் அண்ட் மேனேஜ்மெண்ட், மோட்டார் ஸ்போர்ட்ஸ் என்ஜினீயரிங், பர்பார்மிங் ஆர்ட்ஸ், டிராவல் அண்ட் டூரிஸம், ஸ்போர்ட்ஸ் ஜர்னலிசம், இன்டர்நேஷனல் மேனேஜ்மெண்ட், கிராபிக் டிசைன், அப்ளைடு பெட்ரோலியம் ஜியோசயின்ஸ், கண்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன், கன்ஸ்ட்ரக்ஷன் எக்கனாமிக்ஸ் அண்ட் மேனேஜ்மெண்ட், டிரக் டிக்கவரி அண்ட் டெவலப்மெண்ட் உள்ளிட்ட ஏராளமான பிரிவுகளில் ஆயிரக்கணக்கான படிப்புகள் பிரிட்டனிலுள்ள  பல்கலைக்கழகங்களில் கற்றுத் தரப்படுகின்றன.

பிரிட்டனிலுள்ள எந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கலாம் என்பதை முடிவு செய்வது, சம்பந்தப்பட்ட மாணவனின் வாழ்க்கையில் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் முடிவு. எனவே ஒரு பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முதலில் எஜுக்கேஷன் யு.கே. இணையதளத்துக்குச் சென்று பார்வையிடுவது நல்லது. ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் உள்ள படிப்புகள், வசதிகள் பற்றியெல்லாம் இதிலிருந்து அறிந்துகொள்ள முடியும். யு.கே. விசா மற்றும் இமிக்ரேஷன் இணையதளத்திற்குச் சென்று நீங்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துள்ள கல்வி நிறுவனம் பதிவு செய்யப்பட்டதுதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். உங்கள் ஊருக்கு அருகிலுள்ள பிரிட்டீஷ் கவுன்சில் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு இங்கிலாந்தில் படிப்பதற்கான வாய்ப்புகள், செலவுகள் போன்ற விவரங்களை அறிந்து கொள்ளுங்கள். பிறகு ஒரு தெளிவான முடிவை எடுக்கலாம்.

பிரிட்டனில் எம்.பி.ஏ. படிக்க விரும்பும் மாணவர்கள், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இளநிலைப் பட்டப் படிப்பையோ அல்லது முதுநிலை பட்டப் படிப்பையோ படித்து முடித்த மாணவர்கள் நேரடியாக எம்.பி.ஏ. படிப்பில் சேர முடியாது. பிரபலமான மேனேஜ்மெண்ட் கல்லூரிகளில் படிக்க விரும்பினால் அதற்கேற்றபடி கல்விக் கட்டணமும் அதிகமாக இருக்கும்.  படித்துக் கொண்டிருக்கும்போதே பகுதி நேர வேலை பார்த்து சம்பாதிக்கவும் முடியும்" என்கிறார் இங்கிலாந்திலுள்ள ஐ.இ.எஸ். அகாதெமியின் இயக்குநர் (தென் இந்தியா) டாக்டர். ஜார்ஜ் ஜோசப். கண்காட்சிக்கு வந்திருந்த அன்னபூரணி என்ற மாணவி, சென்னையில் எம்.எஸ்.டபிள்யூ முடித்தவர். இங்கிலாந்தில் பிஎச்.டி. படிப்புக்கான வாய்ப்புகள் பற்றி அறிந்துகொள்ள வந்திருந்தார்.

இங்கிலாந்தில் முழு நேர பிஎச்.டி. படிப்புக்கு  மூன்று ஆண்டுகள் ஆகும். பகுதி நேரப் படிப்புக்கு  5 ஆண்டுகள் ஆகும். பிஎச்.டி. படிப்புக்காக இங்கிலாந்து செல்பவர்கள், அங்கு பகுதி நேர வேலை பார்ப்பது சாத்தியமில்லை என்பதை தெரிந்துகொண்டேன்" என்கிறார் அன்னபூரணி.

பிரிட்டனில் இளநிலை பட்டப் படிப்பு படிக்க விரும்புபவர்கள், மேல்நிலைக் கல்வியில்  60 சதவீதத்துக்குக் குறையாத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். ஒரு சில  பல்கலைக்கழகங்கள் 75 முதல் 90 சதவீதம் வரை மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று நிர்ணயித்துள்ளது. அத்துடன் ஆங்கில மொழி அறிவை சோதித்தறியும் TOEFL அல்லது  IELTS தேர்வில் சிறப்பிடம் பெற்றிருக்கவேண்டும். IELTS தேர்வுக்குத் தயாராவதற்கு பிரிட்டீஷ் கவுன்சிலே பயிற்சியளிக்கிறது.

பிரிட்டனில் இளநிலை பட்டப் படிப்பு படிக்க ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரையும், முதுநிலை பட்டப் படிப்பு படிக்க ஆண்டுக்கு ரூ.13 லட்சம் வரையும் செலவு பிடிக்கும். தேர்ந்தெடுக்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் படிப்புக்கேற்ப இந்தக் கட்டணம் மாறுபடும்.  படித்துக் கொண்டிருக்கும்போதே பகுதி நேரமாக வாரத்துக்கு 20 மணி நேரம் வேலை பார்க்கலாம். அதில் கிடைக்கும் ஊதியத்தைக்கொண்டு தங்களது செலவுகளைச் சமாளித்துக்கொள்ள முடியும். மாணவர்களின் படிப்பு மற்றும் திறமைக்கேற்ப பல்வேறு ஸ்காலர்ஷிப்களும் கிடைக்கும். இங்கிலாந்துக்குப் படிக்கப் போகும் மாணவர்கள், அதுபற்றி ஓராண்டுக்கு முன்பே திட்டமிடுவது நல்லது. எதைப் படிக்கப் போகிறோம், எங்கு படிக்கப் போகிறோம் என்பதை முன்கூட்டியே முடிவு செய்துகொள்ள வேண்டும்.

பிரிட்டனில் செப்டம்பர் மாதத்திலிருந்துதான் கல்வியாண்டு தொடங்குகிறது. அதனால் அதற்கு முன்பே, ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலேயே படிக்கும் கல்லூரி, தேர்ந்தெடுக்கும் படிப்பு பற்றித் தீர்மானித்து விடவேண்டும். அத்துடன் ‘ஸ்டேட்மெண்ட் ஆஃப் பர்ப்பஸ்’ எனப்படும் சுயவிளக்கக் கடிதத்தையும் தயார்செய்ய வேண்டும். பிரிட்டன்  சென்று படிக்க விரும்பும் காரணத்தையும், குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தை, படிப்பைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன என்பதையும் அதில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். தவிர, நீங்கள் தற்போது படித்துக் கொண்டிருக்கும் பள்ளி அல்லது கல்லூரி முதல்வரிடமிருந்து ஒரு பரிந்துரைக் கடிதத்தையும் பெற்று அனுப்ப வேண்டும்" என்று டிப்ஸ் தருகிறார் லண்டனிலுள்ள கிங்ஸ்டன் பல்கலைக் கழகத்தின் சர்வதேச அதிகாரி எலினர் லூகர்.

மேலும் விவரங்களுக்கு: www.britishcouncil.in  /  www.educationuk.org/india / www.ielts.org  /  www.vfs-uk-in.com